ஒருவருக்கொருவர் ஆசீர்வாதமாயிருங்கள் (Be a blessing to one another).

மரியாள் சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து,      எலிசபெத்தை வாழ்த்தினாள்(லூக். 1:40).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/on3RKPRVI_U

சகரியாவின் மனைவியாகிய எலிசபெத்து,      கர்த்தருடைய கிருபையினால் வயோதிப நாள்களில் கர்ப்பம் தரித்தாள். தேவதூதன் சகரியாவை நோக்கி,      பயப்படாதே,      உன் வேண்டுதல் கேட்கப்பட்டது,      உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள்,      அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக என்றான். அதன்பின்பு சுமார் ஆறு மாதங்கள் கழிந்து காபிரியேல் தூதன் மரியாள் என்ற இளம் கன்னிகையிடம் வந்து பயப்படாதே,      நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய்,      இதோ,      நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்,      அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்றான். உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்,       மலடியெனப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம் என்று கூறி தேவதூதன் போய்விட்டான். எலிசபெத்து கர்ப்பவதியாய் காணப்படுகிறாள்  என்பதைக் கேள்விப்பட்ட மரியாள்,      சுமார் எண்பதிலிருந்து நூறு மைல் தொலைவில் அவள் வாழ்ந்து கொண்டிருந்த மலைதேசத்திலுள்ள  பட்டணத்திற்குக் கடந்து சென்று அவளை மனதார வாழ்த்தினாள். வயோதிப வயதில் கர்ப்பம் தரித்ததினால் பலவிதமான கஷ்டங்கள் அவளுக்குக் காணப்படும்  என்பதைப் புரிந்து கொண்ட மரியாள்,      மூன்று மாதங்கள் அவளோடு தங்கியிருந்து உதவிசெய்தாள். இந்நாட்களில் காணப்படுகிற இளைஞர்கள்,      வளர்ந்தவர்கள் கூட,      ஒருவருக்கொருவர் வாழ்த்துவதில்லை,      வயோதிகர்களுக்கு உதவி செய்ய வேண்டும், அவர்களை விசாரிக்கவேண்டும் என்றும் எண்ணுவதில்லை. வயோதிப பெற்றோர்களைக் கூட விசாரித்து,      உதவி செய்யாத விசுவாசிகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளுகிறவர்கள் திரளாய் காணப்படுகிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே,      பண்டிகை காலங்களில் வயோதிபர்கiளையும்,      அனாதைகளையும்,      திக்கற்றவர்களையும் விசாரியுங்கள். சிலவேளைகளில் நாம் அறியாமல் தேவ தூதர்களையும்,      இயேசுவையும் கூட விசாரிக்கிறவர்களாய் காணப்படுவோம்.

எலிசபெத்து,      தன்னை வாழ்த்தின மரியாளுக்கு,      வயோதிபத்தினிமித்தம் கைமாறு ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆனால் அவள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டாள் என்று லூக். 1:43 கூறுகிறது. ஆகையால் அவள் உரத்த சத்தமாய் மரியாளை வாழ்த்தி,      ஆசிர்வதித்தாள். ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்,      உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது,       என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. இதோ,      நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே,      என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. விசுவாசித்தவளே பாக்கியவதி,      கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்று தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கூறி ஆசீர்வதித்தாள். மானிடர்களில் மரியாளை ஆண்டவருடைய தாயார் என்று முதல்முதலாக கூறினவள் எலிசபெத்தாய் காணப்படுகிறாள். கர்த்தருடைய பிள்ளைகள் நீங்கள் வயோதிகர்களுக்கு உதவி செய்யும் போது,      திருப்பித் தருவதற்கு அவர்களிடத்தில் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களால் உங்களை ஆசீர்வதிக்க முடியும்,      அந்த ஆசீர்வாதங்கள் உங்கள் மேலும் உங்கள் சந்ததிகள் மேலும் தங்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவர்கள் கர்த்தருடைய ஆவியினால் நிறைந்து உங்களை வாழ்த்தி,      ஆசீர்வதிக்கும் போது,      அது ஆம் என்றும் ஆமென் என்றும் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae