அழிந்துபோகிறவர்களை விடுவிக்கக்கூடுமானால் விடுவியுங்கள் (Rescue the perishing).

மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்ளையும்,     கொலையுண்ணப் போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி (நீதி. 24:11).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/39XN8Gm8j9E

நம்மைச் சுற்றி நடக்கிற காரியங்களைக் கண்டும் காணாதவர்கள் போல தேவ ஜனங்கள் காணப்படலாகாது.  நீதிகள் புரட்டப்படும் போதும்,     எளியவர்கள் ஒடுக்கப்படும் போதும்,     பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படும் போதும்,     விதவைகளும் திக்கற்றப் பிள்ளைகளும் நெருக்கப்படும் போதும் எனக்கென்ன என்று ஒதுங்கி விடக் கூடாது.  மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களைக் கூட விடுவிக்கக்கூடுமானால் விடுவிக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. ஒருவேளை நாம் அதை அறியோம் என்போமென்றால்;,     இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன்  கிரியைக்குத்தக்கத்தாக பலனளியாரோ? என்று நீதி.24:12 கூறுகிறது. ஆகையால் சிறுமைப் பட்ட ஜனங்களை விடுவிக்கிறவர்களாய் காணப்படுங்கள்.

எஸ்தர்,     நூற்றிருபத்தேழு நாடுகளை அரசாண்ட அகாஸ்வேரு ராஜாவின் மனைவியாய் காணப்பட்டவள். ஒருநாள் தன் குல ஜனங்கள் எல்லாரையும் ஒரே நாளில் சங்கரிக்க,     ஆமானின் சதித்திட்டத்தினால் சட்டம் நிறைவேற்றப்பட்டதை அறிந்தாள். ராஜாவின் சமூகத்தில் கடந்து சென்று அதை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றால் அழைக்கப்படாதபடி யாரும் பிரவேசிக்கமுடியாது. இந்த இக்கட்டான சூழ்நிலையில்,     சட்டத்தை மீறி,     ராஜாவின் சமூகத்தில் நான் என் ஜனங்களுக்காகப் பிரவேசிப்பேன்,     நான் செத்தாலும் சாகிறேன் என்று புறப்பட்டுச் சென்றாள். என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும்? என்ற எண்ணம் அவளுடைய இருதயத்தில் காணப்பட்டது.  ராஜாவின் கண்களில் அவளுக்குத் தயை கிடைத்தது. ஆகையால் தன் ஜனங்களுக்காக அவரிடம் பரிந்து பேசி,     அவர்களை மரணத்தினின்று விடுவித்தாள்.

கர்த்தருடைய பிள்ளைகளே,     நம்மைச் சுற்றி கோடிக்கான ஜனங்கள் ரட்சிக்கபடாதபடிக்கும்,     சிலுவையில் இயேசு சிந்தின இரத்தத்தினால் பாவங்களறக் கழுவப்படாதபடிக்கு,     இயேசுவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாதபடிக்கு காணப்படுகிறார்கள். சாத்தான் அனேகருடைய மனக் கண்களைக் குருடாக்கி வைத்திருக்கிறான். ஒருவன் கிறிஸ்துவுக்குள் காணப்படாதபடி மரித்தால் அவன் தன்னுடைய நித்தியத்தை,     பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்ட அக்கினி கடலில் கழிக்க வேண்டியதுதான். அப்படிப்பட்ட ஜனங்களை உங்களால் விடுவிக்கக் கூடுமானால் விடுவியுங்கள். அவர்களை நித்திய மரணத்தினின்று விடுவித்து,     நித்திய ஜீவனுக்குள்ளாய் நடத்த அனுதினமும் பிரயாசப்படுங்கள். நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து,     சிலருக்கு இரக்கம் பாராட்டி,     சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு,     பயத்தோடே இரட்சியுங்கள் என்று யூதா 1:22 கூறுகிறது.   ஆத்தும இரட்சிப்பு விலையேறப் பெற்றது,     ஆத்துமாக்களை ஆதாயம் செய்கிறவர்கள் ஞானமுள்ளவர்கள். அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள்  நட்சத்திரங்களைப்போலத் தேவனுடைய ராஜ்யத்தில் சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நட்சத்திரமாய் நீங்கள் காணப்படக் கர்த்தர் உங்களுக்குக் கிருபை பாராட்டுவார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae