பிரபுவாகிய மேசியா (Messiah the prince).

தானி 9:25. இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/f-fOkRW8Qcs

பழைய ஏற்பாட்டில் மேசியா என்பவர் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து இயேசுவாக காணப்படுகிறார். கி.மு 536ல் மேசியாவை குறித்து தீர்க்கதரிசனமாக தானியேல் தீர்க்கதரிசி சொல்லுகிறான், பிரபுவாகிய மேசியா வருவார் என்பதாக.

பழைய ஏற்பாட்டில் தானியேல் தீர்க்கதரிசன புஸ்தகமும், புதிய ஏற்பாட்டில் வெளிப்படுதல் புஸ்தகமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. தானியேல் புஸ்தகத்தை பழைய ஏற்பாட்டின் வெளிப்படுத்தல் புஸ்தகம் என்றும், வெளிப்படுத்தல் புஸ்தகத்தை புதிய ஏற்பாட்டின் தானியேல் புஸ்தகம் என்றும் அழைக்கலாம். பாபிலோன் சிறையிருப்பில் பலவருடங்கள் இருந்த தானியேல் வரப்போகும் பிரபுவாகிய மேசியாவை குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தான். பத்மு சிறையில் பல வருடங்கள் இருந்த யோவான் வரப்போகும் இராஜாதி இராஜாவாகிய இயேசுவை குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தான். இப்படி தானியேல் பிரபுவாகிய மேசியாவை குறித்து தீர்க்கதரிசனம் சொன்னான்.

மேசியா என்பதற்கு கிறிஸ்து என்றும் அபிஷேகிக்கப்பட்டவர் என்றும் அர்த்தம். தேவன் அவரை மேசியாவாக்கினார் அதாவது அபிஷேகம்பண்ணினார். நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார் (அப் 10:38) என்று வசனம் கூறுகிறது. இன்று, இயேசு பரிசுத்த ஆவியானவர் மூலம் நம்மை அபிஷேகம் செய்கிறார். 1 யோவா 2:27 கூறுகிறது, நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது என்பதாக. கர்த்தருடைய அபிஷேகம் நம்மை நடத்த வேண்டிய வழியில் நடத்துகிறது, போதிக்கிறது. மாத்திரமல்ல, ஆண்டவருடைய அபிஷேகம் நுகத்தடிகளை முறிக்கும். அவருடைய அபிஷேகம் உங்கள் பாரங்களை எல்லாம் முறிக்கும். தாவீது தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடினவன். கர்த்தருடைய அபிஷேகம் நம் தலையில் இருக்கும் போது தாவீதை போல கர்த்தரை துதித்து அவரை பாடுவோம். அவர் நம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் செய்கிறவர். நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் (1 நாளா 16:22) என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவர்களை ஒரு பொல்லாத பிசாசின் கிரியைகளும் தொட அதிகாரமில்லை. தாவீதும் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்ட சவுலை தொடாமல் இரத்தப்பளிக்கு தன்னை தப்புவித்துக்கொண்டான். ஆகையால் பிரபுவாகிய மேசியா உங்களை தன்னுடைய பரிசுத்த தைலத்தினாலும், ஆனந்த தைலத்தினாலும், தைல கொம்பினால் அபிஷேகம் செய்யும்படியாகவும், எண்ணையினால் அபிஷேகம் செய்யும்படியாகவும் கர்த்தரிடம் கேளுங்கள். கர்த்தருடைய அபிஷேகம் எல்லா தீங்கிற்கும் விலக்கி உங்களை பாதுகாக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org