நீங்கள் சுகமாய் தனித்து வாசம் பண்ணுவீர்கள் (You will live in safety alone). 

இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம் பண்ணுவான், யாக்கோபின்  ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும், அவருடைய வானமும் பனியைப் பெய்யும்(உபா.33:28).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/gvp7YczOn_8

ஒரு புதிய வருஷத்திற்குள்ளாய் பிரவேசிக்கும் படிக்குக் கிருபை பாராட்டின கர்த்தருக்குக் கோடாகோடி ஸ்தோத்திரங்களை  ஏறெடுப்போம். இந்த வருஷம் நீங்கள் சுகமாய், தனித்து வாசம் பண்ணுவீர்கள், உங்கள் ஊற்றானது தானியமும் திராட்சரசமுள்ள தேசத்திலே இருக்கும், உங்கள் வானமும் பனியைப் பெய்யும். கர்த்தர் யாருக்கு இந்த வாக்குத்தத்தத்தை மோசேயின் மூலம் கொடுத்தார் என்று பார்க்கும் போது, யெஷூரனுக்கு என்பதாக உபா. 33:26 கூறுகிறது.  யெஷூரன் என்பதற்கு  நேர்மையாய், நீதிக்குரிய ஜீவியம் செய்கிறவன் (upright or righteous one) என்பது பொருள். இந்த இடத்தில் யாக்கோபையும் அவன் சந்ததியையும் யெஷூரன் என்று கர்த்தர் அழைத்தாலும், கர்த்தருக்குப் பயந்து, அவருடைய வசனத்திற்கு நடுநடுங்கி, நீதிக்குரிய ஜீவியம் செய்கிறவர்கள் அத்தனை பேரையும் கர்த்தர் யெஷூரன் என்று அழைக்கிறார். நம்முடைய தேவனுடைய நாமங்களில் ஒன்று எல்-யெஷூரன் என்பதாகக் காணப்படுகிறது. உத்தமமாய் நீதிக்குரிய ஜீவியம் செய்கிறவர்களின் தேவன் (God of His righteous people) என்பது அதின் அர்த்தமாகும். இயேசுவின் பிள்ளைகள் என்றாலே உத்தமமானவர்களாய் காணப்பட வேண்டும். அவர்களுக்குக் கர்த்தர் கொடுக்கிற வாக்குத்தத்தமாய் மேற்கூறிய வசனம் காணப்படுகிறது. இயேசு கிறிஸ்து அருளுகிற இரட்சிப்பு ஒன்று மட்டும் இலவசமானது, நிபந்தனையற்றது. அதற்குரிய கிரயத்தைக் கல்வாரி சிலுவையில் இயேசு ஏற்கனவே செலுத்திவிட்டார். மற்ற எல்லா ஆசீர்வாதங்களும் நிபந்தனையோடு கூடியது. நாம் நேர்மையாயும், நீதியாயும், கர்த்தருக்குப் பயந்து ஜீவிக்கும் போது அவர் அருளிய இந்த வாக்குத்தத்தத்தை நாம் சுதந்தரிக்க முடியும்.

முதலாவது, நீங்கள் சுகமாய், பாதுகாப்போடு, பத்திரமாய் வாசம் பண்ணுவீர்கள் என்று கர்த்தர் வாக்குக் கொடுக்கிறார். ஒவ்வொரு நாடுகளிலும் தலைவர்களைப் பாதுகாக்கப் பலவிதமான படைகள் காணப்படுகிறது.  ஆனால் நம்முடைய பாதுகாப்பு அநாதி தேவனாய் காணப்படுகிறார் என்று உபா. 33:27 கூறுகிறது. அவரே நம்முடைய அடைக்கலம், அவருடைய நித்திய புயங்கள் நம்முடைய ஆதாரமாய் காணப்படுகிறது. அவர் உங்களைப் பாதுகாக்க, உங்களுக்குச் சகாயம் செய்ய   வானங்களின் மேலும் ஆகாய மண்டலங்களின் மேலும் தமது மாட்சிமையோடு ஏறிவருகிறார். உலகத் தலைவர்களைப் பாதுகாக்கக்  கவச வாகனங்கள் அவர்களைப் புடைசூழ்ந்து வரும், ஆனால் நம்மைப்  பாதுகாக்க நித்திய தேவன் ரதங்கள் புடைசூழ  வருகிறார். அவரே நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான  துணையுமானவர். நீங்கள் உன்னதமானவருடைய மறைவிலும், சர்வ வல்லவருடைய நிழலிலும் காணப்படுகிற பாக்கியம் பெற்றவர்கள். யுத்தங்களும் யுத்தங்களின் செய்யும் எங்கும் கேட்கிறது, பலவிதமான விபத்துகள் எங்கும் நடக்கிறது, புதுப்புது வியாதிகள் தோன்றுகிறது, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை நம்முடைய தேசங்களில் காணப்படுகிறது. சத்துரு அக்கினியா ஸ்திரங்களை எய்கிறவனாய் காணப்படுகிறான். இந்த சூழ்நிலையில் கர்த்தரை உண்மையாய் உத்தமமாய் சேவிக்கிற, நீதிக்குரிய ஜீவியம் செய்கிற உங்களை ஒன்றும் சேதப்படுத்தாது. நீங்கள் இயேசுவின் காயங்களுக்குள்ளாய் பாதுகாப்பாய் காணப்படுகிற, கன்மலை வெடிப்பில் தங்கும் புறாக்களாய் காணப்படுவீர்கள். அவருடைய ரத்தம் உங்களுக்கு அடைக்கலமாயிருக்கும்.

