தகப்பனின் மிலாற்று (Father’s Rod).

2 சாமு 7:14. நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/fo8RtmtVtqI

பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது அன்பாகவும் பாசமாகவும் இருக்க வேண்டும். அதே வேளையில் பிள்ளைகளுக்கு எது சரி எது தவறு என்பதையும் சொல்லி தரவேண்டும். பிள்ளைகள் கீழ்ப்படியாதபட்சத்தில் அவர்களை கண்டிக்க தயங்கக்கூடாது. இந்நாட்களில் அநேக பெற்றோர்கள் செய்யும் தவறு, என் பிள்ளை கடைசிப்பிள்ளை, என் பிள்ளை எனக்கு செல்லப்பிள்ளை என்று சொல்லி, அவர்களை கண்டிக்காமல், ஏலியின் பிள்ளைகளை போல வளர்த்து, பின்பு பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்படி செய்துவிடுகிறார்கள். அநேக பெற்றோர்கள் இந்நாட்களில் தங்களுடைய சிறிய குழந்தைகளுக்கு விலை அதிகமுள்ள பொருட்களை வாங்கி கொடுக்கிறார்கள். ஆனால், அந்த பிள்ளைக்கோ, அந்த பொருளின் அருமை என்னவென்றே தெரியவில்லை. இவைகளெல்லாம் பிள்ளைகள் தவறிப்போக வழிவகுத்துவிடும். மேற்குறிப்பிட்ட வசனத்தில் ஆண்டவர் சொல்லுகிறார் நான் சாலொமோனுக்கு பிதாவாக இருப்பேன். ஆகையால், அவன் தவறு செய்யும்போது மிலாற்றினாலும் அடிகளினாலும் தண்டிப்பேன் என்று கூறுகிறார்.

பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும், அதே வேளையில் அவர்கள் பெற்றோர்களுடைய கரத்திற்குள் கட்டுப்பட்டு இருக்க வேண்டும். காற்றில் பட்டத்தை பறக்க விடும்போது, பட்டத்தின் நூல் நம்முடைய கரத்தில் இருந்தால் தான், அது பறந்துபோகாமல் இருக்கும். அதுபோல தான் தொலைக்காட்சியின் ரிமோட் முதற்கொண்டு பிள்ளைகளுக்கடுத்த காரியங்கள் எல்லாம், பெற்றோர்களின் கரத்திற்குள் இருக்க வேண்டும். அதேவேளையில் பிள்ளைகளை கண்டிக்கிறோம் என்று அவர்களை கோபப்படுத்தக்கூடாது. மற்ற நபர்கள் முன்பாக பிள்ளைகளை அதட்டவோ, திட்டவோ முயற்சிக்காதீர்கள். அது எதிர்வினையில் கொண்டுபோய் விடும். பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான் (நீதி 13:24). டீன் ஏஜ் என்று சொல்லப்படும் வயதிற்கு முன்பாக அதாவது பன்னிரண்டு வயது வரை பிரம்பை கையாளவேண்டும். அதற்கு மேற்பட்ட வயதில் கெட்ட குமரன் கிளம்ப தகப்பன் அனுமதித்ததுபோல, பிரம்பை கையாளுவதை விட்டுவிட வேண்டும்.

பிதாவாகிய தேவன் எப்படி பிரம்பை கையாளுகிறாரென்றால், முதலாவது, மனுஷருடைய மிலாற்றினால் கண்டிக்கிறார். அதாவது தவறிப்போகிற பிள்ளைகளுக்கு எதிராக சில துன்மார்க்கமான மனிதர்களை அனுமதித்து, அவர்களை சரியான வழியில் வரும்படி செய்கிறார். இரண்டாவதாக, மனுபுத்திரருடைய அடிகளினால், அதாவது, மனிதர்கள் பேசும் வார்த்தைகள் மூலம் சரிபடுத்துகிறார். தகப்பன் சிட்சியத்தை புத்திரன் உண்டோ? நல்ல தகப்பன் தன் பிள்ளையை சிட்சித்து நடத்துவான். அதுபோல தான், நம்முடைய தகப்பனும் மிலாற்றுகளினாலும், அடிகளினாலும் சிட்சிக்கிறார். ஆகையால், பெற்றோர்களும், பிள்ளைகளுக்கு அன்பு என்ற பெயரில் மிகவும் செல்லம் கொடுக்காமல், பிரம்பை கையாள வேண்டிய நேரத்தில், பிரம்பை எடுங்கள். அது பின்னாட்களில் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாகவே இருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org