எபிரெயனாகிய ஆபிராம் (Abram The Hebrew).

தப்பியோடின ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதை அறிவித்தான், ஆபிராம் தன்னோடே உடன்படிக்கை செய்திருந்த மனிதராகிய எஸ்கோலுக்கும் ஆநேருக்கும் சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சமபூமியிலே அப்பொழுது குடியிருந்தான் (ஆதி. 14:13). 

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ASAXHrKg3Z4

முதன்முதலில் எபிரேயன் என்ற வார்த்தை வேதத்தில் எழுதப்பட்டுள்ளதையும்,  ஆபிராம் எபிரேயன் என்று அழைக்கப்படுவதையும் இந்த வசனத்தின் மூலம் அறியமுடிகிறது.  எபிரேயன் என்பதற்குக் கடந்து வந்தவன் (cross over or pass through), அதாவது நதிக்கு அப்புறத்திலிருந்து அதைக் கடந்து வந்தவன் என்பது அர்த்தம். நதிக்கு அப்புறத்திலிருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான் தேசமெங்கும்  சஞ்சரிக்கச்செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு  ஈசாக்கைக் கொடுத்தேன் என்று யோசுவா 24:3ல் எழுதப்பட்டிருக்கிறது.  ஆபிராம்  ஐபிராத்து ததிக்கு  அப்புறத்திலே குடியிருந்தபோது வேரே  தேவர்களைச் சேவித்தான். ஆனால் கிருபையாய் கர்த்தர் அவனைக்  கண்டுபிடித்து அவனைக் கானானுக்கு நேராய் அழைத்துக் கொண்டு வந்தார். யோசுவா இதைக்குறித்துக் கூறுகையில்,  நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள். கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள், நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம் பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான். 

கர்த்தருடைய பிள்ளைகளே, நம்முடைய வாழ்க்கையிலும் இந்த இரண்டு பகுதிகள் காணப்படுகிறது. கர்த்தரை உண்மையாய் அறிவதற்கு முன்பு, நதிக்கு அப்புறத்தில் விக்கிரகங்களை ஆராதிக்கிறவர்களாய் காணப்பட்ட வேளைகளட உண்டு. சிலர் புற மார்க்கத்தில் காணப்பட்டார்கள், சிலர் பொருளாசையாகிய  விக்கிரகத்தைச்  சேவிக்கிறவர்களாய் காணப்பட்டார்கள், சிலர் பேர் புகழ் ஆடம்பரம் என்ற விக்கிரகங்களைச் சேவிக்கிறவர்களாய் காணப்பட்டார்கள். இன்றைக்கும் பெயர் கிறிஸ்தவர்களாய் காணப்பட்டு  இப்படிப்பட்ட அனேக விக்கிரகங்களைச்  சேவிக்கிறவர்கள் உண்டு. ஆபிரகாமுக்கு  தரிசனமான மகிமையின் தேவனுடைய கிருபை நம்மையும் கண்டுபிடித்தது. அவர் நம்மை அந்தகாரத்திலிருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தார். நாம் ஞானஸ்நானம் என்னும் தேவ ஆலோசனைக்கு கீழ்ப்படிந்த  வேளையில் நம்முடைய பழைய வாழ்க்கையை நதிக்கு அப்புறத்தில் விட்டுவிட்டு புது சிருஷ்டியின் அனுபவத்திற்குள்ளாய் வந்திருக்கிறோம். ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் பழையவைகள் யாவும் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின என்ற வசனத்தின்படி  பழையவற்றை முற்றிலும் நம்மை விட்டு அகற்றி விடுவோம். யோசுவாவைப் போல, நாம் குடும்பமாய் கர்த்தரை மட்டும் சேவிக்க நம்மை முழுமையாய் அர்ப்பணிப்போம். அப்போது கர்த்தர் ஆபிராமுக்கு கொடுத்த அத்தனை ஆசீர்வாதங்களையும் உங்களுக்கும் இந்த புதிய வருடத்தில் தந்து, உங்களை ஆசீர்வதித்துப்  பெருகப்பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae