பெராக்காவில் கூடுவோம் (Let’s gather in Berachah).

நாலாம் நாளில் பெராக்காவிலே கூடினார்கள்; அங்கே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்; ஆதலால் அவ்விடத்திற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெராக்கா என்னும் பேர் தரித்தார்கள் (2 நாளாகமம் 20:26).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/sdMuAxSNlJ4

பெராக்கா என்பதற்கு ஆசீர்வாதம் அல்லது முழங்கால் முடக்கி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவது என்பது அர்த்தம். யோசபாத் யூதாவில் தோன்றின நான்காவது ராஜா. அவர் யூதாவை செம்மையாக அரசாண்ட ராஜாக்களில் ஒருவர். அவர் நன்கு ஆட்சி செய்து கொண்டு வந்த நாட்களில் திடீரென்று மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும் சேயீர் மலை தேசக்குடிகளும் யோசபாத்திற்கு விரோதமாக ஏராளமான கூட்டமாக யுத்தத்திற்குப் புறப்பட்டு வந்தார்கள். இவர்கள் நன்மைக்குத் தீமை செய்கிற ஜனங்களாக இருந்தார்கள். காரணம், இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வரும்போது இவர்கள் தேசங்கள் வழியாக வரக் கர்த்தர் அனுமதிக்கவில்லை, ஆகையால் இவர்களை நாசப்படுத்தாதிருந்தார்கள். ஆனால் இப்போது நன்மைக்குத் தீமை செய்கிற ஜனங்களாக காணப்படுகிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் நாம் நன்மை செய்திருந்தும் தீமை செய்கிறவர்களாய் நம்மைப் பகைக்கிறவர்களாய் ஜனங்கள் காணப்படக் கூடும். அவர்கள் முன்பாகவும் கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்.

யோசபாத் பயந்தான், பயம் எல்லாருக்கும் வரும்.  ஆகையால் தான் வேதவசனம் பயப்படாதே என்று சொல்லி நம்மைத் தேற்றுகிறது. உடனடியாக யோசபாத் தன் ஜனங்களோடு கர்த்தரைத் தேடுவதற்கு ஒருமனப்பட்டு யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறினான். பயமும் கலக்கங்களும் வரும் வேளையில், கர்த்தருடைய முகத்தைத் தேடி உபவாசித்து ஜெபிப்பது நல்லது. நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய  எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார் என்று சங்கீதக்காரன் சங். 34:4-ல் சொல்லுகிறான். அதுபோல அவருடைய முகத்தைத் தேடும் போது கர்த்தர் நம்மை எல்லா பயங்களுக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.

இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை என்று யோசபாத் அறிக்கையிட்டான். என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியவில்லை என்பதாகவும் கூறினான். நாம் பெலனில்லாதவர்கள் என்பதைக் கர்த்தர் அறிவார். அவர் பெலனில்லாதவர்களுக்குப் பெலனைக் கொடுக்கிறவர், சத்துவமில்லாதவர்களுக்குச் சத்துவத்தைக் கொடுக்கிறவர். நாம் இக்கட்டான சூழ்நிலைகளில் காணப்படும்போது என்ன செய்ய வேண்டும் என்று அறியாதிருக்கும் வேளையில் நம்முடைய கண்கள் யோசபாத்தைப் போல ஆண்டவரை நோக்கிப் பார்க்கவேண்டும். அவர் இக்கட்டில் நிச்சயமாக நமக்கு உதவி செய்கிற தேவன்.

கர்த்தர் தன்னுடைய தீர்க்க்தரியின் மூலமாகப் பேசி, இந்த யுத்தம் உங்களுடையதல்ல, என்னுடையது என்று திருவுளம் பற்றினார். கர்த்தரைச் சார்ந்து ஜீவிக்கிற ஜனங்களுடைய யுத்தம் அவருடையது. பழிவாங்குதல் எனக்குரியது என்று வாக்களித்திருக்கிறார். அது போல யோசபாத்தின் சேனை எந்த வழியாய் யுத்தத்திற்குக் கடந்து செல்லவேண்டும் என்றும் கற்றுக்கொடுத்தார். அதிகாலையில் யோசபாத் பரிசுத்தமுள்ள தேவனைத் துதிக்கவும் சேனைகளுக்கு முன்பாக நடந்து போவதற்கும் பாடகரை நிறுத்தினான்.  அவர்கள் பாடி துதிசெய்யத் துவங்கின போது எதிரிகளை ஒருவருக்கொருவர் விரோதமாக கர்த்தர் எழுப்பினார். அவர்கள் எல்லாரும் ஒருவரையொருவர் வெட்டிவீழ்த்தினர். எதிரிகளின் முழு சேனையும் அழிந்தது. நம்முடைய துதியில் பெரிய வல்லமை காணப்படுகிறது. ஆகையால் தான் வாய்களை திறந்து கர்த்தரை துதிக்க வெட்கப்படக் கூடாது. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப்பலிகளில் அவர் பிரியமாயிருக்கிறக் கர்த்தர்;.

யோசபாத்தும் அவன் ஜனங்களும் எதிரிகள் பிரேதங்களாகக் காணப்பட்டதைக்கண்டு மூன்றுநாளாய்க் அவர்களைக் கொள்ளையிட்டார்கள். ஆடை ஆபரணங்கள் அவ்வளவு திரளாய் இருந்தது. நாலாம் நாளில் பெராக்காவில் கூடி கர்த்தருக்கு நன்றி செலுத்தினார்கள். பின்பு ர்த்தர் அவர்களை சத்துருக்கள் பேரில் களிகூரச் செய்தபடியால் மகிழ்ச்சியோடே எருசலேமுக்கு திரும்பி தேவாலயத்தில் கர்த்தரை ஆராதித்தார்கள். கர்த்தர் உங்கள் சத்துருக்களின் மேல் உங்களைக் களிகூறச் செய்வார். உங்களுக்கு விரோதமாக, ஊழியங்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களை தேடியும் காணாதிருக்கும்படிக்குச் செய்வார். அவர் ஜெயத்தைக் கொடுக்கும் போது, அனேக நன்மைகளைக் கட்டளையிடும் போது,  ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறவர்களாக காணப்படவேண்டும். பெராக்காவில் தேவனுடைய சமூகத்தில் ஆண்டவரை நன்றி நிறைந்த இருதயத்தோடு தொழுதுகொள்ள வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.   

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar