அகித்தோப்பேலின் ஆலோசனை(The Counsel of Ahithophel).

அப்சலோமோடே கட்டுப்பாடு பண்ணினவர்களுடன்  அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று  தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது,  தாவீது: கர்த்தாவே,  அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான் (2 சாமு. 15:31).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/shvb4PPjvZs

அகித்தோப்பேல்,  இஸ்ரவேலின்  ராஜாவாகிய தாவீதின்  ஆலோசனைக்காரனாயிருந்தவன். அவன் சொல்லும் ஆலோசனைகள் தேவனுடைய வாக்கைப்போல இருந்தது. அவனுக்குள் தேவஞானம் அதிகமாய் காணப்பட்டது. ஆனால்,  தாவீதின் குமாரனாகிய அப்சலோம்,  தாவீதை  துரத்திவிட்டு எருசலேமை கைப்பற்றி ஆட்சி செய்ய துவங்கியவுடன்,  அகித்தோப்பேல் அப்சலோமோடு சேர்ந்துகொண்டான். அந்த வேளையில் தாவீது ஏறெடுத்த ஜெபமாய் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் காணப்படுகிறது. நீங்கள் நன்கு காணப்படும் போது உங்களுடைய நண்பர்களாகவும்,  ஆலோசனைக் காரர்களாகவும் திரளானவர்கள் காணப்படுவார்கள். ஆனால் நீங்கள் உபத்திரவங்கள் வழியாகக் கடந்து செல்லும் போது அவர்கள் வேறு நபர்களைத் தேடிச் சென்றுவிடுவார்கள். அரசியல் தலைவர்கள் செல்வாக்கோடு காணப்படும் போது,  திரளான நபர்கள் அவர்களோடு காணப்படுவதுண்டு,  செல்வாக்குகள் சரியும் போது செல்வாக்குள்ள மற்ற தலைவர்களோடு சேர்ந்து கொள்வார்கள். ஆகையால் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பாக ஆலோசனைக் கர்த்தராய் அவதரித்த இயேசுவை,  உங்கள் ஆலோசனைக் காரராக எப்பொழுதும் வைத்துக்கொள்ளுங்கள்,  அப்போது நீங்கள் அசைக்கப்படுவதில்லை.

அகித்தோப்பேல் தாவீதோடு காணப்பட்டாலும் அவனுடைய இருதயம் தாவீதோடு காணப்படவில்லை. தாவீது பத்சேபாளோடு பாவம் செய்து,  உத்தமமாய் தன்னை சேவித்த அவள் புருஷனாகிய உரியாவை கொலை செய்தான். பத்சேபாள் தகப்பன் பெயர் எலியாம் (2 சாமு. 11:3),  இவன் அகித்தோப்பேலின் குமாரன் என்று 2 சாமு. 23:34ல் எழுதப்பட்டிருக்கிறது ஆக பத்சேபாள் அகித்தோப்பேலின் பேத்தியானவள். தாவீது பாவம் செய்திருந்தும் நாத்தான் தீர்க்கதரிசி மூலமாய் கர்த்தர் அதை உணர்த்துவித்தவுடன்,  தன் பாவங்களை அறிக்கையிட்டு ம னம்திரும்பினான். ஆனால்  அகித்தோப்பேல்  பழிவாங்குவதற்காகக்  காத்திருந்தான். யூதாஸ் ஆண்டவரோடு கூட காணப்பட்டிருந்தும் அவரைக்  காட்டிக்கொடுக்கத்  தருணத்தை எதிர்பார்த்துக் காணப்பட்டதைப் போல,  அகித்தோப்பேல் ஒரு தருணத்திற்காய் காத்திருந்தான்.  அப்சலோம் மூலமாய் அந்த வேளை வந்தவுடன்,  அவனோடு சேர்ந்து,  தாவீதிற்கு விரோதமாய் எழும்பினான். உங்களோடு கூட காணப்படுகிற அத்தனை பேருடைய இருதயங்களும் உங்களோடு ஒருமித்துக் காணப்படுகிறது என்று நினைத்துவிடாதிருங்கள். புறாக்களைப் போலக் கபடற்றவர்களாகவும்,  சர்ப்பங்களைப் போல வினா உள்ளவர்களாகவும் காணப்பட வேண்டும் என்று வேதம் ஆலோசனைக் கூறுகிறது.

