யோனா 2:9. நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Sk4sbwfzjR0
ஒரு மகனுக்கு அநேக நாட்கள், மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தது. ஒரு நாள் பரிசுத்த ஆவியானவர் அந்த இக்கட்டான சூழ்நிலையில் தேவனை நன்றாக துதிக்கவும் நன்றி செலுத்தவும் ஆவியில் ஒரு ஏவுதலை கொடுத்தார். ஜெபத்தின் முடிவில் ஒரு மகிழ்ச்சியும் சந்தோஷமும் வந்தது. அடைக்கப்பட்ட வாசல்கள் திறந்தது, ஜெபத்திற்கான பதிலும் கிடைத்தது, வார்த்தைகளை கொடுத்து தேற்றினார், கூடிய விரைவில் புதிய வேலையையும் கர்த்தர் கொடுத்தார். கர்த்தரிடம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளவும், அவருடைய உள்ளத்தை மகிழ்விக்கவும் சிறந்த ஒரு வழி, நாம் எல்லா சூழ்நிலையிலும் கர்த்தரை துதிப்பதும், அவருக்கு நன்றி செலுத்துதலுமே என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
யோனா ஒரு சமயத்தில் கீழ்ப்படிதலுள்ள சுபாவம் இல்லாதவனாக காணப்பட்டான். தேவனுடைய சிருஷ்டிப்பில் அநேகம் தேவனுக்கு கீழ்ப்படிந்தது, ஆனால் தன்னுடைய சாயலில் சிருஷ்டித்த மனிதன் கீழ்ப்படிய தவறிவிட்டான். யோனா 1:4ல் கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார், காற்று கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தது. யோனா 1:17ல் யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார், யோனா 2:10ல் கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது. இப்படியாக கடலில் வாழும் மீனும் தேவனுக்கு கீழ்ப்படிந்தது. யோனா 3:5ல் நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள் என்ற வசனத்தின்படி நினிவே மக்களும் தேவனுக்கு கீழ்ப்படிந்தார்கள். யோனா 4:6ல் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை முளைக்கக் கட்டளையிட்டார், ஒரு செடிகூட தேவனுக்கு கீழ்ப்படிந்தது. யோனா 4:7ல் தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார், நாம் ஒருபோதும் நினைத்திராத ஒரு பூச்சியும் தேவனுக்கு கீழ்ப்படிந்தது. யோனா 4:8ல் சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார், ஒரு அனல் காற்றும் தேவனுக்கு கீழ்ப்படிந்தது. இப்படி தேவனுடைய படைப்பில் காற்று, மீன், அனல்காற்று, செடி, பூச்சிகளெல்லாம் கீழ்ப்படிந்தது, ஆனால், அழைக்கப்பட்ட யோனா கீழ்ப்படிய தவறிவிட்டான்.
முடிவில், மீனின் வயிற்றிலிருந்த யோனா தன்னுடைய கீழ்ப்படியாமைக்கு மனஸ்தாபப்பட்டான், நெருக்கத்தில் கர்த்தரை நோக்கி கூப்பிட்டான், கர்த்தருடைய கிருபையை சிந்தித்தான். அதன் பின்பு அவன் எப்பொழுது துதியின் சத்தத்தை உயர்த்தினானோ அப்பொழுது மீன் அவனை கரையில் கக்கிப்போட்டது. இந்த வருஷத்தில் கீழ்ப்படியாத காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் வந்திருக்கலாம். இந்நாட்களில் கர்த்தரை நோக்கி நாம் ஜெபம்செய்து, மனம் திரும்பி, துதியின் சத்தத்தை உயர்த்துவோம். அப்பொழுது வரும் நாட்களில் கர்த்தர் ஒரு விடுதலையை கொடுத்து அவருடைய சித்தத்தை நம் மூலம் நிறைவேற்றுவது நிச்சயம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org