மாரநாதா – கர்த்தர் வருகிறார் (Maranatha – The LORD is coming).

வெளி 22:20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/WHhD-znrkd0

வேதாகமத்தின் இறுதி ஜெபம் கர்த்தராகிய இயேசுவே, வாரும் என்பதாய் காணப்படுகிறது. இந்த ஜெபம் மனம் மகிழ்ந்து அடிக்கடி ஏறெடுக்க கூடிய ஜெபமாய் நம்முடைய வாழ்க்கையில் காணப்பட வேண்டும். பரிசுத்தத்தோடு, தாழ்மையோடு, தேவன் விரும்புகிற வாழ்க்கை வாழ்கிறவர்கள் தான் மகிழ்ச்சியோடு இந்த ஜெபத்தை ஏறெடுக்க முடியும். அநேகருக்கு இயேசுவின் வருகை என்றாலே பயம். காரணம், அவருடைய வருகையில் கைவிடப்பட்டுப்போனால் என்ன ஆவது என்றும், புத்தியில்லாத ஸ்திரீகளாய் நாம் இருந்தால் என்ன செய்வது என்ற அச்சமும்,கவலையும் அநேகருக்கு காணப்படுகிறது. நாம் ஆண்டவருடைய வருகையை எதிர்பார்க்கிற ஜனங்களாக காணப்படவேண்டும். காரணம் இயேசு திரும்ப வரும்போது நமக்கு அநேக பரிசுகளையும், நித்திய உறவையும் கொடுக்கப்போகிறார். இந்நாட்களில் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட மணவாளிக்கு, மணவாளன் தொலைபேசியோ, மோதிரமோ, வேறெந்த பொருளையோ, பரிசுகளாக வாங்கிக்கொடுக்கிற பழக்கம் அநேகருக்கு காணப்படுகிறது. அதுபோலத்தான், நம்முடைய மணவாளனாகிய இயேசு வரும்போது நமக்கு அநேக பரிசுகளை கொண்டுவருவார்.

நமக்கு கிடைத்திருக்கும் இரட்சிப்பு கர்த்தருடைய கிருபையால் நமக்கு கிடைத்தது. ஆனால் நமக்கு கிடைக்கப்போகும் பரிசுகள் அதாவது பிரதிபலன் (Rewards), நம்முடைய கிரியைகளினால் மாத்திரமே நமக்கு கிடைக்கும் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ளவேண்டும். நாமெல்லாரும் மனிதர்களிடம் எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பார்க்கக்கூடாது; நன்றி என்ற பிரதிபலனைக்கூட மனிதர்களிடமிருந்து எதிர்பார்க்கக்கூடாது. அப்படி எதிர்பார்த்தால், அநேக வேளைகளில் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஆகையால், நமக்கு வேண்டிய பிரதிபலனை, பரிசுகளை ஆண்டவரிடம் மாத்திரமே நாம் எதிர்பார்க்க வேண்டும். அவர் வரும்போது நம்முடைய கிரியைகளின் அளவின்படி நமக்கு பிரதிபலனை கொடுக்கப்போகிறார்.

வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.
நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டுவிருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும். அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார் என்று சங் 96:11-13 வசனங்கள் கூறுகிறது. ஆதிகாலத்தில் கிறிஸ்துவர்களின் வாழ்த்துச்சொல் மாரநாதா கர்த்தர் வருகிறார் என்று சொல்லுவார்களாம். இயேசுவின் வருகையை ஆவலோடு எதிர்பார்ப்பவர்களுக்கு, இந்த உலகத்தில் காணப்படும் அநித்தியமான சந்தோஷம் ஒன்றும் கவர்ச்சிக்கிறதாய் காணப்படாது. இயேசுவின் வருகை எந்த நொடியிலும், எந்த விநாடியிலும் சம்பவிக்கலாம். ஆகையால், அவருடைய வருகைக்கு எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிற புத்தியுள்ள கன்னிகைகளாக நாம் காணப்படவேண்டும்.

நம்முடைய ஆண்டவராகிய இயேசு சீக்கிரம் வரப்போகிறார். நாமெல்லாரும் அவரோடு மகிழ்ந்திருக்கப்போகிறோம். காரணம் கண்ணீரும் துக்கமும் நிறைந்த இந்த பழைய பூமி பழைய வானத்தை கடந்து, நீதி வாசம்பண்ணும் புதிய பூமி புதிய வானத்தில் நாம் மகிழப்போகிறோம். அங்கே கண்ணீர் இல்லை, கவலை இல்லை; மகிழ்ச்சியும் சந்தோஷமும் மாத்திரமே காணப்படும். ஆகையால் இயேசுவின் வருகையை குறித்து பயப்படுகிறவர்களாக அல்ல; மகிழ்ந்து களிகூருகிறவர்களாக நாம் காணப்படவேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு அவர்கொடுக்கும் கடைசி ஆசிர்வாதம், கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக என்பதே (வெளி 22:21).

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org