இருளிலிருந்து வெளிச்சத்தினிடத்திற்கு (Darkness to Light).

இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும் ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார் அவருடைய மகிமை உன்மேல் காணப்படும் (ஏசா. 60:2).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/DB-FT30QeWE

தேவன் வெளிச்சத்தை உண்டாக்குவதற்கு முன்பு பூமியில் இருள் இருந்தது. ஆகையால் பூமியானது ஒழுங்கின்மையாயும் வெறுமையாயும் காணப்பட்டது.  பிசாசுக்கு இன்னொரு பெயர் அந்தகார லோகாதிபதி என்பதாகும். அவனுடைய ஆதிக்கம் ஒரு தேசத்தின் மேலும், பட்டணத்தின் மேலும், ஜாதி ஜனங்களின் மேலும் காணப்படும் போது அங்கே ஒழுங்கின்மையும், தாறுமாறுகளும், பாவங்களும் திரளாய் காணப்படும். அவன் வெளிச்சத்தை ஜனங்கள் கண்டு கொள்ளக் கூடாதபடி, அவர்களுடைய மனக்கண்களைக்  குருடாக்கி விடுவான்.   சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பு யூதேயாவில் காணப்பட்ட ஜனங்கள் வெளிச்சத்தை எதிர்நோக்கிக் காணப்பட்டார்கள். அவர்கள்  ரோமர்களின் ஆட்சியின் கீழ் காணப்பட்டதினால், ரோம ராயர்கள் அவர்கள்மேல் நுகத்தடிகளைச்  சுமத்தினார்கள். ஒரு விடியலையும், வெளிச்சத்தையும் அவர்கள் எதிர்நோக்கிக் காணப்ட்டடார்கள். இயேசு இந்தப் பூமியில் மனுஷகுமாரனாய் அவதரித்த வேளையில், இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள், மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று ஏசாயா  தீர்க்கதரிசியினால் கூறப்பட்ட வேத வாக்கு அப்போது அப்படியே நிறைவேறினது. இந்நாட்களில் இயேசுவின் பிறப்பை நினைவு கூர்ந்து மகிழுகிற வேளையில், இயேசுவாகிய வெளிச்சம் நம் இருதயங்களில் உதித்திருக்கிறாரா என்பதை நாம் சோதித்துப் பார்க்க வேண்டும். ஒளி விளக்குகளின் அலங்காரம் எங்கும் ஜொலித்துக் கொண்டு காணப்படுகிறது, ஆனால் உலகத்தின் ஒளியாய் அவதரித்த ஆண்டவருடைய வெளிச்சம் நம் இருதயங்களையும் அலங்கரிக்குமே எனில் அது மிகவும் நலமாயிருக்கும். 

கர்த்தருடைய பிள்ளைகளே, நாம் நம்மை  அந்தகாரத்தினின்று  தம்முடைய ஆச்சரியமான  ஒளியினிடத்திற்கு  வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும் படிக்குத்  தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான  ஆசாரியக்கூட்டமாயும்,  பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் காணப்படுகிறோம் என்று 1 பேதுரு 2:9 கூறுகிறது. இயேசுவைச் சொந்த இரட்சகராக அறிந்து கொள்ளுவதற்கு முன்பு நாமும் அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் அடிமைத்தனத்தில் காணப்பட்டவர்கள் தான். கர்த்தருடைய   கிருபையினால் அவருடைய வெளிச்சம்  நம்மைச் சந்தித்தது. ஆகையால் ஆச்சரியமான ஒளியாகிய இயேசுவைப் பற்றியும் அவருடைய புண்ணியங்களைப் பற்றியும் மற்றவர்களுக்கு  அறிவிக்கக் கடமைப் பட்டவர்களாய் காணப்படுகிறோம். நாம் ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, ஒளியின் கிரியைகளை வெளிப்படுத்தி, உலகத்திற்கு ஒளியாகக் காணப்பட நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இயேசு பிறந்த வேளையில், அவருடைய பிறப்பின் செய்தி முதன்முதலாய் தேவதூதர்கள் மூலம் மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப் பட்டது. மேய்ப்பர்களை விட்டு தூதர்கள் பரலோகத்துக்குப்  போனபின்பு, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். கண்ட பின்பு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம் பண்ணினார்கள் என்று லூக்கா 2:17 கூறுகிறது. நாமும் கூட பெரிய வெளிச்சமாகிய இயேசுவைக் குறித்து மற்றவர்களுக்குப்  பறைசாற்றி, இருளில் காணப்படுகிற ஜனங்களை இயேசுவிடம் அழைத்துக் கொண்டு வருகிற ஒரு நட்சத்திரமாகக் காணப்படக் கர்த்தர் கிருபை தருவாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae