ஆபகூக் 1:2 கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே!
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/BMLXH-Idj2o
ஆபகூக் தீர்க்கதரிசி இந்த ஏன் என்ற கேள்வியை அடுத்தடுத்து முதலாம் அதிகாரத்தில் கேட்கிறான். உங்களில் அநேகருக்கு இந்த ஏன் என்ற கேள்வி இருக்கலாம். ஏன் எனக்கு இந்த வருஷத்தில் ஏமாற்றம்? ஏன் எனக்கு இந்த வியாதி? ஏன் எனக்கு வேலை இழப்பு? ஏன் எனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை? ஏன் எனக்கு இன்னும் குழந்தை பாக்கியம் காணப்படவில்லை என்ற கேள்வியோடு இருக்கலாம். ஆபகூக்கும் இதே ஏன் என்ற கேள்வியை கேட்டான். 1:3ல் நான் ஏன் அக்கிரமத்தை பார்க்க வேண்டும் ?நான் ஏன் தீவினையை பார்க்க வேண்டும் என்று கேட்கிறான். 1:13ல் துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன? என்ற கேள்வியை எழுப்புகிறான். 1:14ல் மனுஷரைச் சமுத்திரத்து மச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன? என்பதாக ஏன் என்ற கேள்வியையும் எழுப்புகிறான். இப்படி அடுக்கடுக்காக ஏன் என்று கேள்விகேட்ட ஆபகூக்கிற்கு அடுத்த அதிகாரத்தில் கர்த்தர் பதில் கொடுக்கிறார்.
ஆபகூக் 2:3ல் ஆண்டவர் கூறுகிறார் குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை என்பதாக. கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களுடைய எல்லாவிதமான ஏன் என்ற கேள்விக்கு கர்த்தர் கொடுக்கும் பதில் குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் செய்ய நினைத்தது ஒரு நாளும் தடைபடாது. இந்தவருஷத்தில் நீங்கள் எதிர்பார்த்த காரியம் நடைபெறவில்லையென்றால் அது தாமதம் என்று எண்ணாதிருங்கள். காரணம் அது தாமதிப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் அவருடைய நேரத்தில், அவர் சித்தத்தின் படி செய்வது தாமதம் என்ற அர்த்தம் அல்ல. அவர் எல்லாவற்றையும் நேர்த்தியாக அதினதின் காலத்தில் நேர்த்தியாக செய்து முடிக்கிறவர்.
ஆபகூக் கேட்ட கேள்வியெல்லாம் அவனது பாரமாக காணப்பட்டது என்று ஆபகூக் 1:1 கூறுகிறது. அவனுடைய பாரத்திற்கான பதிலை தேவன் ஆபகூக் 2:3ல் குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறிவிட்டார். அதுவரைக்கும் நாம் எப்படியாக காணப்பட வேண்டும் என்பதை ஆபகூக் 2:4ன் படி விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்ற வசனத்தின்படி நாம் விசுவாசத்துடன் காணப்பட வேண்டும். இப்படி ஆபகூக் பாரத்தோடு தொடங்கினான், கர்த்தரிடம் வாக்குத்தத்தை பெற்றுக்கொண்டான், விசுவாசத்தோடு இருக்கும்படி கர்த்தர் கற்றும் கொடுத்தார், முடிவில் அது பாடலோடு முடிவடைகிறது. அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம் என்ற வார்த்தையின்படி உங்களுடைய எதிர்பார்ப்பும் பாடலோடு முடிவடையும். ஆபகூக் பாரத்தோடு தொடங்கியது; ஆபகூக் பாடலோடு முடிவடைந்தது. நீங்களும் பாடல் பாடும் காலம் வரும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org