தியாகம் (Sacrifice).

எஸ்தர் 4:16. நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ly8ShVP1MUE

அதிகமாய் நேசிப்பதையோ, மதிப்பதையோ துறப்பது தான் தியாகம். எல்லாரும் தங்களுடைய உயிரை அதிகமாக நேசிப்பார்கள். அப்படிப்பட்ட உயிரையும் எஸ்தர் துறந்து யூதஜனங்கள் மரித்துப்போய்விடக்கூடாது என்று தன்னுடைய உயிரை தியாகம் செய்ய எஸ்தர் முன்வந்தாள். மோசே சொன்னான், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் (யாத் 32:32) என்று தியாகமாக சொன்னான். பவுல் சொல்லுவான், மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே (ரோமர் 9:3) என்று தியாகமாக கூறினான். பிரிஸ்கில்லாவும் ஆக்கில்லாவும் பவுலின் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள் (ரோமர் 16:4) என்று வசனம் கூறுகிறது.

ஒரு சிலர் ஏதாவது பிரச்சனை வரும்போது வேலையை விடுவார்கள். புதிய தலைவர்கள் வந்து நெருக்கடி கொடுப்பதனிமித்தம் எனக்கு இந்த வேலை வேண்டாம் என்று சொல்லுவார்கள். ஆனால் மத்தேயு, பேதுரு, யாக்கோபு, யோவான் போன்றோர்கள் நன்றாக மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போதும், வரி வசூலித்துக்கொண்டிருக்கும்போதும் தங்கள் வேலையை விட்டு, இயேசுவின் பின்னாக போனார்கள். நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தர் ஒவ்வொரு ஆசீர்வாதத்தை கொடுக்கும்போதும், குறிப்பிட்ட தியாகம் செய்கிறவர்களாய் நாம் காணப்பட வேண்டும்.

ஆபிரகாம் ஈசாக்கை தியாகம் செய்தான். அன்னாள் சாமுவேலை தியாகம் செய்தாள். சகரியாவும் எலிசபெத்தும் யோவானை தியாகம் செய்தார்கள். விலையேறப்பெற்ற பரிமள தைலத்தை ஒரு ஸ்த்ரீ தியாகமாக இயேசுவின் மீது ஊற்றினாள். ஹட்சன் டெய்லரின் பெற்றோர்கள் இப்படியாக ஜெபித்தார்கள். எங்களுக்கு ஆண்டவர் ஒரு மகனை கொடுத்தால், அவனை சீனாவுக்கு மிஷினரியாக அனுப்ப வேண்டும் என்று. இவையெல்லாவற்றிற்கும் மேலாக பிதாவாகிய தேவன் தன்னுடைய சொந்த குமாரன் என்றும் பாராமல் இயேசுவையே தியாகமாக தந்தருளினார். C T ஸ்டட் என்ற ஊழியக்காரர் சொன்னார், கிறிஸ்து எனக்காக மரித்திருப்பாரானால், அவருக்காக நான் செய்யும் எந்தவொரு தியாகமும் பெரிதல்ல என்பதாக. இப்படிப்பட்ட தியாகமுள்ள எண்ணமும் சிந்தையும் நமக்குள்ளாகவும் காணப்படட்டும். முடிவில் யூதஜனங்கள் காப்பாற்றப்பட்டார்கள். அதுபோல நம்முடைய தியாகமுள்ள ஜெபம், தியாகமுள்ள கிறிஸ்துவ பணி மற்றவர்களை பாதுகாக்கட்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org