எப்பிராயீம், மனாசேயைப் போல (Be like Ephraim and Manasseh).

இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான் (ஆதி. 48:20).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/mqreHsgCgqY

யூதர்கள் இந்நாட்களிலும் கூட தங்கள் குமாரர்களை வாழ்த்தும் போது, தேவன் உங்களை எப்பிராயீமைப்போலவும்,  மனாசேயைப்போலவும்  ஆக்குவாராக என்று கூறி ஆசீர்வதிப்பார்கள். எப்பிராயீம்,  மனாசே  இருவரும்  யோசேப்பிற்கு எகிப்தில் பிறந்த குமாரர்கள்.  மனாசே மூத்தவன்,  எப்பிராயீம் இளையவன். மனாசே என்பதற்கு தேவன் என் கஷ்டங்களை மறக்கும்படி பண்ணினார் என்றும் எப்பிராயிம் என்பதற்கு  தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்றும் அர்த்தம். யாக்கோபு தன் குடும்பத்தோடு எகிப்திற்குச் சென்ற பின்பு, அவன் மரணமடைகிற  நாட்கள் வந்த வேளையில், யோசேப்பு தன் இரண்டு குமாரர்களையும்  அவனண்டைக்கு கூட்டிச்சென்றான், அப்போது   அவர்களை ஆசீர்வதிக்கும்படி   என் கிட்டக் கொண்டுவா என்று யாக்கோபு  கூறினான். யாக்கோபுடைய  முதிர்வயதினால் அவனுடைய கண்கள் மங்கலாயிருந்தது. யோசேப்பு  அவ்விருவரையும் கொண்டுவந்து, இளையவனான எப்பிராயீமைத் தன் வலதுகையினாலே  இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மூத்தவனான மனாசேயைத் தன் இடதுகையினாலே இஸ்ரவேலின் வலது கைக்கு நேராகவும் விட்டான். அப்பொழுது யாக்கோபு மனமறிய, தன் வலதுகையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின் மேலும், மனாசே  முத்தவனாயிருந்தும், தன் இடது கையை மனாசேயுடைய தலையின் மேலும் வைத்து அவர்களை ஆசீர்வதித்தான். தகப்பன் தன் வலதுகையை எப்பிராயீமுடைய தலையில் வைத்தது யோசேப்பிற்கு  பிரியமில்லாத படியால், எப்பிராயீமுடைய  தலையின்மேல் இருந்த தன் தகப்பனுடைய கையை மனாசேயினுடைய தலையின்மேல்  வைக்கும்படிக்கு எடுத்து,  உம்முடைய வலதுகையை மூத்தவனாகிய  மனாசேயின் மேல் வைக்க வேண்டும் என்றான். ஆனால் யாக்கோபு  அதை தடுத்து: அது எனக்குத் தெரியும் என்றான். தகப்பன் தவறுதலாக இளையவனை முன்னிலைப்  படுத்தியிருக்கக்  கூடும்  என்பதாக யோசேப்பு  நினைத்தான், ஆனால் யாக்கோபு தேவ வெளிப்பாட்டுடன்  எப்பிராயிமை முன்னிலைப் படுத்தி ஆசீர்வதித்தான். யாக்கோபு  தேவபிரசன்னத்தினால் நிறைந்து, கர்த்தருடைய நடத்துதலின்படி ஆசீர்வதித்ததினால் அவர்கள் இருவரும் இரண்டு கோத்திரங்களாகி ஆசீர்வதிக்கப்பட்டார்கள். அவர்கள் இருவரும் புத்திர சுவிகார முறைமையின்படி யாக்கோபின்  குமாரர்கள் என்னப்பட்டார்கள்.

யாக்கோபு   இருவரையும்  ஆசீர்வதித்ததிலிருந்து சில காரியங்களைக் கற்றுக்கொள்ள முடியும். முதலாவது, சகோதர அன்பு வெளிப்படுகிறது.  எப்பிராயிமை முன்னிலைப் படுத்தியதும் காயினைப் போல மனாசே எரிச்சல் கொள்ளவில்லை, ஏசாவைப் போலப்  பழிவாங்க முயற்சிக்கவில்லை.  யோசேப்பின் மூத்த சகோதரர்களைப் போல விற்றுப்போட முயலவில்லை,  அதற்குப் பதிலாக இருவரும் இணைந்து அன்புடன் காணப்பட்டார்கள். பின்னாட்களில் இரு கோத்திரங்களும்  அருகருகே வாசம் பண்ணினார்கள். அவர்களைப் போல குடும்பத்திலும், சபைகளிலும், ஊழியங்களிலும் சகோதரர்கள் ஒருமித்து, ஐக்கியமாய் காணப்பட வேண்டும். கர்த்தர் அவரவர்களுக்கு என்று வைத்திருக்கிற நன்மைகளையும், ஆசீர்வாதத்தையும், கிருபைகளையும் அவரவருக்கு அருளிச் செய்வார். அப்படிப்பட்டவர்களாய் நீங்கள் காணப்படும் போது கர்த்தர் உங்களையும் ஆசீர்வதித்து உயர்த்துவார். இரண்டாவது, இருவரும் எகிப்தில் காணப்பட்டும், பாவங்கள் பெருகி காணப்பட்ட தேசத்தில் வாழ்ந்தும், புறஜாதிகளின் மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதபடி,  கறைபடாமல் தங்களைக் காத்துக் கொண்டார்கள். தங்கள் தகப்பனாகிய யோசேப்பின் வார்த்தைக்கு  கீழ்ப்படிந்து,  இஸ்ரவேலின் தேவனைச் சேவிக்கிறவர்களாய் காணப்பட்டார்கள். எப்பிராயிம் தேவனைக் குறித்த காரியங்களிலும், மனாசே ஆளுகையில் தகப்பனுடைய வலது கரத்தைப் போலவும் காணப்பட்டார்கள் என்று யூத வரலாறு கூறுகிறது. ஆகையால் தான் யூத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை,  எப்பிராயிம் மனாசே பெயர்களைச் சொல்லி ஆசீர்வதிக்கிறார்கள். நாமும் பிள்ளைகளை இவர்களுடைய பெயர்களைச் சொல்லி ஆசீர்வதிக்கும் போது முற்பிதாக்களின் ஆசீர்வாதங்கள் அவர்கள் மேல் தங்கும். அதற்கு மேலாக இயேசுவின் மூலம், பிதாவின் சுவிகார புத்திரர்களாய் நாம் காணப்படுவதினால், இயேசுவின் பெயரைச் சொல்லி உங்கள் பிள்ளைகளை நீங்கள் ஆசீர்வதிக்கும் போது, தலைமுறை தலைமுறையாக அவர்கள் ஆசீர்வாதமாய் காணப்படுவார்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae