1 சாமு 15:22. அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/uihQkemaijU
கர்த்தர் சவுலிடம் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் சவுல், நலமான ஆடு மாடுகளை, அழித்துப்போடவில்லை. கர்த்தருடைய வார்த்தைக்கு சவுல் பாதி கீழ்ப்படிந்தான், அதாவது 50% கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தான். ஆனால், முழுவதுமாய் கீழ்ப்படிய தவறிவிட்டான். கீழ்ப்படிதல் தான் கனி என்று ஒரு ஊழியக்காரர் சொன்னார். நாம் கர்த்தருடைய வார்த்தைக்கு முழுவதுமாய் கீழ்ப்படியும்போது தான் கனிகொடுக்கிற வாழ்க்கை வாழமுடியும்.
தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் (எபி 10:7) என்ற வார்த்தையின்படி இயேசு முழுவதுமாய் தேவ சித்தத்திற்கு கீபடிந்தார். இயேசு இந்த உலகத்தில் மனிதனாக இருந்தபோது, இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார் (மத் 4:1) என்ற வார்த்தையின்படி ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு முழுவதுமாய் கீழ்ப்படிந்தார். இப்படி இயேசு நமக்கு முன்மாதிரியை வைத்து சென்றபடியினால், இயேசுவின் சிந்தையை தரித்தவர்களாய், நாம் அரைகுறையாக அல்ல, முழுவதுமாய் தேவனுக்கு கீழ்ப்படிய வேண்டும்.
நாம் வேலைக்காரர்கள், ஆகையால் நம் எஜமானுக்கு கீழ்ப்படிவோம். நாம் சத்துருவோடு போர்செய்யும் போர் வீரர்கள், ஆகையால் நம்முடைய இராணுவங்களின் தேவனுக்கு கீழ்ப்படிவோம். நாம் அப்பா பிதாவே என்றழைக்கும் புத்திர சுவிகாரத்தின் ஆவியை பெற்றிருக்கிறோம், ஆகையால் நம்முடைய தந்தைக்கு கீழ்ப்படிவோம். நாம் சகோதரர்கள், ஆகையால் நம்முடைய மூத்த சகோதரருக்கு கீழ்ப்படிவோம். நாம் முந்தின ஆதாமின் சுபாவம் உடையவர்களாய் இராமல், பிந்தின ஆதாமாகிய இயேசுவுக்கு கீழ்ப்படிவோம். பலிகள், காணிக்கைகள் எல்லாம் கீழ்ப்படிதலுக்கு அடுத்துள்ளவைகள். முதலாவது, தேவன் எதிர்பார்ப்பது கீழ்ப்படிதலுள்ள இருதயம் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
இஸ்ரவேலின் முதலாம் ராஜா கீழே தள்ளப்பட்டதற்கு முக்கியமான காரணம், அவனுடைய கீழ்ப்படியாமை. அவன் முழுமனதோடு கீழ்ப்படியவில்லை. இன்றைய அரசியல் சூழ்நிலைகளிலும் தலைவருக்கு தொண்டன் கீழ்ப்படியவில்லை என்றால், தொண்டனுக்கு பதவியும் கிடைக்காது, ஒன்றும் கிடைக்காது. அதுபோல தான், நாம் ஆண்டவருக்கு முழுவதுமாய் கீழ்ப்படியவில்லை என்றால், எப்படி ஆண்டவரிடம் நன்மைகளை சுதந்தரிக்க முடியும். என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? (லுக் 6:46) என்று ஆண்டவர் கூறுகிறார். நல்ல மேய்ப்பனாகிய இயேசுவின் சத்தத்திற்கு செவிகொடுக்கிற நல்ல ஆடுகளாய் நாம் காணப்படுவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org