ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார், பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான், நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்(யாத். 33:11).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/DZLArtSLI_Q
மோசே ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசித்தான், தேவன் அவனோடு முகமுகமாய் பேசினார். சோதோமை அழிப்பதற்கு முன்பு திரித்துவத்தில் ஒருவராகிய இயேசு தோன்றி ஆபிரகாமோடு பேசினது போல, மோசேயோடும் முகமுகமாய் பேசினார். பிதாவாகிய தேவனை ஒருவரும் பார்க்க முடியாது, பார்த்து உயிரோடிருக்கவும் முடியாது. மோசே தேவனோடு பேசின பின்பு ஜனங்களைச் சந்திக்கப் பாளையத்திற்குத் திரும்பினான். ஆனால் வாலிபனாகிய யோசுவா, ஆசரிப்புக் கூடாரத்தை விட்டு பிரியாதிருந்தான். வாலிப வயதிலேயே தேவ சமூகத்தை அதிகமாய் வாஞ்சிக்கிறவனாய் காணப்பட்டான். மோசேயின் பணிவிடைக் காரனாய் காணப்பட்டாலும், மோசேயைப் போல தேவசமூகத்தை அதிகமாய் விரும்புகிறவனாய் காணப்பட்டான். யோசுவாவைப் போல இந்நாட்களில் காணப்படுகிற வாலிபர்களும், தேவ ஜனங்களும் அதிகமாக தேவசமூகத்தை தேடுகிறவர்களாகக் காணப்பட வேண்டும்.
யோசுவா தேவனுடைய பிரசன்னத்தை விரும்பியதால் அவனை ஒரு தலைவனாகக் கர்த்தர் உயர்த்தினார். மோசே மரித்த பொழுது, கர்த்தர் யோசுவாவை நோக்கி நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை, நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன், நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. பலங்கொண்டு திடமனதாயிரு, இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய் என்றார். அவன் முப்பத்தியொரு ராஜாக்களையும், ஏழு ஜாதிகளையும் துரத்தி கானானை இஸ்ரவேல் ஜனங்களுக்காகப் பங்கிட்டான். ஜனங்கள் யோசுவாவிற்கு கீழ்ப்படிந்து, நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம், நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம். நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்ததுபோல உமக்கும் செவிகொடுப்போம், உம்முடைய தேவனாகிய கர்த்தர் மாத்திரம் மோசேயோடே இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக என்று அவனுக்கு அடங்கியிருந்தார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் தேவப் பிரசன்னத்தை விரும்பும் போது, கர்த்தர் உங்களையும் தலைவர்களாய் உயர்த்தி அதிகாரப்படுத்துவார். நீங்கள் வாலாய் அல்ல தலையாயிருப்பீர்கள் என்பது கர்த்தருடைய வாக்குத் தத்தம். சவுலின் தோளின் கீழ் மற்றவர்கள் காணப்பட்டதைப் போல, கர்த்தர் உங்கள் தலைகளை மற்றவர்கள் நடுவில் உயர்த்த விரும்புகிறார். தாவீதிற்கு ஆயிரம் நாளைப் பார்க்கிலும் கர்த்தருடைய ஆலயத்தில் காணப்படுகிற ஒரு நாள் மேன்மையானது. ஆகையால் ஆட்டிடையனைக் கர்த்தர் உயர்த்தி அரசனாக்கினார். இந்நாட்களில் தேவப்பிரசன்னத்தையும், சபை கூடிவருதலையும் விரும்புகிறவர்களின் எண்ணிக்கை குறைவு. வாலிபர்களும், பெரியவர்களும் தங்கள் உயர்வுக்காக மாமிசத்தில் முயல்கிறார்களே தவிர கர்த்தரிடத்திலிருந்து வரும் உயர்வைப் பற்றிய எண்ணம் இல்லாதவர்களாய் காணப்படுகிறார்கள். நீங்கள் தேவப்பிரசன்னத்தை தேடும் போது, உயர்வுகள் உங்களை தேடிவரும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae