…. அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்(2 கொரி. 1:10).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/xZ15_9SnkPk
நாம் ஆராதிக்கிற தேவன் நம்மை தப்புவிக்கிறவர், விடுவிக்கிறவர். ஒரு வருஷத்தின் கடைசி நாட்களில் காணப்படுகிற நம்மை எத்தனையோ ஆபத்துகள், வியாதிகள், துன்மார்க்கர்களுடைய திட்டங்கள், சத்துருவின் மறைவான கண்ணிகள் எல்லாவற்றிலுமிருந்து தப்புவித்து நம்மைப் பாதுகாத்தார். அதற்காக நன்றி நிறைந்த இருதயத்தோடு நாம் ஆண்டவரைத் துதிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால், கர்த்தர் தாமே நமக்கு பக்கத்திலிராவிட்டால், அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள் என்று சங்கீதக்காரன் சங்.124ல் பாடினார். நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார், அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார் என்று மூன்று எபிரேய வாலிபர்களாகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு முன்பு முழக்கமிட்டார்கள். அப்படியே அவர்களைக் கர்த்தர் அக்கினியின் உக்கிரத்திலிருந்து தப்புவித்தார். சவுல் ராஜாவிடம் தாவீது கூறினான், என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்பதாக. கர்த்தர் அப்படியே அவனை கோலியாத்தின் கைக்கு தப்புவித்தார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, பலவிதமான இக்கட்டுகளிலிருந்து இந்த வருடம் முழுவதும் உங்களைத் தப்புவித்த தேவன், இனிமேலும் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். உலகத்தின் சூழ்நிலைகளைப் பார்க்கும் போது யுத்த மேகங்கள் எங்கும் காணப்படுகிறது. எப்பொழுது, எந்த தேசத்தில் கலவரங்களும், யுத்தங்களும் துவங்கும் என்பதைக் கூட கணிக்கமுடியாதபடிக்கு சூழ்நிலைகள் காணப்படுகிறது. ஆபத்துகள் நிறைந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புது புது வியாதிகளின் செய்திகளைக் கேள்விப் படுகிறோம். பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நம்முடைய தேசங்களில் காணப்படுகிறது. விமான விபத்துகளும், மற்ற வாகன விபத்துகளும் அடிக்கடி சம்பவிக்கிறது. பவுல், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம், புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன என்று 2 கொரி. 7:5ல் எழுதியதைப் போல நமக்குள்ளும் பலவிதமான பயங்கள் காணப்படக் கூடும். பயப்படாதிருங்கள், நீங்கள் உண்மையாய் கர்த்தரைச் சேவிப்பதினால் இதுவரைக்கும் உங்களைத் தப்புவித்து பாதுகாத்துக் கொண்டு வருகிறவர், இனிமேலும் தப்புவிக்க வல்லவராய் காணப்படுகிறார். புது வருடத்திலும் உங்களைக் கண்மணி போல காத்திடுவார். உங்கள் போக்கிலும் வரத்திலும் உங்களோடு காணப்படுவார். மோசே, இஸ்ரவேல் சபை புறப்படும் போதும், தங்கும் போதும், கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக, உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான், தங்கும்போது, கர்த்தாவே, அநேக ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக என்று சொல்லுவான் என்று எண் 10:35,36ல் வாசிக்கிறோம். அவன் வேண்டுதலின்படியே கர்த்தர் அவர்களோடு கூடக் காணப்பட்டார். அவர்களுக்கு முன்பாக ஒருவரும் நிற்கமுடியவில்லை. நீங்களும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்படும் போது ஜெபத்தோடு புறப்படுங்கள், திரும்பி வீட்டிற்கு வரும் போது கர்த்தர் உங்களோடு வந்து தங்கும்படி வேண்டுதல் செய்யுங்கள். அப்போது உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களோடு இருப்பேன் என்று வாக்குக் கொடுத்தவர், உங்களோடிருந்து உங்களைத் தப்புவிப்பார், உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae