சங்கீதம் பாடுங்கள் (Raise a song).

சங்கீதம் 81:2 தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, சங்கீதம் பாடுங்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/5uZE6xvq_1o

சங்கீத புஸ்தகம் ஒரு மேன்மையான, எல்லாரும் விரும்பி படிக்கிற ஒரு புஸ்தகம். உலகளாவிய சபைகளில் சங்கீத புஸ்தகத்தை அடிப்படையில் வெளிவந்த பாடல்களே அதிகம். குறிப்பாக சங்கீதம் 23 , சங்கீதம் 91ஐ மையப்பொருளாக வைத்து வெளிவந்த பாடல்கள் அநேகம். இன்னும் இந்த சங்கீதங்களை மையமாக வைத்து பாடல்கள் இயற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

மோசே ஐந்து நியாயப்பிரமான புஸ்தகங்களை கொடுத்தார். அதுபோல சங்கீதக்காரர்கள் ஐந்து சங்கீத புஸ்தகங்களை கொடுத்தார்கள். சங்கீத புஸ்தகத்தை ஐந்து புஸ்தகங்களாக பிரிக்கலாம். சங்கீதம் 1-41, 42-72, 73-89, 90-106 ,107-150 அதிகாரங்களாக பிரிக்கலாம். இந்த ஐந்து சங்கீத புஸ்தகத்திலும், ஒவ்வொரு கடைசி சங்கீதமும் ஆமென், துதி என்றே முடிவடைகிறது. ஆமென் என்பவர் இயேசுவாக காணப்படுகிறார். ஆகையால் நாம் உலகத்திலிருப்பவர்களுக்கும், சினிமா பாத்திரங்களுக்கும் அல்ல, ஆமென் என்றழைக்கப்படும் கர்த்தராகிய இயேசுவுக்கே சங்கீதம் பாட வேண்டும். நம்முடைய ஜெபமே சங்கீதத்தில் மூழ்கி, நம்முடைய விண்ணப்பங்களெல்லாம் சங்கீதத்தால் நனைந்தும் காணப்பட வேண்டும்.

தாவீது சொல்லுகிறார், கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன் (சங் 18:49) என்பதாக. அவர் சொன்னதின்படி கர்த்தரை எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன், அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் என்று சொல்லி எந்நேரமும் கர்த்தரை தாவீது துதித்தார். வாழ்விலும் கர்த்தரை துதித்தார், தாழ்விலும் கர்த்தரை துதித்தார். தாவீதை பொறுத்தவரை இக்கட்டுகளும், மனச்சோர்வுகளும் கர்த்தரை துதிப்பதிலிருந்து அவரை நிறுத்திவிட முடியவில்லை. பரலோகிலும் அரை மணிநேரத்தை தவிர மற்றெல்லா நேரங்களும் துதியும் ஆரவாரமுமாக தான் காணப்படுகிறது (வெளி 8:1).

வேதாகமத்தில் மிகப்பெரிய அதிகாரம் சங் 119ஆக காணப்படுகிறது. சங்கீதம் 119ல் ஒவ்வொரு வசனமும் தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறது. அதுபோல சங்கீத புஸ்தகத்தில் வெற்றிக்கான சங்கீதம் காணப்படுகிறது, பாதுகாப்பிற்கான சங்கீதம் காணப்படுகிறது, அன்பிற்கான சங்கீதம் காணப்படுகிறது, உதவி இரக்கத்திற்கான சங்கீதம் காணப்படுகிறது. இப்படி வாழ்க்கையில் எல்லா தேவைக்கான பதில்கள் நிறைந்த ஒரு பெரிய சோலை தான் சங்கீதம் புஸ்தகம். இந்த புஸ்தகத்தை மாத்திரம் தினமும் வாசிக்காமல், மற்றெல்லா புஸ்தகங்களோடு சங்கீதத்தையும் தினமும் வாசிப்பது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். தாவீதை போல, சாலொமோனை போல, ஆசாபை போல இன்பமாய் கர்த்தரை போற்றி சங்கீதம் பாடுங்கள். அது உங்கள் ஆத்துமாவுக்கு அறுசுவை உணவு உண்பதுபோல திருப்தியாயிருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org