ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து கொள்ளுங்கள்(Carry one another’s burdens).

கலா 6:2. ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/yHfXAHe0wj4

கலா 6:5ல் அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே என்று எழுதப்பட்டிருக்கிறது. அதுபோல கலா 6:2ன் படி, நாம் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க வேண்டும். புதிய ஏற்பாட்டில் ஒருவரையொருவர் என்ற பதம் அநேக இடங்களில் வருகிறது. ஒருவரையொருவர் மன்னியுங்கள் (கொலோ 3:13), ஒருவரையொருவர் கனம்பண்ணுங்கள் (ரோம 12:10), ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள் (ரோம 15:7), ஒருவரோடொருவர் ஒருமானதாயிருங்கள்(ரோம 12:16), ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள் (எபி 3:13), ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் (எபே 5:21), ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள் (யாக் 5:16), ஒருவருக்கொருவர் காத்திருங்கள் (1 கொரி 11:33) என்பதாக எழுதப்பட்டிருக்கிறது. இந்த வசனங்கள் சபை ஐக்கியமாக இருக்க வலியுறுத்துவதை குறிக்கிறது. இந்த உலகம் பாசத்திற்க்காகவும் சிநேகத்திற்க்காகவும் ஏங்குகிறது, வறண்டுகொண்டிருக்கிறது. மெய்யான அன்பு குடும்பத்தாரிடம் காணமுடியவில்லை. ஆனால், வேதம் வலியுறுத்துவது சபை ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றும்படி நம்மை அழைக்கிறது.

மனிதர்களுக்கு இருவகையான பாரங்கள் காணப்படுகிறது. சுமக்கக்கூடிய பாரங்கள், சுமக்க முடியாத பாரங்கள். சுமக்கக்கூடிய பாரங்களை நாம் ஜெபித்து எளிதாக மேற்கொண்டுவிடுகிறோம். அன்றாட கவலைகள், அன்றாட சுமைகள் போன்றவற்றை நாம் கடந்துவிடுகிறோம். இப்படிப்பட்ட பாரங்கள் வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதைப்போல, எல்லாரிடமும் காணப்படுகிறது. சுமக்க முடியாத திடீர் சேதங்கள், பெரிய இழப்புகள், வியாதி போன்றவற்றை மேற்கொள்ள மிகவும் கடினமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் சபையாக ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். என்னுடைய பிரச்சனையே எனக்கு தலைக்கு மேல் உள்ளது, நான் பிறர் காரியங்களில் தலையிட்டுக்கொள்ளுவதில்லை என்று சபையின் ஐக்கியத்திற்கு வெளியே நிற்கிற ஜனங்களாக நாம் காணப்படலாகாது. அப்படிப்பட்டவர்கள் நோவாவின் பேழைக்குள் வர விருப்பமில்லாமல் வெளியே இருப்பவர்களுக்கு சமம் என்று சொன்னாலும் அது மிகையாகாது. பிறருடைய வேதனையை நாம் கண்டும் காணாமலும் இருக்க கூடாது. குற்றுயிராய் கிடந்தவனை தேற்றின சமாரியனை போல நாமும் காணப்பட வேண்டும். ஆண்டவர் சொன்னார் அழுகிறவர்களுடனே அழுங்கள் (ரோம 12:15) என்பதாக. நாம் பிறரது துன்பங்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளும்போது நாமும் தேற்றப்படுவோம் என்ற இரகசியத்தையும் தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் (யோவா 13:34,35) என்று இயேசு கூறினார். எப்படி அந்த அன்பை வெளி காட்டுவது? நாம் பிறர் பாரத்தை சுமக்கும்போதும், ஜெபிக்கும்போதும் , உதவும்போதும் இயேசு கூறிய அன்பை வெளிக்காட்டலாம். ஆகையால் ஆண்டவர் கொடுத்த பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org