ஆமோஸ் 9:14. என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/qJlOE5hLxjE
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் அடிமைகளாக சிறை கைதிகளை போல வாழ்ந்து வந்தார்கள். அவர்களை தங்கள் அடிமைத்தனத்திலிருந்து ஆண்டவர் விடுதலையாக்கி கானானுக்குள் பிரவேசிக்கும்படியாக செய்தார். அதுபோல யூதர்கள் பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு போனார்கள். யூதர்கள் பாபிலோனுக்கு மூன்று கட்டங்களாக நாடுகடத்தப்பட்டார்கள். அதுபோல அவர்கள் மூன்று கட்டங்களாக சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தார்கள். நம்முடைய ஆண்டவர் நம்மை சரியாய் மகிழ்ச்சியாக்குகிறவர்.
முதல்கட்டமாக, யோயாக்கீமின் நாட்களில் தானியேல் கொண்டுசெல்லப்பட்டார். இரண்டாம் கட்டமாக யோயாக்கீனின் நாட்களில் எசேக்கியேல் கொண்டு செல்லப்பட்டார். மூன்றாவதாக, சிதேக்கியாவின் நாட்களில் யூத ஜனங்கள் கொண்டுசெல்லப்பட்டு பாபிலோனின் சிறையிருப்பில் இருந்தார்கள். சிலர் சொல்லுவதுண்டு நான் எங்கு சென்றாலும் என்னுடைய தாய் நாட்டைப்போல நல்ல நாடு வராது என்பதாக. காரணம் தாய் நாட்டில் நமக்கு குடியுரிமை உண்டு, சகல சலுகைகளும் கிடைக்கும். அயல் நாட்டில் நாம் குடியுரிமையை பெற்றுக்கொண்டாலும் அது இரண்டாம் வகுப்பை சேர்ந்தவர்களை போல தான் வாழமுடியும். யூத ஜனங்களும் தங்கள் தாய் நாட்டை விட்டு பாபிலோனுக்கு, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்திக்கொள்ளுவதற்காக அல்ல, சிறையிருப்பாக கொண்டுசெல்லப்பட்டார்கள்.
சுமார் 70 வருடங்கள் கழித்து கர்த்தர் அவர்களை நினைத்து அவர்கள் சிறையிருப்பை மாற்றினார். முதலாவது, செருபாபேலின் தலைமையில் யூத ஜனங்கள் பாபிலோனிலிருந்து திரும்ப வந்தார்கள். செரு மற்றும் பாபேலை இணைத்தால் வரும் பெயர் தான் செருபாபேல். அதாவது பாபிலோனில் பிறந்தவன் என்று அர்த்தம். இவன் தலைமையில் வந்தவர்கள் பின்மாற்றம் மற்றும் விக்கிரக வழிபாட்டிலிருந்து வந்தவர்கள். இவர்கள் செய்த முதல் வேலை ஆலயத்தை எடுத்து கட்டினார்கள். அதிலும் முதலாவது பலிபீடத்தை ஆதாரத்தின் மேல் கட்ட ஆரம்பித்தார்கள் (எஸ்றா 3:3). நம்முடைய ஆரம்பமும் எப்பொழுதும் கல்வாரி சிலுவை என்னும் பலிபீடமாகவே இருக்க வேண்டும்.
இரண்டாவது, எஸ்றாவின் தலைமையில் யூத ஜனங்கள் பாபிலோனிலிருந்து திரும்ப வந்தார்கள். அவர்கள் பயணம் செய்த போது தேவனுடைய தயவுள்ள கரம் அவர்களோடிருந்தது, எஸ்றா வேதத்தை கற்றுக்கொடுக்கிறவனாக காணப்பட்டான். நம்முடைய சிறையிருப்பை ஆண்டவர் திருப்பும்போதும் அவருடைய தயவுள்ள கரம் நம்மீது இருக்கும்.
மூன்றாவதாக, நெகேமியா பாபிலோனிலிருந்து வந்து, அவன் அலங்கத்தை எடுத்து கட்டுகிறவனாக காணப்பட்டான். இப்படி ஆண்டவர் யூதர்களின் சிறையிருப்பை மாற்றினார். உங்களுடைய சிறையிருப்பையும் மாற்றுவார். சத்துரு உங்களை சிறையாக்கி வைத்திருக்கிற கடன் என்னும் சிறையிருப்பு, சோர்வு என்னும் சிறையிருப்பு, வியாதி என்னும் சிறையிருப்பு, வேலையின்மை என்னும் சிறையிருப்பு என்று எதுவாக இருந்தாலும் உங்கள் சிறையிருப்பை கர்த்தர் திருப்புவார். தாவீதின் இடிந்துபோன கூடாரத்தை திரும்ப எடுத்து கட்டியவர், உங்களையும் எடுத்து கட்டுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org