ராகேல், லேயாளைப் போல (Be like Rachel and Leah).

அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான், உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக, நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய் (ரூத் 4:11).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/IP1d18C9tbA

பெத்லகேமில் ஒலிமுகவாசலில் காணப்பட்ட சகல ஜனங்களும், மூப்பர்களும், போவாசிற்கு மனைவியாகப் போகிற  மோவாபிய  ஸ்திரீயாகிய ரூத்தை வாழ்த்தும் போது, அவள் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த ராகேலைப்போலவும்  லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கட்டும் என்று வாழ்த்தினார்கள். யாக்கோபு பெண்கொள்ளும்படிக்கு மிக நீண்ட பிரயாணம் செய்து, பதான் அராமில் காணப்பட்ட  லாபான்  வீட்டிற்குக் கடந்து சென்றான். லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் காணப்பட்டார்கள். மூத்தவள் பெயர் லேயாள், இளையவள் பெயர் ராகேல்.  இவர்கள் இருவருக்காகவும் யாக்கோபு பதினான்கு வருடங்கள் கடுமையாக உழைத்தான்.  இவர்கள் இருவர் மூலமும் யாக்கோபுக்கு பன்னிரண்டு குமாரர்களும் ஒரு குமாரத்தியும் பிறந்தார்கள். அவர்களில் ராஜாக்களும், தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும் எழும்பினார்கள், அவ்வண்ணமாக  முற்பிதாவாகிய  இஸ்ரவேலின் குடும்பம் கட்டப்பட்டது. 

தேவன் குடும்பத்தைக் கட்டுகிற பெரிதான பொறுப்பை ஸ்திரீகளிடம் ஒப்படைத்திருக்கிறார். வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்திரம், புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு என்று நீதிமொழிகள் 19:14 கூறுகிறது. அப்படிப்பட்ட புத்தியுள்ள ஸ்திரீகள் தங்கள் வீடுகளைக்  கட்டுகிறார்கள் எனவும், புத்தியில்லாத ஸ்திரீகள்   தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறார்கள் என்றும் நீதிமொழிகள் 14:1ல் எழுதப்பட்டுள்ளது. சகோதரிகள் உலகத்தில் எவ்வளவு உயர்ந்த ஸ்தானங்களில் காணப்பட்டாலும், தொழில் துறைகளில் முன்னேறினாலும், ஊழியத்தில் நட்சத்திரங்களாய் பிரகாசித்தாலும் உங்கள் வீடுகளைக் கட்டுகிற மிகப் பெரிய பொறுப்பைக் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை மறந்து போகாதிருங்கள். ராகேலும், லேயாளும் இஸ்ரவேலின் வீட்டை எப்படிக் கட்டினார்கள் என்று விவரமாய் எழுதப்படவில்லை. ஆகிலும், யாக்கோபு இருபது வருடங்கள்  லாபானுக்கு வேலை செய்தான், சுமார் பத்து முறை லாபான் அவனுடைய சம்பளத்தை மாற்றினான். கடைசியில் அவன் வீட்டை விட்டு நான் புறப்படுகிறேன் என்று தன் மனைவிகளிடம் அவன் கூறிய உடன், அவர்களும் கீழ்ப்படிந்து அவனோடு புறப்பட மனதாயிருந்தார்கள். பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகள் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து, கீழ்ப்படிதலினால் தங்களை அலங்கரித்ததைப் போல இவர்களும் கீழ்ப்படிந்தார்கள். குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள், உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு, அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார் என்ற வேத வார்த்தையின் படி தகப்பன் வீட்டை மறக்கவும் அவர்கள் தீர்மானித்தார்கள்.  பெத்தேலுக்கு போய் கர்த்தரைத் தொழுதுகொள்ளுவோம், உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம் பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள் என்று யாக்கோபு கட்டளையிட்டவுடன் தங்கள்  கையிலிருந்த  தகப்பனுடைய எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும்  யாக்கோபினிடத்தில் கொடுத்தார்கள்,  அவன்  அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப் போட்டான். இப்படி தங்களைச் சுத்திகரிக்கவும் ஆயத்தமாய் காணப்பட்டார்கள். ஆகையால் தான், ஸ்திரீகளை வாழ்த்தும் போது ராகேல், லேயாளைப் போல வாழ்ந்திருங்கள் என்று வாழ்த்துகிறார்கள். சகோதரிகளாகிய நீங்களும் கீழ்ப்படிதல் உள்ளவர்களாய், தகப்பன் வீட்டை மறந்து, உங்களைச் சுத்திகரித்துக் கொள்ளும் போது, கர்த்தர் உங்கள் குடும்பங்களையும் கட்டுவித்து, ராகேல் லேயாளைப் போல வாழ்ந்திருக்கும் படிக்குச் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae