கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான். (சங்கீதம் 126:5,6).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/koAY1R7cpwY
வேதத்தில் காணப்படுகிற நூற்றுஐம்பது சங்கீதங்களில் பதினைந்து சங்கீதங்கள் ஆரோகண சங்கீதங்களாய் காணப்படுகிறது. ஆரோகணம் என்பதற்கு ஏறுதல் என்று அர்த்தம், இந்த சங்கீதங்களின் தாளம் ஏறிக்கொண்டு போகும். எருசலேம் தேவாலயம் மலையுச்சியில் காணப்பட்டதால், பண்டிகை காலங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் இந்தப்பாடல்களைப் பாடிக்கொண்டு மலையின் மேல் ஏறி கர்த்தரைத் தொழுது கொள்ளுவது வழக்கம். ஆரோகண சங்கீதங்களைப் பாடிக்கொண்டு செல்லும்போது, தேவ பிரசன்னத்தோடு, உற்சாகமாய் சோர்வுகள் இல்லாதபடி எளிதாய் ஏறிவிடுவார்கள்.
மேற்குறிப்பிட்ட வசனத்தில் கண்ணீரை விதையோடு ஒப்பிட்டிருக்கிறதைப் பார்க்கமுடிகிறது. விதைகளைச் சுமந்து, அள்ளித்தூவி, தண்ணீர்ப்பாய்ச்சி அனேக நாட்கள் காத்திருப்பது ஒரு கண்ணீரின் அனுபவமாயிருந்தாலும், அறுவடையின் நாட்கள் வருகிறது, அரிக்கட்டுகளை அறுத்துச் சுமந்துகொண்டு சந்தோஷத்தோடும் கெம்பீரத்தோடும் திரும்பி வருகிற வேளைக் காணப்படுகிறது. நட ஒரு காலமுண்டு என்றால், நட்டதைப் பிடுங்க ஒரு காலத்தையும் கர்த்தர் வைத்திருக்கிறார். சாயங்காலத்தில் அழுகை காணப்படலாம், ஆனால் ஒரு விடியற்காலத்தைக் கர்த்தர் உனக்காக வைத்திருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு நானூறு வருட எகிப்தின் அடிமைத்தனமும், நாற்பது வருட வனாந்திர வாழ்க்கையும், அவர்களுக்குக் கண்ணீரின் நாட்களாய் இருந்தது, ஆனால் பாலும் தேனும் ஓடுகிற கானானைக் கர்த்தர் அவர்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார், அதில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்து மகிழப்பண்ணினார். யோசேப்பு குழியில் சகோதரர்களால் தள்ளப்பட்டதும், போத்திபாரின் வீட்டில் அடிமையாய் வேலை செய்ததும், காரணமில்லாமல் குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலையில் போடப்பட்டதும், பானபாத்திரக்காரனால் இரண்டு வருடங்கள் மறக்கப்பட்டதும் கண்ணீரின் அனுபவங்களாய் காணப்பட்டது, ஆனால் கர்த்தர் அவனை பார்வோனின் அடுத்த இடத்தில் உயர்த்தி ஆசீர்வதித்து மகிழப்பண்ணினார். அன்னாள் பிள்ளையில்லாதபடி அழுதுகொண்டிருந்தாள், அவள் சக்களத்தியினாலும் வேதனை, ஆனால் கர்த்தர் சாமுவேலையும் வேறு ஐந்து பிள்ளைகளையும் கொடுத்து கெம்பீரிக்கப் பண்ணினார். ரூத் தன் புருஷனை இழந்து விதவையாய் கண்ணீரோடு காணப்பட்டாள், ஆனால் கர்த்தர் அவளுக்கு போவசைப் புருஷனாய்க் கொடுத்து, ஓபேத்தை மகனாகக் கொடுத்து மகிழப்பண்ணினார்.
வேதவாக்கியங்களைப் பிரசங்கிப்பதும், மற்றவர்களுக்குச் சொல்லுவதும் கூட விதைப்பதற்குச் சமம். பிரயாசப்பட்டு விதைக்கப்படுகிற ஒரு வார்த்தை கூட வீணாய் திரும்பிவருவதில்லை. காரணம் கர்த்தருடைய வார்த்தையில் ஆவியும் ஜீவனும் காணப்படுகிறது. ஆகையால் சொல்லப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகள் செய்ய வேண்டியதைச் செய்து நிறைவேற்றிய பின்பே திரும்பும். விதைக்கிறவனைப் பற்றிய உவமையில் கூட, நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் முப்பது, அறுபது, நூறுமாகப் பலன்களைக் கொடுப்பதைப் பார்க்கமுடிகிறது. அதிக பிரயாசப்பட்டு விதைகளை விதைத்த பின்பு, ஒருவேளை பலன்களுக்காக அனேக நாட்கள் காத்திருக்கவேண்டியது வரலாம். ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காகக் காத்திருக்க வேண்டிய வேளைகள் காணப்படலாம். ஊழியங்களின் வளர்ச்சிக்காக அனேக வருடங்கள் காத்திருக்க வேண்டியது இருக்கலாம். ஆனால் பலன் நிச்சயமாய் வரும். உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள் மேல் போடு, அனேக நாட்களுக்குப் பின்பு அதன் பலனைக் காண்பாய் என்ற வார்த்தையின் படி நிச்சயமாய் கெம்பீரத்தோடு அறுவடைச் செய்யும்படி கர்த்தர் உங்களுக்கு அருள்செய்வார்.
கர்த்தருடைய பிள்ளைகளின் கண்ணீர் நிரந்தரமானதல்ல. உங்கள் பிரச்சனைகள், அதின் நிமித்தம் நீங்கள் விடுகிற கண்ணீர் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. உங்கள் மாராவைப் போன்ற கசப்பான காரியங்களுக்கு முடிவு உண்டு, உங்கள் வியாதிகள் என்றும் நிரந்தரமானதல்ல, ஆரோக்கியமான நீடித்த வாழ்வு உங்களுக்கு முன்பு காணப்படுகிறது. பற்றாக்குறை, தரித்திரம் நிரந்தரமானதல்ல, ஆசீர்வாதத்தின் நாட்கள் உங்களுக்கு முன்பாக காணப்படுகிறது. அதுவரைக்கும் கண்ணீரின் விதையை ஜெபமாய் விதைத்துக் கொண்டிருங்கள். நீங்கள் கெம்பீரமாய் அறுவடைச் செய்யப்போகிற நாட்கள் வெகுச் சீக்கிரமாய் வருகிறது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar