வீணான வார்த்தைகள் (Careless or useless words).

மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத். 12:36).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/sxwFPZkPrnA

மனுஷனுடைய வாயின் வார்த்தைகளில் வல்லமை காணப்படுகிறது. மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் காணப்படுகிறது என்று சாலொமோன் ஞானி கூறினார். இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்ற வசனத்திலிருந்து,      மனுஷர்கள் பேசும் வார்த்தைகள் இருதயத்திலிருந்து வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. சமயத்திற்கேற்ற நம்முடைய வார்த்தைகள்,      உடைந்த உள்ளங்களைத் தேற்றும்,      கண்ணீரைத் துடைக்கும்,      வாழ்க்கைகளை எடுத்துக் கட்டும்,      பின் மாற்றத்தில் காணப்படுகிறவனை உயிர்ப்பிக்கும்,      பிரிவினைகளை அகற்றும்,      சபைகளை எடுத்துக் கட்டும். சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும் படிக்கு,      கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார் என்று மேசியாவைக் குறித்து ஏசாயா தீர்க்கத்தரிசி கர்த்தருடைய ஆவியினால் ஏவப்பட்டு எழுதினார். இயேசு கிருபை பொருந்திய வார்த்தைகளையும்,      உப்பால் சாரமேறின வார்த்தைகளையும் பேசுகிறவராகக் காணப்பட்டார். நாமும் அப்படிப்பட்ட நாவு உடையவர்களாகக் காணப்படவும்,      கிருபை பொருந்தின வார்த்தைகளைப் பேசவும்,        ஆண்டவரை நோக்கி வேண்டுகிறவர்களாய் காணப்படவேண்டும். 

கர்த்தருடைய ஜனங்கள், அனேக வேளைகளில் மற்றவர்களை இடித்துத் தள்ளுகிற வார்த்தைகளைப் பேசுகிறோம். வாயின் வார்த்தைகளினால் மற்றவர்களைக் காயப்படுத்தி விடுகிறோம். நம்முடைய கவனக்குறைவான,      பயனற்ற வார்த்தைகளுக்கு நாம் கணக்கு ஒப்புவிக்கிற நாள் வருகிறது என்றும், அவைகள் நம்மைக்  கர்த்தருடைய நியாயத்தீர்ப்பில்  கொண்டு வந்து நிறுத்தும் என்பதை அறியாமலேயே வீணான வார்த்தைகளைப் பேசிவிடுகிறோம். ஊழியக்காரர்கள் கூட பலிபீடங்களிலிருந்து வீணான,      மேட்டிமையான வார்த்தைகளைப்  பேசுகிறார்கள். நம் வாயிலிருந்து வருகிற வார்த்தைகளை வைத்தே நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து  நல்லவைகளை  எடுத்துக்காட்டுகிறான்,       பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து  பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். மரம் தன்னுடைய கனியினால் அறியப்படும். நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது,      அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது,      அதனாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்,      தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை  அதினாலேயே சபிக்கிறோம் என்ற யாக்கோபு 3:8,9 வசனத்திலிருந்து நம்முடைய சுயமுயற்ச்சியினால் நம்முடைய நாவை கட்டுப்படுத்த முடியாது. நம்முடைய இருதயத்தைக்  கர்த்தருடைய வார்த்தையினாலும்,      பரிசுத்தாவின் வல்லமையினாலும் நிரப்பும் போது,      நம்முடைய வாயின் வார்த்தைகள் மற்றவர்களுக்குப்  பிரயோஜனமாய் காணப்படும். அப்பொழுது மணவாளனாகிய இயேசு நம்மைப் பார்த்து,      என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது என்றும்,      உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது என்றும் கூறுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae