அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும், அவன் சம்பத்துக் குறையாது (நீதி. 31:11).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/vbkZsy-R3TU
கர்த்தருடைய பிள்ளைகளுடைய சம்பத்து ஒரு நாளும் குறையாது. கர்த்தர் ஒருவனை ஆசீர்வதிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக அவனை ஆசீர்வாதத்தில் பெருகும்படிக்குச் செய்வார். ஆபிரகாமைக் குறித்து கர்த்தர் கூறும் போது, உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள், அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன் என்றார். புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவு என்று நீதி. 19:14 கூறுகிறது, அப்படிப்பட்ட குணசாலியான ஸ்திரீகளை மனைவியாகக் கொண்டிருப்பவர்களுடைய சம்பத்து குறையாது என்றும் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் கூறுகிறது. ஒரு தனிப்பட்ட நபராய் காணப்பட்டாலும், குடும்பமானாலும், ஊழியங்களானாலும் கர்த்தர் ஆசீர்வதிக்கும் போது நீங்கள் பெருக்கத்தைக் காண்பீர்கள். இதைத் தேவ ஜனங்கள் அறியவில்லை என்றாலும் சாத்தான் தெளிவாய் அறிந்திருக்கிறான். யோபுவைக் குறித்து தேவனுக்கு முன்பாகச் சாத்தான் கூறும் போது, யோபு விருதாவாகவா உமக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர், அவனுடைய சம்பத்துத் தேசத்தில் பெருகிற்று என்றான்.
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு, ஆண்டவர் இரண்டு விதமான பூமிக்குரிய ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார். முதலாவது நம்மைச் சுற்றிலும், நம்முடைய வாழ்க்கைத் துணைகளையும், பிள்ளைகளையும், ஆஸ்தி ஐசுவரியங்களைச் சுற்றிலும் வேலியடைத்துப் பாதுகாக்கிறார். பாதுகாப்பில்லாத ஆசீர்வாதத்தை ஆசீர்வாதம் என்று கூறவே முடியாது. ஐசுவரிய வான்களில் அனேகர், யுத்தங்கள், உள்நாட்டுக் குழப்பங்கள், மற்றும் இயற்கைச் சீற்றங்களின் நிமித்தம் ஒரே நாளில் எல்லாவற்றையும் இழந்து தெருவுக்கு வருகிறதைப் பார்க்க முடிகிறது. மணவாளனாகிய இயேசு, மணவாட்டியாகிய உங்களைக் குறித்து கூறும் போது, என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய் என்று உன். 4:12ல் கூறினார். ஆகையால் எப்பொழுதும் இயேசுவின் மணவாட்டியாய், பிள்ளைகளாய் காணப்படுவதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். இரண்டாவது, கர்த்தர் உங்கள் கரங்களின் கிரியைகளை ஆசீர்வதிக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்து கர்த்தர் கூறும் போது, ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய் (உபா. 28:12) என்பதாக. யோசேப்பு கையிட்டு செய்த வேலைகளையெல்லாம் ஆண்டவர் ஆசீர்வதித்ததை போத்திபாரின் கண்கள் கண்டது. யாக்கோபின் கரங்களின் கிரியைகளைக் கர்த்தர் ஆசீர்வதித்ததை லாபானுடைய கண்கள் கண்டது. நீங்கள் கையிட்டுச் செய்கிற வேலைகளை ஆண்டவர் ஆசீர்வதிக்கும் போது உங்கள் ஆசீர்வாதம் பெருகும், நீங்கள் இடம் கொண்டு பெருகுவீர்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளே, இஸ்ரவேலை ஆசீர்வதிப்பது கர்த்தருக்குப் பிரியம் என்று எழுதியிருக்கிறதைப் போல உங்களை ஆசீர்வதிப்பது கர்த்தருக்குப் பிரியம். உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான். ஆகையால் நீங்கள் உண்மையோடும், உத்தமத்தோடும், நேர்மையாகவும் ஜீவிக்கும் போது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்கள் சம்பத்துகள் குறையாமல் காத்து, உங்களைப் பெருகப்பண்ணுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae