ஏசா 9:6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/vVpQTRHfKns
நாமெல்லாருக்கும் பல பாலகர்கள் அல்ல, ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு கிறிஸ்து இயேசு பிதாவானவரால் கொடுக்கப்பட்டார். எல்லா அரசாட்சியும் இயேசுவின் தோளின்மீது இருக்கும். பலருக்கு பல நாமங்கள் என்று அல்ல, இயேசு ஒருவருக்கு பல நாமங்கள் கொடுக்கப்பட்டது. அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா தீர்க்கதரிசி இயேசுவை சமாதான பிரபுவாக கண்டான். சகரியா தீர்க்கதரிசனமாக இயேசுவை குறித்து சொல்லுகிறான், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான் (லுக் 1:79) என்பதாக. பரம சேனையின் திரள், மேய்ப்பர்களுக்கு சொன்னது, உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள் (லுக் 2:14). தேவாலயத்தில் இருந்த சிமியோன் சொன்னான், ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர் (லுக் 2:29) என்பதாக. உயிர்த்தெழுந்த இயேசு தன்னுடைய சீஷர்களை சந்தித்தபோது திரும்ப திரும்ப சொன்ன வார்த்தை உங்களுக்கு சமாதானம் என்றே சொன்னார். இயேசு பரமேறி செல்லும்போதும், என்னுடைய சமாதானத்தையே விட்டு சொல்லுகிறேன் என்று சொன்னார். ஏசா 26:3 கூறுகிறது, உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் என்பதாக. இப்படி சமாதானத்தை வாக்களித்த தேவன், உங்கள் வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் சமாதானத்தை தருவார்.
இயேசு பிறந்த நாளை நினைவுகூருகிற இந்நாட்களில், அவர் விட்டு சென்ற சமாதானம் உங்கள் உள்ளங்களை நிரப்பும். பூரண சமாதானத்தை இவ்வுலகில் இயேசுவை தவிர வேறொருவரும் கொடுக்கமுடியாது. சமாதானத்தை தேடி ஜனங்கள் இங்கும் அங்கும் அலைகிறவர்களாய் இருக்க, சமாதானத்தை கொடுக்க விண்ணை விட்டு மண்ணை நோக்கி இயேசு வந்தார். அந்த இயேசுவை மாத்திரம் நம்பி அவரை இறுக பற்றிக்கொள்ளுங்கள். சூரியனுக்கு கீழே இருக்கிற அனைத்தும் மாயை என்று ஞானி சொன்னது படி, மாயையான உலக மனிதர்கள், உலக தத்துவங்கள், உலகம் சொல்லிக்கொடுக்கும் யோகா கலை, ஒன்றும் சமாதானத்தை தர முடியாது. ஆகையால், சூரியனுக்கு மேலே இருக்கும் இயேசுவை சார்ந்து ஜீவியுங்கள். சூரியனுக்கு கீழே இருப்பவைகள் மாயை, சூரியனுக்கு மேலே விண்ணிலிருக்கும் இயேசு நிஜம். விண்ணிலிருக்கும் இயேசு மண்ணிலிருக்கும் மானிடனுக்கு சமாதானத்தை தர, சமாதான பிரபுவாக இவ்வுலகில் பிறந்தார். அவர் உங்களுக்கு சமாதானத்தை தருவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org