பிந்தின ஆலயத்தின் மகிமை (The latter glory of this house).

ஆகாய் 2:9. முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/miURpI67s6w

ஆண்டவர் எதற்காக ஒரு வருஷத்தை நமக்கு கூட்டிக்கொடுக்கிறார். காரணம் நாம் அவருடைய மகிமையை இன்னும் அதிகமாக காண்பதற்காக. இதுவரைக்கும் நீங்கள் கண்ட ஆண்டவருடைய மகிமையை பார்க்கிலும் இனிவரும் நாட்களில் பார்க்கும் மகிமை பெரிதாய் இருக்க போகிறது.

பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்ட மேகம் அக்கினி போன்றவைகள் மகிமைக்கு அடையாளமாக காணப்படுகிறது. அந்த மகிமை கற்களினாலான கட்டிடங்கள் மேல் இருந்தது. ஆனால், இப்பொழுது ஜீவனுள்ள கற்களாகிய நம்மேல் அவருடைய மகிமை காணப்படுகிறது. நாம் ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாக கட்டப்பட்டு வருகிறோம் என்று பேதுரு கூறுகிறார். பழைய ஏற்பாட்டு காலத்தில் சாலொமோன் கட்டின ஆலயத்திலே 120 ஆசாரியர்களால் நிற்கமுடியாமல் இருந்ததென்றால், இப்பொழுது கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு இயேசுவை அஸ்திபாரமாக கொண்ட சபையாகிய நம் மீது அவருடைய மகிமை இறங்கும்போது எவ்வளவு அதிகமாய் இருக்கும். நாம் ஒவ்வொருவரும் வரப்போகிற நாட்களில் கர்த்தருடைய மகிமையை சுமந்து செல்லும் பாத்திரமாக இருக்கப்போகிறோம்.

தேவனின் முதலும் முடிவுமான தீர்மானமும் மகிமையுள்ள சபையாய் நாம் இருக்க வேண்டும் என்பதே. அதை தான் பவுல் கூறுகிறார், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார் (எபே 5:27) என்பதாக. பரிசுத்தமுள்ள சபை அது மகிமையுள்ள சபை, பிழையற்ற சபை தான் மகிமையான சபை என்பதை பவுல் தெளிவுபடுத்துகிறார். மகிமை என்றால் எதோ வானத்திலிருந்து மேகம் இறங்கும் என்பதாய் நாம் நினைத்துவிடக்கூடாது. தேவ மகிமை வெளிப்படுவதற்கான முக்கியமான அடையாளம், அது பரிசுத்தம் பிழையற்ற சபையாக காணப்படும் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு சபையில் மகிமை காணப்படுகிறதோ, அங்கே, மகிழ்ச்சி உண்டாயிருக்கும், அங்கே நீதி உண்டாயிருக்கும், அங்கே இளைப்பாறுதல் உண்டாயிருக்கும். மகிமையுள்ள சபை உலகை அரசாளும் சபை; மகிமையுள்ள சபை கனிகொடுக்கும் சபை. மகிமையுள்ள சபை தான் வளமான சபை, ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் அந்த சபை நிறைந்திருக்கும், தேவனுடைய பரிபூரணம், மகிமையின் ஐஸ்வரியம் திரளாய் மகிமையுள்ள சபை மீது காணப்படும். மகிமையுள்ள சபை பிரகாசிக்கும் சபை. உலகத்தை கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்துவிட்டார்கள் என்று சொல்ல செய்யும் மகிமை உங்கள் மேல் நிழலிடும். கர்த்தருடைய மகிமை வெளியரங்கமாகும். மானிடர்கள் யாவரும் அதை பார்ப்பார்கள். முந்தின திராட்சைரசம் ஆல்பா, பிந்தின திராட்சைரசம் ஒமேகா. முத்தின திராட்சைரசத்தை விட பிந்தின திராட்சைரசம் சுவையாக இருந்தது. அதுபோல, முந்தின ஆலயத்தின் மகிமை ஆல்பா, பிந்தின ஆலயத்தின் மகிமை ஒமேகா. முந்தின ஆலயத்தின் மகிமையை பார்க்கிலும் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாய் இருக்கும். நீங்கள் பிந்தின ஆலயத்தின் மகிமையை வரப்போகிற நாட்களில் காணப்போகிறீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org