இரண்டாவது, நீங்கள் தனித்து வாசம் பண்ணுவீர்கள். கர்த்தருடைய ஜனங்கள் வேறுபட்டவர்கள், வேறுபாட்டின் ஜீவியம் செய்கிறவர்கள், அதற்காகவே நாம் கர்த்தரால் முன் குறிக்கப்பட்டுத்  தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். நாம் உலகத்தில் தான் வாழ்கிறோம், துறவிகளாய் துறவறம் போகும் படிக்குக் கர்த்தர் நம்மை அழைக்கவில்லை, ஆனால் நாம் உலகத்தான் அல்ல, உலகத்திற்குரியவர்கள் அல்ல, இப்பிரபஞ்சத்தின் வேஷத்தைத்  தரிப்பவர்கள் அல்ல என்பதைப் புரிந்து வாழவேண்டும்.  இன்றைக்கும் யூதர்கள் உலகத்தின் எந்த நாடுகளில் காணப்பட்டாலும் தனியே வாசம் பண்ணுவார்கள். ஆவிக்குரிய யூதர்களாய் காணப்படுகிற நாமும் அப்படிப்பட்டவர்களாய் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நீங்கள் பிரித்தெடுக்கப்பட்ட ஜீவியம் செய்வதற்குக்  கர்த்தர் உங்களுக்குத் துணை செய்வார். சத்துருவும் அவனுடைய ஜனங்களும் நம்மைக் கறைப் படுத்துவதற்கு முயல்வார்கள். நீங்கள் அவனுடைய தந்திரங்களை அறிந்து, வேறுபாட்டின் ஜீவியம் செய்யும் போது, புதிய வருஷம் உங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதமாய் காணப்படும், கர்த்தருடைய மகிமை உங்கள்மேல் காணப்படும்.

மூன்றாவது, உங்கள் ஊற்றுத் தானியமும் திராட்சை ரசமுமுள்ள  தேசத்திலிருக்கும். யாக்கோபின் ஊற்று என்பது அவனுடைய பிள்ளைகளையும், அவனுடைய சந்ததியையும்  குறிக்கிறது. இந்நாட்களில் பிள்ளைகளைக் குறித்த கவலைகள்  பெற்றோரை அதிகமாய் பாதிக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் ஊற்றாகிய அவர்கள் ஆசீர்வாதமாகக் காணப்படுவார்கள் என்று ஆண்டவர் வாக்குக் கொடுக்கிறார். உங்கள் பிள்ளைகளை நீதிக்குரியவர்களாய், நேர்மையானவர்களாய், கர்த்தருக்கு பயப்படுகிறவர்களாய் வளர்த்துவது உங்கள் கடமையாய் காணப்படுகிறது. அப்போது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பிரகாசமாய் காணப்படும். 

நான்காவது, உங்கள் வானம் உங்களுக்குப் பனியைக் கொடுக்கும். பனியென்பது உங்கள் ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது. நான் இஸ்ரவேலுக்கு பனியைப்போலிருப்பேன் என்று ஓசியா 14:5ல் கர்த்தர் கூறினார். கர்த்தர் உங்களுக்குச் சரீரத்திற்குரிய, பூமிக்குரிய, உன்னதங்களுக்குரிய எல்லாவிதமான ஆசீர்வாதங்களையும் தந்து உங்களை வாழவைப்பார். அதுபோல, உங்கள் ஆரோக்கியம் செழிக்கும். விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யௌவன ஜனம் உமக்குப் பிறக்கும் என்று சங்.110:3ல் கூறினார், நீங்கள் வாலிபர்களைப் போலப் புஷ்டியாய், ஆரோக்கியமாய்; காணப்படுவீர்கள்.  மேலும், பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும் என்று உபா. 32:2 கூறுகிறது. நாம் சபை கூடிவரும்போது அவருடைய வசனம் பனித்துளியாய் உங்கள் மேல் இறங்கும். வசனம் உங்களை வாழ வைக்கும், வசனம் உங்களுக்குச்  சமாதானத்தைத் தரும், வசனத்தை அனுப்பி உங்களுக்குச் சுகம் தருவார், வசனம் உங்களுக்கு வெளிச்சம் தந்து உங்கள் பாதைகளைச் செம்மைப் படுத்தும். ஆகையால் சபைக் கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள். நீங்கள் நீதியும், நேர்மையும், கர்த்தருக்குப் பயந்து உத்தமமாய் ஜீவிக்க உங்களை அர்ப்பணித்திருக்கிறபடியால், இந்த வருடமும், இனிவருகிற  நாட்களிலும் கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து வாழவைப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae