2 தெச 1:3,4 சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது. நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/eJKEJNZDVkg
பவுல் தெசலோனிக்கிய சபையை பார்த்து அவர்களுடைய விசாவசம் பெருகுவதாலும், அவர்களுடைய அன்பும் அதிகரிப்பதாலும், தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி அவர்களை மெச்சிக்கொள்ளுகிறான் (வச 3). ஒரு பெரிய அப்போஸ்தலன், ஊழியக்காரனுடைய பாராட்டுதலை இந்த சபை பெற்றுக்கொண்டார்கள். நல்ல ஊழியக்காரனின் பாராட்டுதலை பெறுவதும் நமக்கு கிடைக்கும் சிலாக்கியம். இப்படி விசுவாசம் அன்பில் குறைவில்லாதவர்களாய் இருந்த இந்த சபை , துன்பங்களையும் உபத்திரவங்களையும் சந்திக்கிறார்கள் என்பதை குறித்து பவுல் கூறுகிறார். இவர்கள் இன்னல்களை தடையாய் எண்ணாமல், பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பித்து, தங்களுக்கு வந்த தடைகளை படிக்கற்களாக மாற்றினார்கள்.
ஒரு ஊழியக்காரர் சொன்னார், கிறிஸ்துவ வாழ்க்கை என்பது இன்னலிலிருந்து தப்பும் வழியல்ல; அதின் வழியே செல்லும் பாதை என்பதாக. அப் 14:22 கூறுகிறது, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள் என்பதாக. எகிப்தில் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தியர்கள் ஒடுக்கினார்கள், சுமக்க முடியாத வேலையை கொடுத்தார்கள். இந்த சூழ்நிலையிலும் இஸ்ரவேல் ஜனங்கள் பெருகினார்கள். யோசேப்பிற்கு வந்த துன்பங்கள் சொல்லிமுடியாதவை. இப்படி துன்பங்கள் வந்த பிறகு தான் யோசேப்பு கனிதரும் செடி என்று அழைக்கப்பட்டான். காட்டில் இருந்த போது, தாவீது சிங்கத்தையும் கரடியையும் சந்திக்கும் வேலை வந்தது. இவைகளை முறியடித்து, கோலியாத்தையும் ஜெயித்து, எதிராக வந்த இன்னல்களை, தேவ பலத்தால் படிக்கற்களாக மாற்றினான், இராஜாவாக உயர்ந்தான். கொடுமையிலும் கொடுமையை சந்தித்தவன் யோபு. அநேகருக்கு பழமொழியாகவும், அருவருப்பாகவும் எனப்பட்டான். யோபின் பொறுமை யாருக்குமில்லாத பொறுமை. அந்த பொறுமையினிமித்தம் கர்த்தருக்கு காத்திருந்து, இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தை சுதந்தரிதான்.
அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள் என்று சங் 84:6 கூறுகிறது. ரோமர் 5:3,4 கூறுகிறது, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம் என்பதாக. 2 கொரி 1:5 கூறுகிறது, கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது என்பதாக. ஜான் பன்யன் என்ற ஊழியக்காரர் சொன்னார், சிம்சோனுக்கு எதிர்ப்பட்ட சிங்கம்போல் இன்னல்கள் தோன்றலாம், கர்ஜிக்கலாம், பற்கடிக்கலாம், அதை மேற்கொண்டுவிட்டாலோ, தேன்தான்!. ஆகையால் துன்பங்கள் உபத்திரவங்களை பார்த்து சோர்ந்துபோகாமல், பொறுமையோடும் விசுவாசத்தோடும் இருங்கள். இன்னல்களை சரியாக கையாளுங்கள், அது வளர்ச்சியை கூட்டும், குறைக்காது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org