நீதிமான் செழிப்பான் (The Righteous shall flourish).

நீதிமான் பனையைப்போல் செழித்து,      லீபனோனிலுள்ள  கேதுருவைப்போல் வளருவான் (சங். 92:12).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/gErO76JmMvY

துன்மார்க்கர்களும்,     அக்கிரமக்காரர்களும் கூட செழிப்பார்கள்,     ஆனால் அவர்கள் செழிப்பு தற்காலிகமானது,     நிலையற்றது,     துரிதமாய் அழிந்து,     காணாமல் போய்விடுவார்கள் (சங். 92:7). நாபால்  மகாபாரிக்  குடித்தனக்காரனாயிருந்தான்,     அவனுக்கு மூவாயிரம் ஆடும்,     ஆயிரம் வெள்ளாடும் இருந்தது,     மிகுந்த ஐசுவரிய வானாகக் காணப்பட்டான். ஆனால் அவன் முரடனும்,     துராகிருதனும்,     பேலியாளின் மனுஷனும்,       பயித்தியக்காரனாகவும்,     விருந்தோம்பல் இல்லாதவனாகவும் காணப்பட்டான். திடீரென்று ஒருநாள் அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து,       கல்லைப்போலாகி,     பத்து நாட்களுக்குள் மரித்து அழிந்து போனான்.  நீதிமான்கள் பேரீச்சை என்ற பசுமையான பனைமரம் போலச் செழித்து ஓங்கி வளருவார்கள். பனைமரம் எல்லா காலநிலையிலும் வளரும்,     வனாந்தரத்தில் கூட அது நேராக வளர்ந்து பசுமையாகக் காணப்படும். நீதிமான்களுடைய நம்பிக்கை கர்த்தராகக் காணப்படுவதினால்,      அவர்கள் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும்,     கால்வாய் ஓரமாகத் தன்வேர்களை விடுகிறதும்,     உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும்,      மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப் போலிருப்பார்கள். நீதிமான்கள் பனையைப் போல செழிப்பது மாத்திரமல்ல,     கேதுரு மரத்தைப் போலக் கம்பீரமாகவும்,     அழகாகவும்,     ஆயுள் அதிகமாகவும்,     அழிவில்லாதவர்களுமாய் கூட காணப்படுவார்கள்.  அவர்கள் சந்ததிகள் கூட நீடித்து வாழ்ந்து செழித்திருப்பார்கள். தாவீது தன்னைக் குறித்துக் கூறும்போது,     நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான  ஒலிவமரத்தைப்போலிருக்கிறேன்,     தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன் என்றான். 

கர்த்தருடைய பிள்ளைகள்,     நீதிமான்களாய்,     நேர்மையானவர்களாய் காணப்பட வேண்டும். நம்முடைய சுய நீதிகள் எல்லாம் அழுக்கான கந்தையாயும்,     குப்பையாயும் காணப்படுகிறது. நாம் சுயமாய் நீதிமான்களாய் காணப்பட முடியாது.  நாம் இயேசு கிறிஸ்துவுக்குள்  தேவனுடைய நீதியாகும் படிக்கு,     பாவம் அறியாத அவரை,     பிதாவாகிய தேவன் நமக்காகப் பாவமாக்கினார். ஆகையால்தான்  இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் நீதியினால் மட்டும் நாம் நீதிமான்களாய் காணப்பட முடியும். நாம் மனந்திரும்பி,     இயேசுவின்  இரத்தத்தினால்  பாவங்களறக் கழுவப்பட்டு,     பழைய மனுஷனை ஞானஸ்நானத்தின் மூலமாய் அடக்கம் செய்து,     புது சிருஷ்டியாய் வாழும் போது,     கர்த்தருடைய கண்கள் நம்மை நீதிமான்களாய் பார்க்கும். அதன்பின்பு,     எல்லா அநீதிகளுக்கும் விலகி,     நீதிக்குரிய காரியங்களை மாத்திரம்   செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஜீவியம் செய்யும் போது நீங்கள் பனையைப்போல் செழித்து,     லீபனோனிலுள்ள  கேதுருவைப்போல் வளருவீர்கள். உங்கள் கொடிகள் சுவரின் மேல் படரும்படிக்குக் கர்த்தர் செய்வார். நீங்கள் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு,     காலத்தில்   கனியைத் தந்து,     இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பீர்கள்,     நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae