சக 4:6. அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/eLcaMrGRABg
நம்முடைய ஆவிக்குரிய ஓட்டம் இந்த வருஷத்தில் சரியாக இருக்க வேண்டுமென்றால், பரிசுத்த ஆவியானவர் தாமே முழுவதுமாக நம்மை ஆட்கொண்டு நடத்த நம்மை நாமே விட்டுக்கொடுக்க வேண்டும். ஆவிக்குரிய போராட்டத்தில் நமக்கு உதவாதவைகள் நம்முடைய புத்தி, சாதுரியம், பேச்சுத்திறன், விஞ்ஞான அறிவு, சமுதாய அந்தஸ்து, பணபலம் போன்றவைகள் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். செருபாபேலுக்கு அவன் செய்ய வேண்டிய வேலை பெரிய இமயமலையை போல தான் இருந்தது. இவ்வளவு பெரிய இமயமலையை நான் எப்படி எட்டமுடியும் என்று செருபாபேல் நினைத்திருப்பான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நீங்கள் காணப்படலாம். எனக்கு முன்பாக இந்த வருஷத்தில் மலை போன்ற வேலைகள் காணப்படுகிறது, நான் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் அநேகம் காணப்படுகிறது, இதை எப்படி நான் சமாளிப்பேன் என்றெண்ணி கொண்டிருக்கலாம். அதை தான் கர்த்தர் செருபாபேலுக்கு தெளிவுபடுத்துகிறார், உன்னுடைய பலத்தினாலும் அல்ல, உன்னுடைய பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்பதாக. என்னுடைய “ஆவியினாலேயும்” ஆகும் என்று சொல்லவில்லை. அதாவது, பலரால் ஆகும், அதுபோல எந்நாளும் ஆகும் என்று கர்த்தர் சொல்லவில்லை. யாராலும் செய்யமுடியாது, ஆனால், கர்த்தருடைய ஆவியானவர் ஒருவராலேயே செய்யமுடியும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆகையால் நாம் ஒருநாளும் நம்முடைய சொந்த பலத்தை சார்ந்து ஜீவிக்கிறவர்களாய் காணப்படலாகாது. நாம் குறைவோடு இருக்கும்போது எளிதாக ஆவியானவர் பலத்தை சார்ந்து ஜீவிக்கமுடியும். ஆனால், நாம் நிறைவாய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கையில், ஆவியானவர் பலத்தில் சார்ந்துகொள்ளாமல், பணம் செல்வாக்கு போன்ற பலத்தை சார்ந்து ஜீவிக்கிறவர்களாய் அநேக நேரங்களில் காணப்படுகிறோம். பல தேவ மனிதர்களும் தங்களுடைய சொந்த பலத்தை சார்ந்து ஜீவித்து வாழ்க்கையில் தோல்வியையே பார்த்தார்கள். ஆபிரகாம் தன்னுடைய பலத்தை சார்ந்து இஸ்மவேலை பெற்றெடுத்தான். யாக்கோபு தன்னுடைய தந்திரத்தினால் சேஷ்டபுத்திர பாகத்தை பெற முயற்சித்தான். மோசே தன்னுடைய பலத்தால் எகிப்தியன் ஒருவனை கொன்றான். பேதுரு தன்னுடைய பலத்தால் எல்லாரும் கைவிட்டாலும் நான் உம்மை விடுவதில்லை என்றெல்லாம் வசனம் பேசினான். தன்னுடைய மாம்ச பலத்தை சார்ந்து ஜீவிக்கிறவர்களுக்கு தோல்வி தான் வரும். கர்த்தருடைய ஆவியானவருடைய பலத்தை சார்ந்து ஜீவிக்கிறவர்களுக்கு மாத்திரம் தான் ஜெயம் வரும். இன்றிலிருந்து ஆவியானவருடைய பலத்தை சார்ந்து ஜீவியுங்கள். அவரே உங்களுக்கு இந்த வருஷம் முழுவதும் ஜெயத்தை கொடுப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org