பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள் (எண். 14:4).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/zSSdiNz1zmc
எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் இரண்டு வருஷத்திற்குள்ளாக கானானின் எல்லையில் வந்து விட்டார்கள். கர்த்தருடைய வார்த்தையின்படி தேசத்தைச் சுற்றிப் பார்க்கக் கோத்திரத்திற்கு ஒருவராகப் பன்னிரண்டு பேரை மோசே அனுப்பினான். அவர்கள் தேசம் எப்படிப்பட்டது, பட்டணங்கள் எப்படிப்பட்டது, தேசத்தின் குடிகள் எப்படிப்பட்டவர்கள், செழுமையானதோ இல்லையோ என்றும், தேசத்தின் கனிகளில் சிலவற்றை கொண்டுவரும் படிக்குக் கட்டளையிட்டு அனுப்பினான். அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து நாற்பதுநாட்கள் சென்றபின் திரும்பி வந்தார்கள். வந்து கானான் தேசம் குடிகளை பட்சிக்கிற தேசம் என்றும், அங்கே காணப்படுகிற ஜனங்கள் பலவான்கள் என்றும், ராட்சதர்களையும் கண்டோம் என்றும், அவர்களை மேற்கொள்ள முடியாது என்ற அவ்விசுவாசத்தின் துர்செய்தியை ஜனங்களுக்குள் பரப்பினார்கள்.
அந்த துர்செய்தி செய்து சுமார் இருபது முதல் முப்பது லட்சம் ஜனங்களுக்குள் துரிதமாய் பரவிச் சென்றது. ஆகையால் சபையார் எல்லாரும் கூக்குரலிட்டு அழுது புலம்பினார்கள். எல்லாரும் என்ற வார்த்தையானது எண். 14:1, 14:2, 14:10 என்ற வசனங்களில் திரும்பத்திரும்ப எழுதப்பட்டிருக்கிறது. ஆண்டவரின் பேரில் அவ்விசுவாசம் கொண்டவர்கள் சொற்ப ஜனங்கள் அல்ல, அல்லது சிறிய பெரும்பான்மையும் அல்ல, யோசுவா, காலேப், மோசே, ஆரோன் மற்றும் ஒரு சிலரைத் தவிர எல்லாருக்குள்ளும் அவ்விசுவாசம் காணப்பட்டது. ஆகையால் விட்டு வந்த எகிப்திற்குத் திரும்பிச் செல்வதற்கும் ஆயத்தமானார்கள். தேவன் அவர்கள் தலைவராய் இருப்பதைத் தள்ளிவிட்டு, அவரால் ஏற்படுத்தப்பட்ட மோசே தலைவனாயிருப்பதையும் விரும்பாமல், வேறொரு தலைவனை ஏற்படுத்திக் கொண்டு எகிப்திற்குத் திரும்ப விரும்பினார்கள். எகிப்தின் அடிமைத் தனம் என்னும் நுகத்தடியை தங்கள் மேல் மீண்டும் ஏற்றுக் கொண்டு, பார்வோன் என்ற பிசாசிற்கு அடிமைகளாகவே வாழ விரும்பினார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளே நற்செய்தியை விட, துர்செய்தி அதிவேகமாகப் பரவும், ஆகையால் துர்செய்தியை பரப்புகிற கூட்டத்தில் ஒரு நாளும் காணப்படாதிருங்கள். நீங்கள் பரப்புகிற துர்செய்தி ஜனங்களுக்குள் அவிசுவாசத்தைக் கொண்டு வரும். அதின் விளைவு இஸ்ரவேல் சபை நாற்பது வருஷங்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிய வேண்டியதாயிருந்தது. இருபது வயதிற்கு மேற்பட்ட அவ்விசுவாசம் கொண்ட எல்லாருடைய பிரேதங்களும் வனாந்தரத்தில் விழுமட்டும் அங்கே காணப்பட்டார்கள் என்று வேதம் கூறுகிறது. அவ்விசுவாச வார்த்தைகள் ஆத்துமாவில் மரணத்தைக் கொண்டு வந்து விடும் என்பதை மறந்து போகாதிருங்கள். அதுபோல விட்டு வந்த பாவ பழக்க வழக்கங்களுக்கு நேராக ஒரு நாளும் திரும்பிச் சென்று விடாதிருங்கள். எகிப்து எப்போதும் கவர்ச்சிக்கும், உலகம் உங்களை பின்னுக்கு இழுக்கும், பாவம் என்னும் அடிமைத்தனத்திற்குள் உங்களை மீண்டும் கொண்டு செல்ல சத்துரு எப்போதும் கண்ணிகளை வைப்பான். ஆகையால் ஜாக்கிரதையோடு முன்னேறிச் செல்லுங்கள். கலப்பையின் மேல் கைவைத்த பின்பு பின்னிட்டுப் பார்க்கிறவன், பரலோக ராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவன் அல்ல. ஆகையால் கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்ற விசுவாசத்தோடு முன்னேறிச் செல்லுங்கள், பரம கானானைச் சுதந்தரியுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae