கடைசிகால எழுப்புதல் (End time Revival).

ரோமர் 10:13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்,

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/YerTRO18NUE

யோவேல் தீர்க்கதரிசியின் மூலமாக வாக்களித்த பின்மாரி மழை ஊற்றப்படும்போது, உலகளாவிய எழுப்புதல் உண்டாகும். அப்பொழுது மேற்குறிப்பிட்ட வசனத்தின்படி திரளான ஜனங்கள் கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளுவார்கள், பாவத்தின் பிடியில் இருக்கும் திரள்கூட்ட ஜனங்கள் மனம்திரும்பி இரட்சிக்கப்படுவார்கள்.

ஆதி அப்போஸ்தல நாட்களுக்கு பிறகு புராட்டஸ்டண்ட் சீர்திருத்தங்கள் நடைபெற்றது. மெதடிஸ்ட் எழுப்புதல், வெஸ்லி எழுப்புதல் போன்ற எழுப்புதல் 1700 களில் நடைபெற்றது. 1872களில் D L மூடி மூலமாக லண்டனில் மிகப்பெரிய எழுப்புதல் உண்டானது. 1904-05களில் வேல்ஸ் தேசத்தில் ஈவான் ராபர்ட்ஸ் மூலம் ஆவியானவர் பலத்த எழுப்புதலை அனுப்பினார். அந்த எழுப்புதலில் இரண்டு மாதங்களில் 70,000 பேர் இரட்சிக்கப்பட்டார்கள். 100,000க்கும் அதிகமானோர் பின்மாற்றத்தில் இருந்தவர்கள் மீண்டும் சபைக்கு நேராக வந்தார்கள். இந்தியாவிலும் பண்டித ராமா பாய், எமி கார்மைக்கேல் போன்றோர்கள் மூலம் திரள்கூட்ட ஜனங்கள் இரட்சிப்படையும்படி கர்த்தர் செய்தார். அசூசா தெரு எழுப்புதலில் வில்லியம் சீமோர் மூலமாக கர்த்தர் பெரிய எழுப்புதலை அனுப்பினார். அந்த எழுப்புதல் ஆரம்பித்து ஒருமாதத்திற்குள் 30,000 பேர் இரட்சிக்கப்பட்டார்கள். தென் கொரியாவில் பால் யாங்கி சோ மூலமாக ஆவியானவர் எழுப்புதலை அனுப்பினார். 8 லட்சத்திற்கும் அதிகமான விசுவாசிகளை கொண்ட உலகத்திலேயே மிக பெரிய சபையாக அந்த சபை உருவானது. பில்லி கிரஹாம் என்ற ஒரு சுவிஷேசகரை கர்த்தர் எழுப்பினத்தின் விளைவு, சுமார் 22 கோடி ஜனங்களுக்கு சுவிசேஷத்தின் ஒளி வந்தது. சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் ஜெபிக்க வந்த மாணவர்கள் மூலம் எழுப்புதல் உண்டானது.

இப்படி ஆவியானவர் ஆங்காங்கே, இங்கே ஒன்றும் அங்கே ஒன்றுமாக எழுப்புதலை காலா காலத்திற்கும் அனுப்பி கொண்டே இருந்தார். இவையனைத்தும் நாம் கேள்விப்பட்டும் புத்தகங்களில் வாசித்தும் தான் அறிந்திருக்கிறோம். ஆனால், கடைசி கால எழுப்புதல் என்பது, இதுவரைக்கும் நடைபெற்ற, ஆங்காங்கே, எப்பொழுதாவது நடக்கும் எழுப்புதலை போல இருக்காது. இனிவரும் எழுப்புதல் அக்கினி, உலகம் முழுவதும், எல்லா இடங்களிலும் ஆவியானவரால் ஊற்றப்படும். இதுவரைக்கும் காதுகளால் கேட்டு தெரிந்துகொண்ட எழுப்புதலை, கண்ணார நாம் காணப்போகிறோம். இன்னும் சொல்லப்போனால் நம்மை கர்த்தர் எழுப்புதலுக்கு ஒரு கருவியாக பயன்படுத்த போகிறார்.

கடைசி கால எழுப்புதலில் சபை நிரம்பி வழியும், ஜனங்கள் பாவ உணர்வு அடைந்து இரட்சிக்கப்படுவார்கள், அற்புதங்கள் திரளாய் நடைபெறும், மருத்துவமனையில் நோயாளிகள் இருக்கமாட்டார்கள், விபச்சாரம் ஒழிக்கப்படும், மதுபான கடைகள் மூடப்படும், சினிமா நட்சத்திரங்களும் இயேசுவை ஏற்றுக்கொள்ளுவார்கள், இராஜாக்கள் சபையாய் நோக்கி ஓடிவருவார்கள், தேவ பிரசன்னம் மிகவும் அதிகமாக இருக்கும், தேவ ஆவியானவர் அங்கேயே தங்கிவிடுவார், காவல் துறையில் குற்றச்செயல்களினால் வரும் குற்றசாட்டுகள் குறையும், திரளான ஜனங்கள் கர்த்தரே தெய்வம் என்று ஆர்பரிப்பார்கள், பூமிக்குள் பரலோகத்தின் ஊடுருவல் அதிகமாக காணப்படும், இருளின் ஆதிக்கங்கள் அசையும், சாத்தானின் சிங்காசனம் நடுங்கும், பாதாளத்தின் வல்லமைகள் கட்டப்படும். இயேசு சொன்னார் பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன் (லுக் 12:49) என்பதாக.

சார்லஸ் பின்னியை குறித்து சொல்லுவார்கள், ஒரு மனிதர் ஜெபத்தில் கீழ்ப்படிந்தார், அது எழுப்புதலை துவங்கியது, அந்த எழுப்புதல் தேசத்தையே மறுரூபமாக்கியது என்பதாக. அதுபோல எழுப்புதல் முதலாவது ஒரு தனி மனிதனாகிய நமக்குள் துவங்க வேண்டும், நமக்குள் துவங்கும் எழுப்புதல் தான் நம்முடைய குடும்பத்திற்குள் பற்றிப்பிடிக்கும், நம்முடைய குடும்பத்திற்குள் உண்டான எழுப்புதல் தான் சமுதாயத்தில் பற்றி பிடிக்கும், அந்த எழுப்புதல் தான் தொடர்ந்து பட்டனத்திற்கும், மாநிலத்திற்கும், தேசத்திற்கும் பற்றி பரவும். ஆகையால் ஆண்டவரிடம் கேளுங்கள் கடைசி கால எழுப்புதலுக்கு, முதலாவது நான் எழுப்புதல் அடைய வேண்டும், எனக்குள் மறுமலர்ச்சி உண்டாக வேண்டும், நான் இழந்துபோன பிரசன்னத்தை முதலாவது மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கேளுங்கள். அப்பொழுது நீங்கள் உயிர் மீட்சி அடைவது மாத்திரமல்ல, உங்களில் ஆரம்பித்த எழுப்புதல் அக்கினி, தேசத்தில் பற்றி பிடிக்கும். கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிறவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org