அப்போஸ்தல கிரீடம் (Apostalic coronation).

1 தெச 2:19,20 எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்; நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/oDk9LLcJRw8

இங்கிலாந்து அரசர் தலையில் அவர் அரசர் என்ற காரணத்தால் தலையில் கிரீடம் வைத்துக்கொள்ளுவார். உலக அழகி பட்டம் பெற்றவர்களுடைய தலையில் கிரீடம் சூட்டப்படும். அதுபோல, தலைசிறந்த மாணவ மாணவிகளுக்கு தலையில் கிரீடம் சூட்டி அவர்களை கவுரவப்படுத்துவார்கள். இவ்வகையான உலகத்துக்கடுத்த கிரீடத்தை ஆண்டவரே கொடுத்தாலும் இந்த உலக வாழ்வோடு அது முடிந்துபோய்விடும். அழிவில்லாத கிரீடமும் நம்முடைய கர்த்தர் நமக்கு கொடுப்பார். அப்படிப்பட்ட கிரீடத்தை குறித்து பவுல் மேற்குறிப்பிட்ட வசனத்தில் குறிப்பிடுகிறார். பவுலை பொறுத்தவரையில், ஆத்துமாக்களை கிறிஸ்துவின் சந்நிதியில் கொண்டுபோய் நிறுத்துவதே தன்னுடைய இலக்காக கொண்டு தேவனுக்கு ஊழியம் செய்தார். இந்நாட்களில் அநேக ஊழியர்கள் தங்களை ஹீரோக்களாக காண்பிக்கவே முற்படுகிறார்கள்.

கிறிஸ்துவுக்காக நாம் ஆதாயம் செய்த ஆத்துமாக்களே நமக்கு கிரீடமாய் இருக்கிறார்கள் என்று வேத வசனம் கூறுகிறது. ஆத்துமாக்களை சம்பாதிப்பதன் விளைவாக வருகிற கிரீடம் என்றென்றும் நிலையானது. ஒருபுறம் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டால் பரலோகத்தில் சந்தோசம் உண்டாகிறது; மறுபுறத்தில் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டால் நமக்கு அவர்களே கிரீடமாய் மாறிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட கிரீடத்தையே அப்போஸ்தலர்கள் பெற்றுக்கொண்டார்கள்; நாமும் இப்படிப்பட்ட கிரீடங்களையே வாஞ்சிக்க வேண்டும்.

2 தீமோ 4:6-8 கூறுகிறது, நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார் என்பதாக. நீதியின் கிரீடம் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு மாத்திரமல்ல, கிறிஸ்துவின் பிரசன்னமாகுதலை, அவருடைய வருகையை வாஞ்சிக்கும் அனைவருக்கும் நீதியின் கிரீடத்தை கர்த்தர் கொடுப்பார். பவுல் தன்னலமில்லாதவன். எனக்கு மாத்திரமே அந்த நாற்காலி, எனக்கு மாத்திரமே கிரீடம் வேண்டும் என்று சொல்லுகிறவர்களின் மத்தியில், பவுல் எனக்கு மாத்திரமல்ல, நீங்கள் யாவரும் அந்த நீதியின் கிரீடத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறுகிறார்.

இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காரும்படி ஆண்டவர் அப்போஸ்தலர்களுக்கு சிலாக்கியத்தை கொடுத்தார் (லுக் 22:28-30). இயேசுவோடு நாம் அவருடைய சிங்காசனத்தில் அமரும் சிலாக்கியத்தையும் ஜெயங்கொள்ளுகிறவனுக்கு கர்த்தர் கொடுக்கிறார் (வெளி 3:21). இப்படி உன்னதங்களுக்குரிய இடங்கள் மேல் நம்முடைய கண்கள் கண்ணோக்கமாயிருந்து, ஆத்துமாக்களை அறுவடை செய்வோம். அப்போஸ்தலர்கள் பெற்றுக்கொண்ட கிரீடத்தை நாமும் பெற்றுக்கொள்ளுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org