அப்சலோமோடு சேர்ந்த அகித்தோப்பேல்  இரண்டு ஆலோசனைகளை அவனிடம் கூறினான். முதலாவது,  வீட்டைக் காக்க  தாவீது  பின்வைத்த அவருடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிறவேசியும்,  அப்பொழுது உம்முடைய தகப்பனுக்கு  நாற்றமாகிப்போனீர்  என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு  உம்மோடிருக்கிற எல்லாருடைய கைகளும் பலக்கும் என்றான்.  அப்சலோம் அந்த துர்ஆலோசனைக்கு உடன்பட்டு தாவீதின் மஞ்சத்தில் ஏறினான். யாக்கோபு தன் குமாரனாகிய ரூபனை,  தண்ணீரைப்போல தளும்பினவனே,  நீ மேன்மை அடையமாட்டாய்,  உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்,  நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்,  என் படுக்கையின்மேல் ஏறினாயே என்று சொல்லி சபித்தான். அதுபோல அப்சலோமும் தேவனுடைய சாபத்தைச் சம்பாதிக்கிறவனாய் காணப்பட்டான். இரண்டாவது,  நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்து கொண்டு எழுந்து,  இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து,  அவன் விடாய்த்தவனும் கைதளர்ந்தவனுமாயிருக்கையில்,  நான் அவனிடத்தில் போய்,   அவனைத் திடுக்கிடப்பண்ணுவேன,  அப்போது  அவனோடிருக்கும் ஜனங்களெல்லாரும் ஓடிப்போவதினால்,  நான் ராஜா ஒருவனை மாத்திரம் வெட்டி,  ஜனங்களையெல்லாம் உம்முடைய வசமாய்த் திரும்பப்பண்ணுவேன் என்று கூறி தாவீதைக் கொலைசெய்வதற்கும் துணிந்துவிட்டான். ஆனால் அற்கியனாகிய ஊசாய்,  அப்சலோமிடம் நீர் தாமே உம்முடைய ஜனங்களோடு யுத்தத்திற்குப் போகவேண்டும்,  அப்பொழுது தாவீதையும் அவனுடைய எல்லா ஜனங்களையும் அழித்துவிடலாம் என்று இன்னொரு ஆலோசனையைக் கூறினான். அப்பொழுது  அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும், அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள், இப்படிக் கர்த்தர் அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணும் பொருட்டு,  அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை,  தாவீதின் ஜெபத்தைக் கேட்டு,  பயித்தியமாக்குவதற்குக் கட்டளையிட்டார். தன் ஆலோசனைகளை  அப்சலோம்  ஏற்றுக்கொள்ளாததினால் அகித்தோப்பேல் நான்று கொண்டு மரித்தான். கர்த்தருடைய பிள்ளைகளே,   உங்களுக்குப் பொல்லாப்பு செய்யவும்,  தீமைகள் செய்யவும் நினைப்பவர்களுடைய கரங்களிலிருந்து கர்த்தர் உங்களை தப்புவிப்பார். உங்களுக்கு விரோதமாய் கோள் சொல்லி,  உங்களை அழிக்க நினைப்பவர்களை,  அவர்கள் வெட்டின குழியில் அவர்களையே விழும் படிக்குக் கர்த்தர் செய்வார். நீங்கள் தாழ்த்தப்பட்ட இடங்களில் கர்த்தர் உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார். உங்கள் ஜெபங்களுக்குப் பதில் தருவார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar