லூக்கா 11:50 ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/CvT8aFjI44c
ஆபேல் என்ற பெயரின் முதலெழுத்து A, சகரியா என்ற பெயரின் முதலெழுத்து Z.
ஆபேல் தன்னுடைய சகோதரன் காயினால் கொலைசெய்யப்பட்டான். இதை ஆதி 4:8 வசனத்தில் வாசித்து அறிந்துகொள்ளலாம். ஆபேலின் காணிக்கையை கர்த்தர் ஏற்றுக்கொண்டார், காயீனின் காணிக்கையை கர்த்தர் நிராகரித்தார். அதனால் மூர்க்கங்கொண்ட காயீன் தன் சகோதரனென்றும் பாராமல் கொலை செய்துவிட்டான். அங்கேயே அன்பு தணிந்துவிட்டது என்றால் கடைசி காலங்களில் எப்படியாய் அன்பு தணிந்துபோகும் என்று சிந்தித்து பாருங்கள். அன்பு என்றால் என்ன விலை என்று கேள்விகேட்கும் காலத்திற்குள் நாம் வந்திருக்கிறோம் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். சகரியாவின் மரணம் 2 நாளா 24:20-22 வசனங்களில் எழுதப்பட்டிருக்கிறது. காலவரிசைப்படி சகரியாவின் இரத்த சாட்சி கடைசியாக இல்லாவிட்டாலும், எபிரேய வேதாகமத்தில் கடைசியாக இடம்பெற்றிருப்பது 2 நாளாகமம் என்பதால், சகரியாவின் இரத்த சாட்சி கடைசியாக எழுதப்பட்டுள்ளது.
இப்படி உலகத்தோற்றமுதல் இந்நாள் வரை இரத்த சாட்சியாக இயேசுவுக்காக உயிரை தியாகம் செய்தவர்களின் எண்ணிக்கை கடற்கரை மணலை போல காணப்படுகிறது. இயேசு என்ற இரட்சகருக்காக, கொதித்த எண்ணையில் போடப்பட்டு கொலைசெய்யப்பட்டவர்களும், சிங்கங்களின் வாய்க்கு இரையானவர்களும், தலைகீழாக கட்டி கொலைசெய்யப்பட்டவர்களும், தீயை உடலில் பற்ற வைத்து கொலை செய்யப்பட்டவர்களும், துண்டிக்கப்பட்டவர்களும் அநேகமாய் இருக்கிறார்கள். இவர்களின் இரத்தங்களெல்லாம் இயேசுவிடம் முறையிட்டுக்கொண்டே இருக்கிறது. எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அதற்கு, அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது (வெளி 6:10,11).
இப்படி ஆண்டவருக்காக இரத்த சாட்சியாக மரித்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று வெளி 20:4 கூறுகிறது. அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். கிறிஸ்துவுடன் கூட ஆயிரம் வருஷம் அரசாட்சி செய்யும் பாக்கியத்தை இரத்தசாட்சியாக மரித்தவர்கள் பெற்றுக்கொள்ளுவார்கள். ஆகையால் இக்காலத்து பாடுகள் இனிவரும் மகிமைக்கு ஒப்பானதல்ல என்ற வசனத்தின்படி, நீங்கள் கிறிஸ்துவுக்காக படுகிற பிரயாசங்கள், சோதனைகளை கண்டு மனமடிந்து போகாதிருங்கள். மகிமையில் நாம் கிறிஸ்துவோடு யுகா யுகமாக கிரீடங்களை பெற்றுக்கொண்டு மகிழப்போகிறோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org