ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள் (Exhort one another).

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம், நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்தி சொல்லவேண்டும்(எபி. 10:25).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/lXMPQFmoL10

உலகப்பிரகாரமான காரியங்களைக் குறித்து புத்தி சொல்ல அனேகர் காணப்படுகிறார்கள், அது நல்லதாயும் காணப்படுகிறது. ஆனால் ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து நாம் அதிகமாய் புத்தி சொல்லுகிறவர்களாய் காணப்பட வேண்டும். கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க  பிலிப்பிய சபையின் விசுவாசிகளாய் காணப்பட்ட எயோதியாளுக்கும்  சிந்திகேயாளுக்கும்  அப்போஸ்தலனாகிய  பவுல் புத்தி கூறுகிறதை பிலி. 4:2ல் வாசிக்கமுடிகிறது. அவர்களுக்குள் பிரிவினைகள் காணப்பட்டிருக்கக் கூடும், ஆகையால் ஒரே சிந்தையாயிருக்க பவுல் புத்தி சொன்னான். எபேசு சபை விசுவாசிகளோடு தங்கியிருந்து,  மூன்றுவருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் ஒவ்வொருவருக்கும் புவுல்  புத்தி சொல்லிக் கொண்டுவந்தான் என்று அப். 20:31 கூறுகிறது. உங்களில்  ஒருவனாகிலும்  பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப்  போகாதபடிக்கு, நாடோறும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள் என்று எபி. 3:13 கூறுகிறது. அதுபோல சபை கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள் என்று விசுவாசிகள் ஒருவருக்கொருவர் புத்தி சொல்ல வேண்டும் என்பதை மறந்து போகாதிருங்கள். சபை கூடிவருதலை மறக்கிற ஒரு சந்ததி எழும்பிக் கொண்டிருக்கிறது. சிலர் விரும்பினால் மாத்திரம் சபைக்கு வருகிறவர்களாய்  காணப்படுகிறார்கள்.   சிலர் கால நிலைகள்  ஒழுங்காய் அமைந்தால் மாத்திரம் சபைக்கு வருகிறவர்களாய் காணப்படுவார்கள். சிலர் வசதி வாய்ப்புகள் இருந்தால் மாத்திரம் சபைக்கு வருகிறவர்களாய் காணப்படுவார்கள். மாதத்திற்கு ஒருமுறை, பலமாதங்களில் ஒருமுறை என்று வருகிறவர்களும் உண்டு.  அப்படிப்பட்டவர்களைப் பார்க்கும் போது மற்ற விசுவாசிகள் அவர்களை உற்சாகப்படுத்தி புத்தி சொல்லுவதுமில்லை, அதை முக்கியப்படுத்தி ஒரு ஊழியமாய் கருதுவதுமில்லை. கர்த்தருடைய வருகையின் நாள் சமீபித்துவருகிறதை  எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ  அவ்வளவாய்  நீங்கள் புத்தி சொல்லவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஆனால் கர்த்தர் சீக்கிரம் வரப்போகிறார் என்று சொல்லுகிறவர்கள் கூட, மற்றவர்களைப் புத்தி சொல்லி உற்சாகப்படுத்தி சபைக்கு அழைத்து வருவதில்லை.

இயேசு தன்னுடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார் என்று லூக்கா 4:16 கூறுகிறது. ஆண்டவர், மனுஷகுமாரனாய் இந்த பூமியில் காணப்பட்ட நாட்களில், ஜெப ஆலயங்களுக்குச் செல்லுவதை வழக்கமாகவே கொண்டிருந்தார். கர்த்தருடைய பிள்ளைகளே, சபைக் கூடிவருதலை நீங்கள் விட்டுவிடாதிருங்கள், மற்றவர்களையும் உற்சாகப்படுத்தி அழைத்து வாருங்கள். சபை, கர்த்தருடைய வழிகளைக் நாம் கற்றுக் கொள்ளுகிற பள்ளிக் கூடமாகக் காணப்படுகிறது. சபை, வியாதிகளிலிருந்து விடுதலையைப் பெற்றுக் கொள்ளுகிற மருத்துவ சாலையாகக் காணப்படுகிறது. சபை, கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுகிற இடமாகக் காணப்படுகிறது, நாம் ஒருமித்துக் கூடிவரும் போது கர்த்தர் அங்கு என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.  ஆகையால் ஆண்டவரிடமிருந்து நாம் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுவதைப் போல மற்றவர்களும் பெற்றுக் கொள்ள எல்லோரையும் ஆண்டவருடைய சமூகத்தில் அழைத்துக் கொண்டு வாருங்கள். அதற்குரிய கிருபைகளைக் கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தருளுவாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae