பரிசுத்தவான்களுடைய சபைகள் (Churches of the saints).

தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல்,      சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்,      பரிசுத்தவான்களுடைய  சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது(1 கொரி. 14:33).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/GIhWunX5TcE

கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இன்னொரு பெயர் பரிசுத்தவான்கள் என்பதாய் காணப்படுகிறது. இயேசுவைப் பின்பற்றுகிற ஜனங்கள் பரிசுத்தமாய் காணப்பட வேண்டும் என்பதே அவருடைய நோக்கம். இயேசு பரிசுத்தராய் காணப்படுவதினால்,      அவரைப் பின்பற்றுகிற ஜனங்கள் எல்லாரும்  தங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாய் காணப்பட வேண்டும். பரிசுத்தமில்லாமல் இயேசுவை யாரும் தரிசிக்கமுடியாது. நாம் பரிசுத்தமாய் வாழ்வதற்காய் இயேசு தன்னுடைய சொந்த இரத்தத்தைக் கல்வாரிச் சிலுவையில் ஊற்றிக் கொடுத்தார். இரத்தம் சிந்தி சபையைக் கிரயத்திற்குக் கொண்டதின் நோக்கமும் பாவத்தோடு சபைகளுக்கு வருகிறவர்கள் கூட,      சில நாட்களில் பரிசுத்தவான்களாய் மாறவேண்டும் என்பதற்காக. ஆகையால் நாம் பரிசுத்தமாய் வாழ்வதே கர்த்தருடைய சித்தம் என்பதையறிந்து,      அதற்காய் பிரயாசப்படுங்கள். 

இந்தப் பூமியில் சபைகளைக் கர்த்தர் கொடுத்ததும் பரிசுத்தவான்கள் கூடிவருவதற்காக என்பதை அறிந்து கொள்ளவேண்டும். இஸ்ரவேல்  ஜனங்களுக்குக் கர்த்தர் புளிப்பில்லா அப்பப் பண்டிகையைக் கொடுத்து,      புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் அவர்கள் புசிக்க வேண்டும்,      அவர்கள் எல்லைக்குள் எங்கும் புளித்தமா காணப்படவேண்டாம் என்று   கட்டளைக் கொடுத்தார். புளிப்பு என்பது பாவத்திற்கு அடையாளமாய் காணப்படுகிறது. புளிப்பு கர்த்தருடைய பிள்ளைகள் கூடிவருகிற சபைகளின் எல்லைகளில் கூட காணப்படலாகாது. இந்நாட்களில் சபைகளில் ஒழுங்கீனங்கள் காணப்படுகிறது. உலகத்தின் காரியங்கள் சபைகளுக்குள் வந்து விட்டது. சீயோனின் சபைகள் கூட பாபிலோனிய சபைகளாய் மாறிக் கொண்டு காணப்படுகிறது.  இஸ்ரவேல் சபையில் மாம்சீக பாவத்தைக் கண்டவுடன் பினகாஸ்  வைராக்கியங் கொண்டு எழும்பி சபையைப் பரிசுத்தப் படுத்தினான்.  அவர்களுக்குள் பாவத்தை விதைக்க ஆலோசனைக் கொடுத்த பிலேயாம் என்ற கூலிக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசி பட்டயத்தினால் கொல்லப்பட்டான். பின்னாட்களில் அவர்களுக்குள் பாவத்தை விதைத்த ஆகாப் ஏசபேலின்  குடும்பத்திற்கு  யெகூ நீதிசெய்தான். கர்த்தருடைய வீட்டைக் குறித்த பக்தி வைராக்கியம் தாவீதையும்,      இயேசுவையும் பட்சித்தது என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே,      உங்களையும் நீங்கள் ஆராதிக்கக் கூடிவருகிற இடங்களையும் பரிசுத்தமாய் காத்துக் கொள்ளுவது உங்கள் கடமை என்பதை மறந்து விடாதிருங்கள்.

தேவ ஜனங்கள் சபைகளில் கர்த்தருக்கென்று செய்கிற  சகல காரியங்களில் கூட  ஒழுங்கும்,      கிரமமும் காணப்பட வேண்டும். அவைகள் ஒலி அமைப்பாகக் காணப்பட்டாலும்,      நேரடி ஒளிபரப்பாகக்  காணப்பட்டாலும்,      உபகரணங்களைக் கையாள்வதாகக் காணப்பட்டாலும்,      பாடல் ஊழியங்கள்,      இசை ஊழியங்கள்,      சிறுவர் ஊழியங்கள் எதுவாய்  காணப்பட்டாலும் எல்லாம் நேர்த்தியாகவும் பரிசுத்தமாகவும் காணப்பட வேண்டும். ஆவிக்குரிய    காரியங்களிலும்,      கிருபை வரங்கள் வெளிப்படும் வேளையிலும் கூட கர்த்தர் ஒழுக்கத்தை எதிர்பார்க்கிறார். நீங்கள் கூடிவந்திருக்கிறபோது,      உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான்,      ஒருவன் போதகம் பண்ணுகிறான்,      ஒருவன் அந்நிய பாஷையைப் பேசுகிறான்,      ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்,      ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான்,      சகலமும்  பக்திவிருத்திக்கேதுவாகச்  செய்யப்படவேண்டும் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் நம்முடைய சபைகள் கூட பரிசுத்தவான்கள் கூடிவருகிற சபை என்று அழைக்கப்பட பிரயாசப்படுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae