1 நாளா 22:7,8 சாலொமோனை நோக்கி: என் குமாரனே, நான் என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என் இருதயத்தில் நினைத்திருந்தேன். ஆனாலும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ திரளான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைப் பண்ணினாய்; நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தப்பண்ணினாய்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/t_p4qJmJb20
தாவீதின் விருப்பம் தேவனுக்கென்று ஆலயத்தை கட்ட வேண்டும். ஆனால், தேவனின் விருப்பம் தாவீதின் குமாரன் சாலொமோன் தேவனுக்கென்று ஆலயத்தை கட்ட வேண்டும் என்பதாய் இருந்தது. சரி, ஆண்டவர் சாலொமோனை ஆலயத்தை கட்ட சொல்லிவிட்டார், எனக்கும் வயதாகிவிட்டது, நான் வீட்டில் அமர்ந்து இளைப்பாறும் காலம் வந்துவிட்டது என்று தாவீது முடங்கிப்போகவில்லை. உலகத்தில் செய்யப்படும் வேலைக்கு வயது வரம்பு காணப்படுகிறது. ஆனால் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு அடுத்த காரியங்களை செய்வதற்கு வயது வரம்பு இல்லை. இதற்கு தாவீது மிகச்சிறந்த உதாரணம்.
ஆண்டவருடைய தீர்மானம் வேறுவிதமாக இருந்தாலும், தாவீது ஆலயத்துக்கு தேவையான எல்லா பொருட்களையும் சவதரித்தான். அவனுடைய வயது ஆண்டவருக்காக செயல்படுவதை தடுக்கமுடியவில்லை. வயது ஆகும் போது, உடலில் சோர்வு வருவது இயல்புதான். ஆனால் அதை காரணம்காட்டி ஆண்டவருக்காக ஒன்றும் செய்யாமல் இருந்துவிடக்கூடாது. வேதாகமத்தில் அநேகர் வயதான காலத்தில் ஆண்டவருக்காக வைராக்கியத்தோடு செயல்பட்டார்கள். ஆண்டவர் பேழையை செய்ய நோவாவை அழைத்தபோது அவனுக்கு 500 வயதை தாண்டிவிட்டது. ஆண்டவர் ஆபிரகாமை அழைத்தபோது அவனுக்கு வயது 75. இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க ஆண்டவர் மோசேயை அழைத்தபோது அவனுக்கு வயது 80. அன்னாள் என்னும் விதவை 84வது வயதில் ஆலயத்தில் இரவும் பகலும் ஜெபித்துக்கொண்டிருந்தாள். முதிர்வயதிலும் பவுல், தன்னுடைய மிஷினரி பயணத்தை தொடர்ந்தான். மரணத்திற்கு சற்று முன்பு தான் மோசே உபாகம புஸ்தகத்தை எழுதினான். மரணத்திற்கு சற்று முன்பு தான் பவுல் பிலிப்பியர் நிருபத்தை எழுதினான். யோவான் 90 வயது இருக்கும்போது தான் வெளிப்படுத்தல் விசேஷத்தை எழுதினான்.
இப்படி தாவீது முதிர்வயதானபோது சாலொமோனை இராஜாவாக தன்னுடைய ஸ்தானத்தில் நிறுத்தி, ஆலயத்துக்கடுத்த காரியங்களை செய்துகொண்டிருந்தான். ஆண்டவர் தாவீதை ஆலயம் கட்ட கூடாது என்று சொன்னது, தாவீதின் மேல் உள்ள அக்கரையில் தான் சொன்னார். இருந்தாலும், தாவீது தன்னுடைய நேரத்தை முதிர்வயதிலும் வீணாக்கவில்லை. நாம் இந்த உலகத்தில் வாழப்போவது கொஞ்சகாலம் தான். இந்நாட்களில் கர்த்தருக்காக வேலை செய்ய தவறிவிட்டால், இந்த உன்னதமான பணி செய்ய மறு வாய்ப்பு நமக்கு கிடைக்காது. இந்த உலகத்தில் நாம் செய்யும் மிகப்பெரிய பணி, சபை இல்லாத இடங்களில் சபையை நிறுவுவதே ஆகும். எங்கெல்லாம் சபை நிறுவப்படுகிறதோ, அங்கெல்லாம் கர்த்தர் ஆசீர்வாதத்தை கட்டளையிடுவார். சபைகட்ட தாவீது செயல்பட்டதுபோல, எந்த வயதில் நாம் இருந்தாலும், இன்னும் சபைக்கட்டுமான பணியில் அதிகமாக இணைத்துக்கொள்ளுவோம். பிர 9:10 கூறுகிறது, செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே என்பதாக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org