பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபையினிடத்திற்கு…. வந்து சேர்ந்தீர்கள் (எபி. 12:23,24).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/pfSJggTaCGI
சபையின் அங்கங்களாய் காணப்படுகிற, ஆண் பெண் இருபாலரும், முதற்பேறானவர்கள் என்று அழைக்கப்படுகிறதைப் மேற்குறிப்பிட்ட வசனத்தின் மூலம் அறியமுடிகிறது. ஆகையால் தேவனுடைய முதற்பேறானவர்களுக்காக அவர் வைத்திருக்கிற சேஷ்ட புத்திர ஆசீர்வாதங்களுக்கு நீங்கள் பாத்திரர்களாய் காணப்படுகிறீர்கள். ஆனால் இதே எபிரேயர் 12வது அதிகாரம் 16, 17ம் வசனங்களில், ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள், அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான் என்பதாக எச்சரிப்பின் செய்தி எழுதப்பட்டிருப்பதை வாசிக்கமுடிகிறது. முதற்பலன்களுக்குரிய சேஷ்டபுத்திர பாகத்தை ஏசா அசட்டை பண்ணினதையும், பின்பு ஆசீர்வாதத்தை விரும்பியும் பெற முடியாமல் போனான் என்பதைக் குறித்தும் எழுதப்பட்டிருக்கிறது.
முதற்பலன்களின் ஆசீர்வாதம் என்பது தகப்பனுடைய ஆஸ்திகளில் இரண்டு மடங்கும், ஆசாரிய பட்டமும், ராஜாவாகிற தகுதியையும் உள்ளடக்கியதாகும். யாக்கோபின் மூத்த குமாரன் ரூபன் தன் தகப்பனுடைய மஞ்சத்தில் ஏறி பாவம் செய்ததின் நிமித்தம் சேஷ்ட புத்திர பாகத்தை இழந்து போனான். ஆகையால் தகப்பனுடைய இரட்டிப்பான சுதந்திரம் யோசேப்பிற்கு கடந்து சென்றது. யோசேப்பின் குமாரன், எப்பிராயுமும், மனாசேயும் பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களின் பட்டியலில் இணைக்கப்பட்டு இஸ்ரவேலின் காணியாட்சியில் இரண்டு பகுதிகளைப் பெற்றுக் கொண்டார்கள். அதுபோல ஆசாரியப்பட்டம் லேவி கோத்திரத்திற்குக் கடந்து சென்றது, ராஜரீகம் யூதாவிற்குச் சென்றது. ரூபனைபோல ஏசாவும் தகப்பனுடைய சேஷ்டபுத்திர ஆசீர்வாதத்தை அசட்டைச் செய்து, அதை இழந்து போனான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் ஆண்டவருடைய முதற்பேறான பிள்ளைகள். முதற்பேறானவர்களுடைய சர்வ சங்கமாகிய சபையின் அங்கத்தினர்கள். கர்த்தர் உங்களை ராஜரீக ஆசாரியக் கூட்டமாயும் அழைத்திருக்கிறார். ஆகையால் நீங்கள் கர்த்தருடைய எல்லா ஆசீர்வாதங்களுக்கும் உடன் சுதந்திரர்களாய் காணப்படுகிறீர்கள். கர்த்தர் உங்களுக்கு இரட்டிப்பான நன்மையைத் தருவேன் என்றும் வாக்களித்திருக்கிறார். ஆனால் பாவம் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை இழந்து போகும் படிக்குச் செய்யும். ஆகையால் பாவத்தின் வாழ்க்கையை வெறுத்து பரிசுத்தமாய் ஜீவிக்க உங்களை அாப்பணியுங்கள். ஏசாவைப் போல ஆண்டவருடைய ஆசீர்வாதங்களை அசட்டை செய்யாதிருங்கள். முதற்பேறானவர்களுடைய சபையின் அங்கங்களாய் காணப்படுங்கள், சபை கூடிவருதலை அசட்டைச் செய்யாதிருங்கள். அப்போது யோபுவுக்கு இரண்டு மடங்கு ஆசீர்வாதங்களைக் கொடுத்து அவன் பின்னிலமையை ஆசீர்வதித்தது போல, கர்த்தர் உங்களுக்கும் இரட்டிப்பான நன்மையைத் தந்து ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae