புறப்பட்டுப் போங்கள் (Go Forward).

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று  இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு(யாத். 14:15).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/DRPRiQtJg20

தேவ ஜனங்கள் ஜெபிப்பதற்கு ஒரு காலமுண்டு, அதுபோல செயல்படுவதற்கும் ஒரு காலமுண்டு. நானூறு வருஷங்கள்  எகிப்திய அடிமைத்தனத்திலிருந்த  இஸ்ரவேல் ஜனங்களைக் கர்த்தர் கிருபையாய் விடுவித்தார். என் ஜனங்களை என்னை ஆராதிக்கும் படிக்கு அனுப்பி விடு என்று பார்வோனுக்கு  கட்டளையிட்டு, அவருடைய பலத்த கரத்தினிமித்தமும், ஓங்கிய புயத்தின் மூலமும் அவர்களை விடுவித்தார். புறப்பட்டு வந்த ஜனங்களுக்குச் செங்கடல் தடையாக நின்றது. பின்பு பார்வோன் சகல குதிரைகளோடும் இரதங்களோடும்  குதிரைவீரரோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோனான். அவன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை  ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள், அப்பொழுது இஸ்ரவேல்  புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். கர்த்தர் மோசேயை  நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச்  சொல்லு என்பதாகக் கூறினார். நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு, அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள் என்றார். கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே செய்தான். இஸ்ரவேல் ஜனங்கள் அத்தனை பேரும் கடலில் கால்கள் நனையாமலே இக்கரைப் பட்டார்கள், அவர்களைப் போல எகிப்பதியர்களும்  கடக்க முயன்றனர், அவர்கள் அத்தனை பேரையும் சமுத்திரம் விழுங்கிப் போட்டது. 

மோசேயைப் போல ஒரு நாள் யோசுவாவும், ஆய் பட்டணத்துத்  தோல்வியின் நிமித்தம், முகங்குப்புற விழுந்து கிடந்து ஜெபிக்கிறவனாய் காணப்பட்டான். அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற  விழுந்துகிடக்கிறது என்ன? என்று சொல்லி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்து, வெற்றியையும் கொடுத்தார். சவுல் ராஜாவின் பாவங்களின் நிமித்தம் கர்த்தர் அவனை ராஜாவாகக் காணப்படாதபடிக்கு  தள்ளிப் போட்டார். அதினிமித்தம்  சாமுவேல் தீர்க்கதரிசி துக்கித்து முடங்கிப்  போய்காணப்பட்டான். கர்த்தர் சாமுவேலை நோக்கி, இஸ்ரவேலின்மேல்  ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும்  துக்கித்துக்கொண்டிருப்பாய், நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா, பெத்லெகேமியனாகிய  ஈசாயினிடத்துக்கு  உன்னை அனுப்புவேன், அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்று கூறி முன்னேறிச் செல்லும்படியாகக் கூறுகிறதைப் பார்க்கிறோம். எலியா தீர்க்கதரிசி, யேசபேலுக்கு பயந்து ஒரு சூரைச் செடியின் கீழ் படுத்துக்கொண்டு, போதும் ஆண்டவரே என் ஜீவனை எடுத்துக் கொள்ளும் என்று ஜெபிக்கிறவனாய் காணப்பட்டான். நீ போக வேண்டிய தூரம் வெகு அதிகம் என்று சொல்லி, கர்த்தர் அவனை உற்சாகப்படுத்தி, முன்னேறிச் செல்லும்படிக்குச் செய்தார்.

கர்த்தருடைய பிள்ளைகளே, வாழ்க்கையின் கடைசி எல்லையில் வந்து விட்டோம் என்று நிலைகுலைந்து காணப்படுகிறீர்களா? எல்லா முயற்சிகளையும் எடுத்து விட்ே;டன் ஒரு வேலை கிடைக்க வில்லை, மருத்துவ சிகிச்சைகளையெல்லாம் செய்து விட்டேன் விடுதலை கிடைக்கவில்லை, பல வருடங்களாய் காத்திருந்தும் குடும்ப வாழ்க்கையில் ஒரு அற்புதம் நடக்கவில்லை, திருமணம் ஆகவில்லை என்று முடங்கிப் போன நிலையில் காணப்படுகிறீர்களா? சோர்ந்து போகாதிருங்கள். உங்கள் விசுவாசத்தைக் கர்த்தர் பேரில் வைத்துத்  தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். கர்த்தர் உங்களுக்கு வழி உண்டாக்கி, உங்கள் காரியங்களை வாய்க்கச் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae