மெய்யான ஒளி (True Light).

உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி (யோவான் 1:9).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/HKrvURBhShk

பூமியில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு   வெளிச்சம், காற்று, தண்ணீர் மற்றும் உணவு இன்றியமையாததாய் காணப்படுகிறது. சூரியன்  வெளிச்சத்தைக் கொடுக்கவில்லையெனில் எல்லா ஜீவராசிகளும் அழிந்து விடும்.   ஆவிக்குரிய வாழ்விலும் இயேசுவே மெய்யான ஒளியாய் காணப்படுகிறார், இருளில் காணப்படுகிற எந்த மனுஷனையும்  பிரகாசிப்பிக்கிற ஒளியாய் அவர் காணப்படுகிறார். அவர் நம்முடைய ஆவிக்குரிய  சுவாசக் காற்றாயும் காணப்படுகிறார், ஆதியில்  மனுஷனைச் சிருஷ்டித்து அவன் நாசியில் தன்னுடைய சுவாசத்தை ஊதினார், அவன் ஜீவ ஆத்துமாவானான். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது,  ஆவியினாலும்  பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்று யோவான் 3:8ல் அவர் கூறினார். நம்முடைய ஜீவ தண்ணீராயும் இயேசு காணப்படுகிறார், சமாரியா ஸ்திரீயோடு அவர் பேசும் போது, நீ என்னிடத்தில் கேட்டிருந்தால் நான் உனக்கு ஜீவ தண்ணீரைக் கொடுத்திருப்பேன், நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ  ஒருக்காலும் தாகமுண்டாகாது, நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்று யோவான் 4:14ல்   கூறினார். அதுபோல இயேசுவே ஜீவ அப்பமாயும் காணப்படுகிறார். பிதா வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம்  என்று ஆண்டவர் தன்னைக் குறித்துக் கூறினார். இயேசுவே நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின் எல்லாமுமாய் காணப்படுகிறார்.  அவராலேயன்றி ஆவிக்குரிய மனுஷன் ஒருநாள் கூட உயிர் வாழமுடியாது. ஆகையால் இயேசுவையே உங்கள் மெய்யான வெளிச்சமாகவும், காற்றாகவும், ஜீவ தண்ணீராகவும், ஜீவ அப்பமாகவும் கொள்ளுங்கள்.


வார்த்தையாகிய தேவன் இந்த பூமியில் சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பு அவதரித்தார். அந்த வேளையில் பூமியின் குடிகளை இருளும், காரிருளும் மூடி வைத்திருந்தது. ஜனங்கள் பிசாசின் ஆதிக்கத்தின் கீழ்க் காணப்பட்டார்கள். ஒரு வெளிச்சத்திற்காக ஏங்கிக் கொண்டு காணப்பட்ட வேளையில் இயேசு உலகத்தின் ஒளியாய்  மேசியாவாக அவதரித்தார். இயேசு தன்னை மெய்யான ஒளி என்று கூறும் போது, பொய்யான ஒளியும் காணப்படும் என்பதை அறியமுடிகிறது.  சாத்தானும் கூட ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்தவன். அவன் ஒளியல்ல, அதின் வேஷத்தைத் தரித்த பொய்யான ஒளி. அவன் தன்னை ஒளியைப் போலக் காட்டி, இருளை ஜனங்கள் நடுவில் விதைத்து, மனக்கண்களைக் குருடாக்கி விடுவான். அவனுடைய நயங்காட்டுதலை நம்பி அவனைப் பின்பற்றுகிற இருளின் பிள்ளைகளும் திரளாய் காணப்படுகிறார்கள். ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது என்று வேதம் கேட்கிறது. ஆகையால் மெய்யான ஒளியைப் பின்பற்றுகிற நீங்கள், ஒரு நட்சத்திரமாய் காணப்பட்டு, இயேசுவின் ஒளியை மற்றவர்களுக்கு முன்பாக வீசுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae