மூன்று சாட்சிகள் (Three witnesses).

1 யோவா 5:7,8 [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/z3SyCQE8Mx8

நீதிமன்றத்திலிருக்கும் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் சரியான சாட்சிகள் இருக்கிறதா என்று சோதித்துப்பார்ப்பார்கள். பழைய ஏற்பாட்டில் இரண்டு மூன்று சாட்சிகள் வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலைசெய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலைசெய்யப்படலாகாது என்று உபா 17:6 கூறுகிறது. இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே என்று இயேசுவும் பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டவைகளை யோவான் 8:17ல் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது (1 தீமோ 5:19) என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதுபோல பரலோகத்தில் மூன்றுபேர் சாட்சிகொடுக்கிறார்கள். பிதாவாகிய தேவன், வார்த்தையாகிய இயேசுகிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர் இவர்கள் மூன்றுபேரும் ஒன்றாய் இருக்கிறார்கள். இயேசு சொன்னார் நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறார் என்றார் (யோவா 8:18). இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் (மத் 17:5) என்று இயேசுவை குறித்து பிதாவாகிய தேவன் சாட்சிகொடுத்தார். அதுபோல இயேசுவும் சத்திய ஆவியாகிய தேற்றரவாளனை குறித்து அவர் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள் என்று சாட்சிகொடுத்தார்.

பூலோகத்தில் சாட்சியிடுகிறவைகள், ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது என்று வசனம் கூறுகிறது. முதலாவதாக, இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர் (1 யோவா 5:6) என்ற வசனத்தின்படி, ஆவியானவர் சாட்சிகொடுக்கிறார். இன்றும் அவருடைய பிரதானமான வேலை இயேசுவை குறித்து ஜனங்களுக்கு சொல்லிக்கொண்டே இருப்பதாய் காணப்படுகிறது.

இரண்டாவதாக, ஜலம் அதாவது தண்ணீர் இந்த பூவுலகில் சாட்சிகொடுக்கிறது. இயேசு சொன்னார், நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார் (யோவா 4:14). இந்த ஜீவத்தண்ணீரை ஆண்டவர் எல்லாருக்கும் இலவசமாக கொடுக்கிறார். ஆண்டவர் இந்த தண்ணீர் மூலமாக தூய்மையான, பிரகாசமான, புதிய, வீரியம் மிக்க ஒரு புதிய இயல்பை மனிதனில் உருவாக்குகிறார்.

மூன்றாவதாக, இந்த பூவுலகில் சாட்சியிடுபவை இரத்தம். மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது. இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு இல்லை. இயேசுவின் இரத்தம் இன்றும் இந்த பூவுலகில் வாழும் ஜனங்களை பாவத்திலிருந்து சாபத்திலிருந்து விடுதலைகொடுத்து இரட்சிப்பை கொடுக்கிறதாய் காணப்படுகிறது.

இயேசுவின் இரத்தத்தால் மன்னிக்கப்படுவதை நம்புகிறவர்கள் தண்ணீரால் சுத்திகரிக்கப்படுவதையும் நம்புகிறார்கள்; இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்குள்ளாக இருப்பவர்கள் எப்பொழுதும் பரிசுத்த ஆவிக்கு இடம்கொடுக்கிறார்கள். ஆண்டவர் இந்த மூன்றையும் ஒன்றாக இணைத்தார், யாரும் அவற்றைப் பிரிக்கக்கூடாது. இந்த மூன்று சாட்சிகளே, நாம் நித்தியத்திற்கு நேராக அழைத்துசெல்லுவதற்கு முக்கியமான காரணிகளாக காணப்படுகிறது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org