என் ஜீவன் கிறிஸ்துவுடன் தேவனுக்குள் (My life is hidden with Chirst in God).

கொலோ 3:3. ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/9HMUn3qJzd8

நம்முடைய ஜீவன், நம்முடைய உயிர், பத்திரமான பாதுகாப்பான இடத்தில் உள்ளது. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மரணத்தை சந்திக்க வேண்டும். இதை ஒருவராலும் தவிர்க்க முடியாது. மரணத்தைவிட நிச்சயமானது இந்த உலகத்தில் ஒன்றுமில்லை; அதேவேளையில் மரண நேரத்தைவிட நிச்சயமற்றதும் ஒன்றுமில்லை. ஒரு மனிதனுடைய பிறப்பிலிருந்து, இறப்பு வரை நடக்கும் பயணம் தான் வாழ்வு. அந்த வாழ்வு நாட்களில் கர்த்தர் நமக்கு கிருபையாய் கொடுத்த ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. சில காதலர்கள் என் உயிரே நீ தான் என்று காதலியை பார்த்து சொல்லுவார்கள். சிலர் சொல்லுவார்கள் என் உயிரே என் செல்வம் தான் என்று, சிலர் சொல்லுவார்கள் என் மனைவி பிள்ளைகளை என் உயிரை காட்டிலும் நேசிக்கிறேன் என்பதாக. தேவ ஜனங்களே, ஒன்றை புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய ஜீவன் உலகத்திற்குள் அல்ல; கிறிஸ்துவோடு இருக்கிறது. இப்படிப்பட்ட காரியங்கள் மீது நம்முடைய ஜீவன் இருக்குமென்றால் வாழ்க்கை தோல்வியில் தான் முடிவடையும். நமக்கோ கர்த்தரை அண்டி கொண்டிருப்பதே பாக்கியம்.

இதை பவுல் தெளிவாய் அறிந்த காரணத்தால் தான் அவர் சொல்லுவார், கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம்; நான் சிலுவையில் கிறிஸ்துவுடனே அறையப்பட்டிருக்கிறேன், இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் ஜீவிக்கிறார். எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன் என்றெல்லாம் பவுல் கூறுவார். பவுல் கடந்து சென்ற பாதை கரடு முரடானது. எத்தனையோ பாடுகள், கப்பற் சேதம், மரண விளிம்பை பார்த்து வந்தவன், தைரியமாக பாதுகாப்பாக இருக்கிறான். காரணம் அவன் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது என்ற வெளிப்பாட்டை பெற்றுக்கொண்டான். நம்முடைய வாழ்க்கையிலும் எவ்வளவு துன்பம் துயரம் வந்தாலும், ஒன்றை நிச்சயத்துக்கொள்ளுங்கள் நம்முடைய ஜீவன் கிறிஸ்துவுக்குள் பத்திரமாக காக்கப்பட்டு இருக்கிறது.

அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது என்று கொலோ 2:3 கூறுகிறது. ஆகையால் விசுவாசிகளின் வாழ்க்கையில் ஞானம் அறிவு போன்ற பொக்கிஷங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org