நெகே 8:18. முதலாம் நாள் தொடங்கிக் கடைசிநாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளோவெனில், முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4iT1iYwe1zk
வேதாகமத்தை 50 முறை படித்தவர்களும், 100 முறை படித்தவர்களும், எப்பொழுதும் வேதாகமத்தை படித்துக்கொண்டே இருக்கிற மேகம் போன்ற திரளான சாட்சிகள் நமக்கு காணப்படுகிறார்கள். பயபக்தியோடு முழங்காலில் நின்று வேதத்தை படிக்கிறவர்களும் உண்டு. ஆகையால், அவ்வப்போது வேதத்தை எடுக்கிறவர்களாகவும், வாரத்தில் ஆறு நாள் மாத்திரமல்ல, வாரத்தில் ஏழு நாளும், ஒரு நாள் தவறாது, தினம்தினம் வேதத்தை வாசிக்க வேண்டும். வேதத்தை வாசிப்பதோடு நின்றுவிடாமல் ஆடு மாடுகள் அசைபோடுவதுபோல, வசனத்தை அசைபோடுகிறவர்களாக நாம் காணப்பட வேண்டும். வேதத்தை வாசிப்பது 30 நிமிடமோ, 1 மணிநேரமோ இருந்தாலும், இரவும் பகலும் வேதத்தை தியானிக்க வேண்டும் என்று முதல் சங்கீதத்தில் நாம் வாசிக்கிறோம். மரியாள் வார்த்தையை தன்னுடைய இருதயத்தில் வைத்துக்கொண்டாள் என்று வேதம் கூறுகிறது.
நெகேமியா 8ஆம் அதிகாரத்தில் வேதாகமத்தை ஜனங்கள் எப்படி வாசித்தார்கள் என்று பார்க்கலாம். முதல் வசனத்தில் அவர்கள் ஒருமனப்பட்டுக் கூடியிருந்தார்கள். இனம், மொழி, பாகுபாடெல்லாம் களைந்து வேதத்தை, சபையாய் வாசிக்கும்போது ஒருமனம் வேண்டும். 3ஆம் வசனத்தில் வேதத்திற்கு ஜனங்கள் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள். வேத வசனத்தை கேக்கும்போது ஏனோதானோ என்றும், எனக்கு எல்லாம் தெரியும் என்ற மனப்பான்மையும் நமக்கு இருக்க கூடாது. 5ஆம் வசனத்தில் பயபக்தியோடு ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள். கர்த்தருடைய வசனத்திற்கு நடுங்குகிறவர்களை கர்த்தர் நோக்கி பார்க்கிறார். 6ஆம் வசனத்தில் ஆண்டவரை தொழுதுகொள்ளுகிறார்கள். குனிந்து, முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள் என்று வசனம் கூறுகிறது. 7,8ஆம் வசனங்களில் வேதாகமத்தை நன்றாக விளங்கப்பண்ணினார்கள். 9ஆம் வசனத்தில் ஜனங்கள் வேதாகமத்தை வாசித்தபோது குத்தப்பட்டு அழுதார்கள். 10ஆம் வசனத்தில் மகிழ்ச்சியாய் இருந்தார்கள். வேதத்தை வாசிக்கும்போது நமக்குள்ளாக மகிழ்ச்சி பொங்கும். 12ஆம் வசனத்தில் கேட்ட வார்த்தையை பகிர்ந்து கொடுத்தார்கள். 17ஆம் வசனத்தில் வேதாகமத்தை வாசித்து யோசுவாவின் நாட்களை போல ஆதிநிலைக்கு கடந்து சென்றார்கள். நாம் ஆதிநிலைக்கு நேராக திரும்ப வேண்டும். கடைசியாக 18ஆம் வசனத்தில் அவர்கள் தினம்தினம் வேதத்தை வாசித்தார்கள். நாமும் ஒவ்வொருநாளும் வேதத்தை வாசிப்போம், அசைபோடுவோம். அப்பொழுது கர்த்தர் வசனத்தை கொண்டு உங்களை சுகமாக்குவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org