நீதியுள்ள கிளையாக இயேசு பிறந்தார் (Jesus was born as the righteous branch).

எரே 23:5. இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Tp-dSadfJgQ

தாவீதின் சந்ததியில் ஒரு கிளையை எழும்பப்பண்ணுவேன் என்று தீர்க்கதரிசனமாக எரேமியா தீர்க்கதரிசி மேசியாவை குறித்து சொன்னான். இந்த வார்த்தை புதிய ஏற்பாட்டில் அப்படியே நிறைவேறியது. மத் 1:1ல் ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு என்று புதிய ஏற்பாடு ஆரம்பிக்கிறது. லுக் 1:32ல் அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார் என்று இயேசு தாவீதின் சிங்காசனத்தில் வந்தவராக எழுதப்பட்டிருக்கிறது. யோவான் 7:42ல் தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்று எழுதப்பட்டிருக்கிறது. இப்படி எரேமியா தீர்க்கதரிசி அழுகை, கண்ணீரின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்டாலும் , இயேசுவின் பிறப்பை குறித்தும் தீர்க்கதரிசனம் உரைத்தான்.

மாத்திரமல்ல, இயேசு நீதியுள்ளவராக இந்த உலகத்தில் எல்லா நீதியையையும் நிறைவேற்றினார். இயேசு யோவான் ஸ்நானகனிடம் ஞானஸ்நானம் பண்ண வந்தபோது, யோவான் அவருக்கு தடை செய்தான். நான் உம்மிடம் ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடம் ஞானஸ்நானம் எடுக்கலாமா என்று சொன்னான். அப்பொழுது இயேசு சொன்னார், இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்று கூறினார். இயேசு நீதியை நிறைவேற்றியதுபோல, நாமும் நீதியை நடப்பிக்கிறவர்களாய் இருக்க வேண்டும் என்று கர்த்தர் கூறுகிறார். இயேசு தன்னுடைய மலை பிரசங்கத்தில் சொன்னார், வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 5:20) என்பதாக. ஆகையால் நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்களாய் இருங்கள். உலகத்தில் நடக்கும் அநீதி எல்லாம் சத்துருவினால் உண்டானவைகள். உலகத்தில் நடக்கும் நீதியானவைகள் எல்லாம் இயேசுவினால் உண்டானவைகள். அநீதி செய்கிறவர்கள் சத்துருவினால் உண்டானவர்கள். நீதி செய்கிறவர்கள் கிறிஸ்துவினால் உண்டானவர்கள். இயேசுவின் பிறப்பை நினைக்கிற இந்நாட்களில், அநீதி நிறைந்த இந்த உலகில், நீதி செய்கிற கிறிஸ்துவின் பங்காக நாம் ஒவ்வொருவரும் காணப்படுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org