அஸ்திபாரங்கள்(Foundations).

அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே,     நீதிமான் என்னசெய்வான்? (சங். 11:3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/zIpuI64qgNM

மேற்குறிப்பிட்ட அஸ்திபாரம் என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தம் சமூகம் மற்றும் சிவில் ஒழுக்கத்தை பற்றியதாகும். ஒரு கட்டிடத்திற்கு அஸ்திபாரம் மிகவும் முக்கியமானது,     அதுபோல   தேசத்திற்கும்,       சமுதாயத்திற்கும்,     சபைக்கும் நல்லொழுக்கம் என்பது மிகவும் முக்கியமானது.  ஒழுக்கக்கேடுகள் ஜனங்களை வீழ்ச்சிக்கும்,     அழிவிற்கும் நேராகக் கொண்டு செல்லும். இந்நாட்களில் காணப்படுகிற   தலைவர்களின் பாவவாழ்க்கை,     தேசத்தின் குடிகளைப்  பாவத்திற்கு நேராக நடத்துகிறது. போதகர்களுடைய ஒழுக்கக் கேடுகள்,     விசுவாசிகளை ஒழுங்கீனமாய் வாழும்படிக்குச்  வழிசெய்கிறது. ஏலி என்ற ஆசாரியனுடைய குடும்பத்தின் வீழ்ச்சி,     ஜனங்களைக் கர்த்தருடைய காரியங்களைக் குறித்து வெறுப்படையும்படிக்குச் செய்தது. அவன் குமாரர்கள் பேலியாளின் பிள்ளைகளாய் காணப்பட்டார்கள்,     அவர்கள் கர்த்தரை அறியவில்லை என்று 1 சாமு. 2:12 கூறுகிறது. சாமுவேலின் குமாரர்கள் பொருளாசைக்குச் சாய்ந்து,     பரிதானம் வாங்கி,     நியாயத்தைப் புரட்டினார்கள். அவர்கள் சாமுவேலைப் போல நல்ல  நியாதிபதியாய் காணப்படவில்லை. ஆகையால் இஸ்ரவேல்  ஜனங்கள்,     தேவன் அவர்களுக்கு ராஜாவாக இருப்பதை விரும்பாமல்,     புறஜாதிகளுக்குள் இருக்கிறபடி எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்று கேட்டார்கள். இஸ்ரவேலின் முதல் ராஜாவான சவுலும் கர்த்தருடைய வார்த்தைக்குக்  கீழ்ப்படியாமல் காணப்பட்டான்,     அவனைத் தொடர்ந்து வந்த அனேக ராஜாக்களும் அவனைப் போலவே காணப்பட்டார்கள்.  ஆண்டவருடைய பார்வையில்   கனத்திற்குரிய காரியங்களாய் காணப்படுகிற  விவாகம்,     குடும்பம் என்பவை கூட இந்நாட்களில் வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது. இயேசு தன்னுடைய சொந்த ரத்தத்தைச் சிந்திச்  சம்பாதித்தது  சபையாகும். அவருடைய பார்வையில் மிகவும் விலையேறப் பெற்றதும் அதுவேயாகும். ஆனால் இந்நாட்களில் சபைகளில் பயமும்,        பக்தியும் குறைந்து போய் காணப்படுகிறது. ஆவிக்குரிய,     பாரம்பரிய சபைகள் எற்ற பாகுபாடின்றி பரிசுத்தக் குலைச்சல்கள் அனேக சபைகளில் காணப்படுகிறது. 

அஸ்திபாரங்கள் நிர்மூலமாகிக் கொண்டு காணப்படுகிற இந்நாட்களில்,     இயேசுவை உண்மையும் உத்தமமுமாய் பின்பற்றுகிற கர்த்தருடைய ஜனங்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும். நம்முடைய வீடுகளில் அஸ்திபாரம் மற்றும் சுவர்களில் வெடிப்புகள் காணப்பட்டால் அதைச் சரிசெய்வதற்கு உடனடியாக நாம் முயல்வதைப் போல,     சமுதாயத்திலும் சபைகளிலும் வீழ்ச்சிகள் காணப்படும் போது,     காணாதவர்கள் போலவும்,     அக்கரையில்லாதவர்களாயும் காணப்படலாகாது.  உடனடியாக அதிகமாக ஜெபிக்கிறவர்களாய் காணப்பட வேண்டும். என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி,     ஜெபம் பண்ணி,     என் முகத்தைத் தேடி,     தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால்,     அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு,     அவர்கள் பாவத்தை மன்னித்து,     அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன் என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தமாய் காணப்படுகிறது. அதிகமாய் கர்த்தரைத் தேடுவதற்கு நம்மை அர்ப்பணிக்கவேண்டும்,      நீதிக்குரிய ஜீவியம் செய்கிறவர்களாய் காணப்பட வேண்டும். இருளின் ஆதிக்கத்தை அழிக்க மதிலாய் எழும்புகிறவர்களாய் காணப்பட வேண்டும். பத்து நீதிமான்கள் இருந்தால் நான் தேசத்தை அழிப்பதில்லை என்றவர்,     உங்கள் நீதிக்குரிய ஜீவியத்தைக் கண்டு,     உங்களையும்,     உங்கள் மூலம் மற்றவர்களையும் அழிவுகளுக்கு தப்பும் படிக்குச் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae