உன் 7:11,12 வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம். அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4jOz8kF-8Xk
சூலமித்தி தன்னுடைய நேசரிடம் சொன்ன வார்த்தையாய் மேற்குறிப்பிட்ட வசனம் காணப்படுகிறது. சூலமித்தி நெருக்கமாய் நேசருடன் தனித்து இருக்க வேண்டும் என்று வாஞ்சித்தாள். அதுபோல தான் நாமும் நம்முடைய நேசரிடம் தனித்து இருக்க வாஞ்சிக்க வேண்டும். உலகத்திலிருக்கும் காதலனிடம் நீ போய் உன் காதலியிடம் பேசு என்று யாரும் சொல்ல தேவையில்லை. உலக சிநேகம் யாரும் சொல்லித்தராமல் தனியே போய் பேசும்படி செய்கிறது. அப்படியென்றால், தெய்வீக சிநேகத்தோடு நாம் எவ்வளவாய் தேவனோடு தனித்திருக்க வேண்டும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.
நம்முடைய ஆண்டவர் சர்வ வல்லவராய் இருந்தாலும் அவர் எதிர்பார்ப்பதெல்லாம் தகப்பன் பிள்ளை என்ற நெருக்கமான உறவையே விரும்புகிறார். அந்த உறவை தரவே இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் நமக்காக மனிதனாக பிறந்தார். இயேசு பிதாவோடு உறவுகொள்ள வனாந்திரமான இடத்திற்கு கடந்து சென்றார். வனாந்திரத்தில் தனித்து போய் ஜெபம் செய்தார். ஆகையால் தான் இயேசு நான் தனியாக இல்லை என்று சொன்னார். பிதாவும் இயேசுவும் ஒன்றாய் இருப்பது போல நாமும் அவருக்குள் ஒன்றாய், நெருங்கிய உறவோடு இருக்க வேண்டும் என்றே அவர் வாஞ்சிக்கிறார். இளைய குமாரன் தன்னுடைய பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு, தன்னுடைய தகப்பனிடம் நெருங்கி வரவே வாஞ்சித்தான். அப்படிப்பட்ட உறவிற்குள்ளாக வந்துவிடுங்கள்.
மாத்திரமல்ல, நம்முடைய ஆண்டவரிடம் நண்பனை போலவும் நம்முடைய உறவை வளர்த்துக்கொள்ள முடியும். இயேசு சொன்னார், இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன் (யோவா 15:15) என்பதாக. யாக் 2:23 கூறுகிறது, ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான் என்பதாக. ஆபிரகாமை சிநேகிதன் என்று அழைத்தவர், நாமும் அவருடைய சிநேகிதனாக இருக்க முடியும். அவர் நமக்கு நல்ல நண்பனாக இருப்பார்.
தேவனோடு தனியாக அறை வீட்டிற்குள் சென்று ஜெபிப்பதின் மூலமாகவும், வசனத்தை அதிகமாக வாசிப்பதின் மூலமாக தான் நாம் அவருடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ள முடியும். ஆகையால் உங்கள் நேரத்தை திருடுகிறவர்களுக்கு ஜாக்கிரதையாய் இருங்கள். தொலைபேசியில் ஐந்து நிமிடத்திற்கு அதிகமாக யாருடனும் பேசி நேரத்தை வீணடிக்காதிருங்கள். அளவிற்கு மீறி நண்பர்களின் சந்திப்பு, விருந்தினர்களின் சந்திப்பை தவிர்த்து விடுங்கள். பெண் தேடும் காலமாய் இருந்தாலும் ஈசாக்கு தியானம் செய்யும் வேலையை அசட்டை செய்யவில்லை. ஆகையால் நம் ஆண்டவரிடம் மணவாளன் மணவாளி என்ற உறவுடனும், தகப்பன் பிள்ளை என்ற உறவோடும், சிநேகிதன் என்ற உறவோடும், அவருக்குள் நெருங்கி ஜீவிப்போம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org