என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயம் (House of God, which is called by my Name).

என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர் குகையாயிற்றோ? இதோ,     நானும் இதைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரே. 7:11).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/6vj1NtkC6Lw

எரேமியா தீர்க்கதரிசி எருசலேம் தேவாலயத்தின் வாசலிலே நின்று ஏறெடுத்த பிரசங்கம் எரே.7ம் அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தரை ஆராதிக்க வருகிற எல்லா யூத ஜனங்களும் கேட்கும் படிக்கு அவன் பிரசங்கித்தான். அந்தச் செய்தியின் தலைப்பும்,     உள்ளடக்கமும் உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் நன்றாய் சீர்படுத்துங்கள் என்பதாகும். ஆனால் யூதாவின் ஜனங்கள் கர்த்தருடைய  செய்திக்கு செவிசாய்க்கவில்லை. அவர்கள் திருடி,     கொலைசெய்து,     விபசாரம் பண்ணி,     பொய்யாணையிட்டு,      பாகாலுக்குத் தூபங்காட்டி,     அந்நிய தேவர்களைப் பின்பற்றி,      பிற்பாடு வந்து,     கர்த்தருடைய நாமம் தரிக்கப்பட்ட   ஆலயத்திலே   அவருக்கு முன்பாக நின்று,     இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று,     தங்கள் பாவங்களையும்,     துன்மார்க்க கிரியைகளையும் மறைத்து,     பொய் சொல்லுகிறவர்களாய் காணப்பட்டார்கள் என்று எரே. 7:9,    10 கூறுகிறது. ஆகையால் ஆண்டவர் அவர்களைப் பார்த்து,     என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர் குகையாயிற்றோ? இதோ,     நான் அதைக் கண்டேன் என்று கூறினார். ஆகையால் நான் முந்தி என் நாமம் விளங்கப்பண்ணின சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்குச் செய்ததைப் பாருங்கள்,     அதைப் போல எருசலேமிற்கும் செய்வேன் என்று கர்த்தர் கூறினார். சுமார் நானூறு வருஷங்கள் சீலோவா யூதர்களுடைய ஆராதனையின் இடமாகக் காணப்பட்டது. கடைசியில்  பெலிஸ்தியர்களும்,      அசீரியர்களும் அதை ஆக்கிரமித்து,     அழித்துப் போட்டார்கள். அதைப் போல பாபிலோனியர்கள் எருசலேம்  தேவாலயத்தை இடித்து,     அங்கே காணப்பட்ட ஜனங்களைச்  சிறைபிடித்துக் கொண்டு போனார்கள். ஆகையால் பயபக்தியும்,     பரிசுத்தமுமாய் நாம் காணப்படவில்லையென்றால் நாம் ஆராதிக்கிற இடங்கள் நம்மை ரட்சிக்காது என்பதைத் தேவ ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

கர்த்தருடைய பிள்ளைகளே,     எல்லாவித பாவங்களையும் செய்து விட்டு,     பின்பு ஆலயத்தில்  வந்து,     நம்மை நீதிமான்களைப் போலக் காட்டுகிற இடமல்ல கர்த்தருடைய ஆலயம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.  நாம் பாவம் செய்தவர்களாய் வந்தாலும்,     பாவ அறிக்கைச் செய்து,     பாவங்களை விட்டு மனந்திரும்பி,      நம்மைப் பரிசுத்தப்படுத்தி,       ஆண்டவரோடு ஒப்புரவாகி,     நம்மை புதுப்பிக்கிற இடம்தான் கர்த்தருடைய ஆலயமாய் காணப்படுகிறது. ஆண்டவருடைய சமூகத்தில் வருவதின் நோக்கம் நம்முடைய வழிகளையும் கிரியைகளையும் நன்றாய் சீர்படுத்துவதற்கு  என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு நாள் இயேசு எருசலேம்  தேவாலயத்தில் வந்த வேளையில் அங்கே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களும் திரளாய் ஆலயத்தில் காணப்பட்டார்கள். உடனே ஆண்டவர் அவர்கள் எல்லோரையும் வெளியே துரத்தி,     காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து போட்டு,      என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது,     நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று எரேமியாவின் வார்த்தைகளாகக் கூறி அவர்களைக் கடிந்து கொண்டார். அனேக சபைகள் வணிக வளாகங்களாகவும்; பொழுது போக்கு மையங்களாகவும் இந்நாட்களில் காணப்படுகிறது. இஸ்ரவேல் ஜனங்களின் பாளையத்தின் எல்லைகள் எங்கிலும் புளிப்பு காணப்படக்கூடாது என்று கர்த்தர் எச்சரித்தார். நம்முடைய சபைகளின் எல்லைகள் எங்கிலும் பாவம் காணப்படலாகாது,     எங்கும் பரிசுத்தம் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஆகையால் நம்முடைய துர்கிரியைகள்  சபையைக் கள்ளர்குகையாக்கிவிடும் என்பதைப் புரிந்து கொண்டு பயத்தோடும்,     பரிசுத்த அலங்காரத்தோடும் கர்த்தரை சேவிப்போம். அப்போது கர்த்தர் ஆலயத்தின் நன்மைகளினால் உங்களைச்  சம்பூரணமாய் ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae