ராஜ்யம் கர்த்தருடையது (Kingdom shall be the LORD’s).

ஒபதியா 21 ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன்பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/tSYVHvskBC0

வேதாகமத்தில் பரலோக ராஜ்ஜியம் மற்றும் தேவனுடைய ராஜ்யத்தை பற்றி அநேக இடங்களில் பார்க்கலாம். யோவான் முதன் முதலாக பிரசங்கம் செய்தது, மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம்பண்ணினான் (மத் 3:2). இயேசுவும் முதன் முதலாக பிரசங்கம் செய்ய தொடங்கியபோது, மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார் (மத் 4:17). இப்படியாக, ஆண்டவருக்கு வழியை ஆயத்தம் செய்ய வந்தவனும், இயேசுவும் பரலோகராஜ்யத்தை குறித்து பிரசங்கம் செய்தார்கள். இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்திலும் அவருடைய நாமத்திற்கு அடுத்து வருவது பரலோக இராஜ்யத்தை குறித்ததாய் காணப்படுகிறது.

பரலோக இராஜ்யத்தைக்குறித்து ஆண்டவர் போதித்தபோது சொன்னார், பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது, பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது, பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது, பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது, பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது, பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது என்றெல்லாம் சொன்னவர், பரலோகராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது என்றும் கூறினார். முதலாவது பரலோகராஜ்யத்தை மற்றவர்களிடமோ, மற்ற பட்டணங்களிலோ, மற்ற நாடுகளிலோ தேடாமல், அது உங்களுக்குள்ளாக விதையாய் விதைக்கப்பட்டிருக்கிறது என்ற சத்தியத்தை அறிந்துகொள்ளுங்கள்.

பரலோகராஜ்யத்தின் திறவுகோலையும் கர்த்தர் உங்கள் கரங்களில் கொடுத்திருக்கிறார். அதை வைத்து பூலோகத்திலே நீங்கள் கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீங்கள் கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.
இன்றைக்கு நாமெல்லாரும் கர்த்தருடைய ராஜ்ஜியம் விரிவடைய அவருடைய ஆயுதங்களாக இருக்கிறோம். நம்மைக்கொண்டே கர்த்தருடைய ராஜ்யத்தை கர்த்தர் கட்டுவார். நாம் ஏதோ இந்த பூமிக்குரிய சில கட்டிடங்களை மாத்திரம் கட்டும்படி அழைக்கப்பட்டவர்கள் அல்ல; பவுல் சொல்லுகிறான் மேலானவைகளை நாடுங்கள் என்பதாக. ஆகையால் நாம் கர்த்தருடைய ராஜ்யத்தை கட்ட அதிகமாய் பிரயாசப்படுகிறவர்களாய் காணப்பட வேண்டும்.

நான் மோட்சத்திற்கு போகவேண்டும் என்று இங்கும் அங்குமாக அலைந்து திரிகிற கோடிக்கணக்கான ஜனங்கள் உண்டு. அவர்களெல்லாம் மீட்படைய செய்வதும், அவர்களுக்கும் தேவராஜ்ஜியத்தின் நிச்சயத்தை கொண்டு வருவதும் தான், கர்த்தருடைய ராஜ்யத்தை கட்டுவதில் நாம் எடுக்கிற பிரயாசம். ஆகையால் பூமியில் வாழும் நாட்களில் ஒரு கூட்ட ஜனத்தை மீட்டெடுக்கவும், சபைகள் காட்டவும், சுவிசேஷம் எங்கும் பரவவும் செயல்படுவோம், கர்த்தருடைய ராஜ்யத்தை கட்டுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org