சகோதரர்களை மன்னியுங்கள் (Forgive the brethren).

அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம்  மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான் (மத். 18:21).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/PiId99NjoR4

மன்னிப்பது என்பது இயேசுவினிடத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளுகிற பாடமாய் காணப்படுகிறது, அவருடைய சுபாபமே பிறரை மன்னிப்பதாகும். ஆண்டவர் நம்மைப் பாவங்களிலிருந்து மன்னித்ததினால் தான் நாம் அவருடைய பிள்ளைகளாய் இன்று காணப்படுகிறோம். இயேசுவைப் போல நாமும் மற்றவர்களை மன்னிக்கிறவர்களாய் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஒருமுறை பேதுரு, இயேசுவிடம் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும், ஏழு முறை மட்டுமோ என்று கேட்டான். இயேசு கூறினார்   ஏழெழுபதுதரமட்டும் நீ மன்னிக்க வேண்டும் என்பதாக, அதாவது எத்தனை முறை சகோதரன் தவறு செய்தாலும் அத்தனைமுறையும்  மன்னிக்க வேண்டும் என்று ஆண்டவர் கூறினார். நாம் பிறரை மன்னிக்கவில்லையெனில் பரலோகம் செல்ல முடியாது. மன்னியாமையும், கசப்பும் பிசாசின் சுபாபமாய்  காணப்படுவதினால், அவனுடைய சுபாவம் உடையவர்கள் பரலோகம் போக முடியாது. 

 இயேசு கூறிய  உவமையைப்  போல, நாம் அவரிடம் பதினாயிரம்  தாலந்து கடன் பட்டவர்கள், அதிகமாய் பாவங்கள் செய்து மன்னிப்பைப் பெற்றவர்கள். ஆனால் நம்மிடம் கொஞ்சம் கடன்பட்ட, அதாவது நமக்கு விரோதமாய் சிறு தவறுகள் செய்தவர்களைக் கூட நாம் மன்னிக்கவில்லையென்றால், எஜமான் ஏற்கனவே நமக்கு அருளிய மன்னிப்பைக் கூட நாம் இழந்து போகிறவர்களாய் காணப்பட்டு, தண்டனைக்கு ஒப்புக் கொடுக்கப் படுவோம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். பழைய ஏற்பாட்டில் ஒரே அதிகாரத்தை உடைய ஒபதியா புத்தகத்தில்   ஏசாவின் வம்சமாகிய  ஏதோமியர்களைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.  ஏசா தன்னுடைய சகோதரனாகிய யாக்கோபு, தன்னுடைய சேஷ்ட புத்திர  பாகத்தைத் திருடியதையும், தகப்பனை ஏமாற்றி தன் ஆசீர்வாதங்களைத் திருடியதையும் மன்னித்து விடுவான். ஆனால் சுமார் ஆயிரம்  ஆண்டுகளுக்குப் பின்பு கூட  ஏசாவின் சந்ததிகள்  யாக்கோபின்  சந்ததிகளுக்கு துரோகம் செய்து பழிவாங்குகிறவர்களாய் காணப்பட்டார்கள். ஏற்கனவே எகிப்திலிருந்து யாக்கோபின் சந்ததிகள் புறப்பட்டு வந்த வேளையில் ஏதோமியர்களுடைய தேசத்தின் வழியாய் கடந்து செல்ல மோசே உத்தரவு கேட்டும், அவர்கள் கடந்து போக அனுமதிக்க வில்லை, பட்டயத்தோடு எதிர்த்து வருவோம்   என்று அவர்கள் கூறியதை எண்.28:18ல் வாசிக்கமுடிகிறது. பின்னாட்களில் பாபிலோனியர்கள் நேபுகாத்நேச்சாரின்  ஆட்சியில் யூதாவிற்கு விரோதமாய் யுத்தத்திற்கு வந்த வேளையில், அவர்களோடு ஏதோமியரும்  இணைந்து, யாக்கோபின் சந்ததிக்கு விரோதமாக யுத்தம் செய்து துரோகம் செய்கிறவர்களாய் காணப்பட்டார்கள், தன் சகோதரர்கள் மேல் பிரியம் இல்லாதவர்களாய் காணப்பட்டார்கள் என்று ஒபதியா 1:12ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால் தன் சகோதரர்களை மன்னியாத  அவர்களைக் கர்த்தர் வைக்கோல் துரும்பாக்கினார், ஏசாவின்  வம்சத்தார் இப்பூமியில் இந்நாட்களில் இல்லாதபடி கர்த்தர் முழுவதும் அழித்துப் போட்டார். 

கர்த்தருடைய பிள்ளைகளே, ஒருவரையொருவர் மன்னியுங்கள், பழிவாங்குதல் கர்த்தருக்குரியது. மன்னிப்பது நம்முடைய பலவீனம் அல்ல, அதுவே நீங்கள் கர்த்தருடைய பிள்ளைகள் என்பதை வெளிப்படுத்துகிறது. நீங்கள் மற்றவர்களை மன்னிக்கும் போது தெய்வீக சமாதானம் உங்கள் உள்ளங்களை நிரப்பும், கர்த்தர் இஸ்ரவேலர்களை  இன்றைக்கு வாழவைப்பதைப் போல, உங்களையும் உங்கள் சந்ததிகளையும் வாழவைப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae