ஆசீர்வாதத்தை வருஷிக்கபண்ணுவேன் (Pour out so great blessing).

மல் 3:10. என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/6GaQI-4k4nU

இந்த வருஷத்தில் ஆண்டவர் நமக்கு இடம் கொள்ளாமற்போகுமட்டும் ஆசீர்வாதத்தை வருஷிக்க பண்ணுவார். கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்க வேண்டுமென்றால் நாம் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வர வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். தசமபாகம் கட்டாயமா என்ற கேள்வியெல்லாம் அநேகர் எழுப்புவார்கள். இப்படிப்பட்ட கேள்வி நன்றியறிதல் இல்லாதவர்களின் கேள்வி. தேவன் அருளிய நன்மைகளை எண்ணி நாம் பத்தில் ஒன்றுக்கு குறைவாய் கொடுக்க முடியுமா? என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள கொண்டும். C T Stud என்ற ஊழிக்காரர் சொன்னார் கிறிஸ்து எனக்காய் மரித்திருப்பாரானால், எனது தியாகம் எதுவும் பெரிதல்ல என்பதாக. தசமபாகம் பிரமாணம் இல்லாதிருக்கையிலேயே ஆபிரகாம் தசமபாகம் செலுத்தினான். எல்லாரும் விரும்புகிற ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் எனக்கு வேண்டும் என்று சொல்லுகிறவர்கள், ஆபிரகாமை போல விருப்பத்தோடு தசமபாகம் செலுத்த பல கேள்விகளை நாம் ஏன் எழுப்ப வேண்டும்.

நம்மை பாதிக்காத தொழுகை ஒரு காசுக்கு பிரயோஜனமாக இராது என்றார் ஒரு ஊழியக்காரர். அன்னாளுக்கு தன் மகனை கொடுப்பதை விட ஒரு மாட்டை கொடுப்பது சுலபமாக இருந்திருக்கும். அவள் தனக்கிருந்த ஒரு மகனை, நீண்ட நாள் காத்திருந்து பெற்ற குழந்தையை ஆண்டவருக்கென்று கொடுத்துவிட்டாள். அதுபோல, பாவியாகிய ஒரு பெண் இயேசுவிடம் வந்தாள். அவள் இயேசுவிடம் வந்து அழுதாள், அவர் பாதத்தை துடைத்தாள். நாமும் இவையெல்லாம் இலகுவாக செய்துவிடுவோம். ஒவ்வொரு ஆராதனையிலும் ஜெபக்கூட்டத்திலும் நம்முடைய தேவைக்காக எவ்வளவு அழச்சொன்னாலும் அழுதுவிடுவோம், எவ்வளவு துடைக்க சொன்னாலும் துடைத்துவிடுவோம். அந்த பாவியாகிய ஒரு ஸ்த்ரீ ஒரு படி மேலே போய் தனக்கிருந்ததில் விலையுயர்ந்ததை கொடுத்துவிட்டாள்.

நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே (மத் 23:23) என்றே இயேசு கற்று கொடுத்தார். புதிய உடன்படிக்கையில் வாழ்கிற நாம் மேலானவைகளை செய்யவே அழைக்கப்பட்டிருக்கிறோம். உற்சாகமாக, தாராளமாக, தியாகமாக கொடுக்க வேண்டுமென்றே கர்த்தர் சொல்லுகிறார். அப்படியென்றால் நமக்கு தசமபாகம் என்பது துவக்கமாய் இருக்கலாம். ஆனால் நாம் அதில் வளர வேண்டும்.

நாம் தகுதியானவருக்கு தகுதியானதை கொடுப்பது தான் உண்மையான தொழுகை. மிச்சம் மீதியை கர்த்தருக்கு கொடுப்பது தொழுகையல்ல; இருப்பதில் விலையுயர்ந்ததை முதலாவது கர்த்தருக்கு கொடுப்பது தான் தொழுகை. இந்த வருஷத்தில் இந்த ஒரு தீர்மானத்தை எடுங்கள். கர்த்தருக்கு படைக்கும் காணிக்கைகள், தசம பாகங்கள் தகுதியானவருக்கு படைக்கும்போது சிறந்ததை கொடுக்க தீர்மானம் செய்யுங்கள். அப்பொழுது கர்த்தர் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org