ராஜாவும்,  தீர்க்கதரிசியும் (The king, and the prophet).

இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து,      வானத்தை நோக்கி அபயமிட்டார்கள்(2 நாளா. 32:20).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4WFtRp9Dz1w

ஆட்சியில் காணப்பட்ட எசேக்கியா ராஜாவும்,      கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவும் இணைந்து ஜெபிக்கிறதை பார்க்கமுடிகிறது. அசீரிய ராஜாவால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே  வந்து யூதாவுக்கு விரோதமாய் யுத்தம் செய்ய முற்றிகை போட்டு எசேக்கியாவிற்கு நிருபங்களை அனுப்பினான்.  எசேக்கியா நிருபத்தை வாங்கி வாசித்த பின்பு,        கர்த்தருடைய உதவியைத் தேட ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,       அவனும் ஏசாயாவும்   கர்த்தரை நோக்கி அபயமிட்டார்கள். பொதுவாக ஆட்சி அதிகாரத்தில் காணப்படுகிறவர்கள் ஊழியர்களோடு,      விசுவாசிகளோடு இணைந்து ஜெபிப்பதைப் பார்ப்பது அரிது. ஆகிலும் ரப்சாக்கே ஜீவனுள்ள தேவனை நிந்தித்து,      தூஷணமான வார்த்தைகளைக் கூறியதைக் கேட்டவுடன்,      கர்த்தருடைய தாசர்களாய் காணப்பட்ட இவர்களுக்குள் பக்தி வைராக்கியம் வந்தது,      அதினிமித்தம் இணைந்து ஜெபித்தார்கள். உடனே கர்த்தருடைய வார்த்தை ஏசாயா  தீர்க்கதரிசிக்கு வந்தது,      அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே  பயப்படா தேயும். இதோ,      அவன் ஒரு செய்தியைக் கேட்டு,      தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி,      அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதாக. கர்த்தருடைய வார்த்தை அப்படியே நிறைவேறினது.

இந்நாட்கள் கர்த்தருடைய பிள்ளைகளும்,      ஊழியர்களும் இணைந்து ஜெபிக்கிற நாட்களாய் காணப்படுகிறது. புருஷன் மனைவி இணைந்து குடும்பமாய் ஜெபியுங்கள்,      விசுவாசிகள் இணைந்து ஜெபியுங்கள். அல்லாமலும்,      உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே  ஒருமனப்பட்டிருந்தால்,      பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று மத். 18:19ல் ஆண்டவர் கூறியிருக்கிறார். இரண்டு பேர் ஒருமனப்பட்டு,      ஒரு காரியத்திற்காக ஜெபிக்கும் போது அங்கே மிகுந்த வல்லமை வெளிப்படுகிறது. ஒருவன் ஆயிரம் பேரையும்,      இரண்டு பேர் பதினாயிரம் பேரையும் துரத்துவார்கள் என்ற வசனத்திலிருந்து,      கர்த்தருடைய பிள்ளைகள் இணையும் போது அதிக வல்லமை வெளிப்படுகிறதை அறியமுடிகிறது.  அதற்குக் காரணம்,      இரண்டுபேராவது மூன்றுபேராவது இயேசுவின்  நாமத்தினாலே கூடும் பொழுது,      அங்கே அவர்கள் நடுவிலே இயேசு இருக்கிறார். ஆகையால் ஒருமனதோடு இயேசுவுடன் இணைந்து ஜெபிக்கும் போது,      அதற்குரிய பதில் உடன் வருகிறது. இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை,      கேளுங்கள்,      அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள் என்று யோவான் 16:24ல்; கர்த்தர் வாக்கு கொடுத்திருக்கிறார். இரண்டு பேர் மட்டும்தான் இணைந்து ஜெபிக்கவேண்டும் என்பதல்ல,      கர்த்தருடைய பிள்ளைகள் எத்தனை பேராய் காணப்பட்டாலும்,      நாம் ஒருமனதாகக் கூடி ஜெபிக்கும் போது,      கர்த்தர் நம்முடைய ஜெபங்களைக் கேட்டு பதில் தருவது உறுதி.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae